சென்னை லைட் ஹவுஸ் முதல் அடையாறு திருவிக பாலம் வரை 4 கி.மீ. உயர்மட்ட மேம்பாலம்! டெண்டர் கோரிய அரசு..
லைட் ஹவுஸ் முதல் அடையாறு திருவிக பாலம் வரை சுமார் 4 கிலோமீட்டர் தூரத்திற்கு உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதற்கான திட்டத்தை அரசு முன்னெடுத்துள்ளது. இந்தத் திட்டத்தின் சாத்தியக்கூறுகள், கட்டுமான வடிவமைப்பு மற்றும் மதிப்பீடு உள்ளிட்ட அம்சங்களை ஆய்வு செய்து விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிப்பதற்காக டெண்டர் கோரப்பட்டுள்ளது.
அக்டோபர் 22, 2026: சென்னையில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், லைட் ஹவுஸ் முதல் அடையாறு திருவிக பாலம் வரை சுமார் 4 கிலோமீட்டர் தூரத்திற்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்கத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிப்பதற்கு நெடுஞ்சாலைத் துறையின் சென்னை நகரச் சாலைகள் பிரிவு டெண்டர் கோரியுள்ளது.
பீக் ஹவர்களில் கடும் போக்குவரத்து நெரிசல்!
சென்னையின் முக்கியப் போக்குவரத்து வழித்தடங்களில் ஒன்றாக லைட் ஹவுஸ் முதல் அடையாறு வரையிலான பகுதி அமைந்துள்ளது. இந்த வழித்தடம் நகரின் பல்வேறு முக்கியப் பகுதிகளை இணைப்பதால், தினமும் ஏராளமான வாகனங்கள் இந்தச் சாலையைப் பயன்படுத்தி வருகின்றன.
மேலும் படிக்க: மழைக்கான ஹாட்ஸ்பாட்டாக மாறும் தென் தமிழகம்.. எங்கெல்லாம் மழை இருக்கும்? வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு..
குறிப்பாக, அலுவலக நேரங்களான காலை மற்றும் மாலை வேளைகளில் இந்தப் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் மட்டுமின்றி பொதுமக்களும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதற்கிடையே, சென்னையின் பல்வேறு பகுதிகளில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடைபெற்று வருவதால், சில வழித்தடங்களில் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரித்து வருகிறது.
4 கி.மீ. தூரத்திற்கு உயர்மட்ட மேம்பாலம்!
இந்தச் சூழலில், லைட் ஹவுஸ் முதல் அடையாறு திருவிக பாலம் வரை சுமார் 4 கிலோமீட்டர் தூரத்திற்கு உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதற்கான திட்டத்தை அரசு முன்னெடுத்துள்ளது. இந்தத் திட்டத்தின் சாத்தியக்கூறுகள், கட்டுமான வடிவமைப்பு மற்றும் மதிப்பீடு உள்ளிட்ட அம்சங்களை ஆய்வு செய்து விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிப்பதற்காக டெண்டர் கோரப்பட்டுள்ளது.
ரூ.38.10 லட்சம் மதிப்பில் திட்ட அறிக்கை தயாரிப்பு!
விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிக்கான மதிப்பீடு ரூ.38 லட்சத்து 10 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை மேற்கொள்ள ஒப்பந்ததாரர்களுக்கு 60 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. டெண்டரில் பங்கேற்க விரும்பும் ஒப்பந்ததாரர்கள் முன்வைப்புத் தொகையாக ரூ.29,500 செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான ஒப்பந்ததாரர்கள் இந்தப் பணிக்கான டெண்டரில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: இன்ஸ்டாகிராம் பிரபலம் ஹரிஷ் தற்கொலை வழக்கில் யூடியூபர் ஜேசன் சாமுவேல் கைது! தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை
இந்தத் திட்டம் அடுத்தகட்டத்திற்கு முன்னேறி, உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டால், மெரினா கடற்கரைச் சாலை மற்றும் லைட் ஹவுஸ் முதல் அடையாறு வரையிலான வழித்தடங்களில் நிலவும் போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, அதன்பிறகு மேற்கொள்ளப்படும் முடிவுகளைப் பொறுத்தே மேம்பாலக் கட்டுமானத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் அமையும்.