சென்னையில் தொடரும் மழை.. பிற மாவட்டங்களில் எப்படி? வானிலை ரிப்போர்ட் இதோ..
Tamil Nadu Weather Update: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொற்த்தவரையில் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டாலும், மாலை நேரங்களில் வெப்ப சலனம் காரணமாக நகரின் அனேக பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை நிலவரம், ஜூலை 5, 2025: 2025 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழையானது முன்கூட்டியே தொடங்கியுள்ளது. வழக்கமாக தென்மேற்கு பருவம் மழை என்பது ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை இருக்கும். ஆனால் 2025 ஆம் ஆண்டு மே மாதமே இந்த தென்மேற்கு பருவமழையானது தொடங்கியது. இதன் காரணமாக தமிழகத்தின் அநேக மாவட்டங்களில் நல்ல மழை பதிவு இருந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக மாலை நேரங்களில் வெப்ப சலனம் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை ஆங்காங்கே பதிவாகி வருகிறது. அந்த வகையில் ஜூலை 4, 2025 ஆம் தேதியான நேற்று இரவு சென்னை மற்றும் நகரின் அனேக பகுதிகளில் கனமழை பதிவானது. சென்னை கிண்டி, ஆலந்தூர், ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், வேளச்சேரி, மேடவாக்கம், பள்ளிக்கரணை, ஈக்காட்டுத்தாங்கல், கே கே நகர், வடபழனி, தேனாம்பேட்டை, அண்ணா சாலை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பதிவானது.
கோவை, நீலகிரிக்கு கனமழை எச்சரிக்கை:
தமிழகத்தை பொறுத்தவரை மேற்கு திசை காற்றில் வேகமாறுபாடு காரணமாக ஜூலை 5 2025 தேதியான இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஜூலை 10 2025 வரை ஒரு சில இடங்களில் மிதமான மழை மட்டுமே இருக்கக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையில் மழைக்கு வாய்ப்பா?
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) July 4, 2025
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் காலைப் பொழுதில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் அதிகபட்ச வெப்பநிலை என்பது 37 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை:
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தமிழகத்தில் மதுரையில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து தூத்துக்குடியில் 38.2 டிகிரி செல்சியஸும், திருத்தணியில் 37.5 டிகிரி செல்சியஸும், பாளையங்கோட்டையில் 37.8 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது. சென்னை பொருத்தவரையில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 37.1 டிகிரி செல்சியஸும் நுங்கம்பாக்கத்தில் 36.2° செல்சியஸும் வெப்பநிலை பதிவாகியுள்ளது. வெப்ப சலனம் காரணமாக மழை இருந்தாலும் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்தே காணப்படுகிறது.