ஆயுத பூஜை விடுமுறை எதிரொலி.. சென்னையில் மின்சார ரயில் சேவையில் மாற்றம்!
Chennai EMU Train Service: அக்டோபர் 16 மற்றும் 17 ஆகிய இரண்டு நாட்களிலும் சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6.44 மணிக்கும், இரவு 7.10 மணிக்கும் புறப்படும் குறிப்பிட்ட மின்சார ரயில்கள் கூடுவாஞ்சேரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளன. எனவே இந்த வழித்தடத்தைப் பயன்படுத்தும் பயணிகளுக்கு கூடுதல் வசதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அக்டோபர் 16, 2026: ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு தொடர் விடுமுறை வர உள்ள நிலையில், சென்னையில் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அக்டோபர் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும் குறிப்பிட்ட மின்சார ரயில்கள் கூடுவாஞ்சேரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.
சென்னையில் மின்சார ரயில் சேவை
சென்னையில் பொதுப் போக்குவரத்தில் மின்சார ரயில் சேவை முக்கியப் பங்கு வகிக்கிறது. வேலைக்குச் செல்பவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், வணிகர்கள் என தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் மின்சார ரயில்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.
குறிப்பாக, சென்னை கடற்கரை முதல் தாம்பரம், செங்கல்பட்டு வரையிலான வழித்தடத்தில் இயக்கப்படும் மின்சார ரயில்கள், புறநகர்ப் பகுதிகளில் இருந்து சென்னைக்கு வருபவர்களுக்கு முக்கியப் போக்குவரத்து வசதியாக உள்ளன. சென்னை கடற்கரை, எழும்பூர், மாம்பலம், கிண்டி, பல்லாவரம், தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு ரயில் நிலையங்கள் வழியாக இந்தச் சேவை இயக்கப்படுகிறது.
மேலும் படிக்க: மதுரை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. 25 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை..
பயணிகளின் தேவைக்கு ஏற்பவும், பராமரிப்புப் பணிகள் காரணமாகவும் அவ்வப்போது ரயில் கால அட்டவணையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகைக் காலங்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால், அவர்களின் வசதிக்காகக் கூடுதல் ரயில்களும் இயக்கப்படுகின்றன.
கூடுவாஞ்சேரி வரை ரயில் சேவை நீட்டிப்பு
இந்த நிலையில், அக்டோபர் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட உள்ளன. இதனைத் தொடர்ந்து வரும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, சென்னையில் இருந்து பலரும் தங்களது சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர். இதையடுத்து, சென்னை புறநகர் ரயில் சேவையில் குறிப்பிட்ட மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க: பொதுமக்களுக்கு குட் நியூஸ்!.. மலிவு விலையில் மளிகைப் பொருட்கள் விற்பனை.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!
அதன்படி, அக்டோபர் 16 மற்றும் 17 ஆகிய இரண்டு நாட்களிலும் சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6.44 மணிக்கும், இரவு 7.10 மணிக்கும் புறப்படும் குறிப்பிட்ட மின்சார ரயில்கள் கூடுவாஞ்சேரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளன. மேலும், அதே இரண்டு நாட்களில் கூடுவாஞ்சேரியில் இருந்து தாம்பரம் நோக்கி இரண்டு சிறப்பு ரயில்களும் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாகத் தாம்பரம் வரை இயக்கப்படும் குறிப்பிட்ட ரயில் சேவைகள், தற்போது கூடுவாஞ்சேரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், இந்த வழித்தடத்தைப் பயன்படுத்தும் பயணிகளுக்கு கூடுதல் வசதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.