Guru Peyarchi 2025: இனி முன்னேற்றம் தான்.. மகர ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள்!

மே 11 அல்லது 14ம் தேதி நடைபெறும் குரு பெயர்ச்சி மகர ராசிக்கு மன அமைதி, குடும்ப ஒற்றுமை, குழந்தைகளின் கல்வி முன்னேற்றம், திருமண யோகம் போன்றவற்றைத் தரும். ஆனால் தேவையற்ற செலவுகள், உறவுகளில் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. வேலை, தொழில், கல்வி என அனைத்து துறைகளிலும் கவனம் தேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Guru Peyarchi 2025: இனி முன்னேற்றம் தான்.. மகர ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள்!

மகர ராசிக்கான பலன்கள்

Published: 

10 May 2025 12:40 PM

குரு பெயர்ச்சி மகர ராசிக்கு என்ன மாதிரியான பலன்களை கொடுக்கப் போகிறது என்பது பற்றி நாம் இங்கு காணலாம். மே 11ம் தேதி மற்றும் மே 14 ஆம் தேதி என இரு தேதிகளில் குரு பெயர்ச்சி நடப்பதாக வாக்கிய பஞ்சாங்கம் மற்றும் திருக்கணித பஞ்சாங்கம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எது எப்படியோ இந்த குரு பெயர்ச்சியில் குரு பகவான் உங்களுக்கு சுப பலம் பெற்று மிகவும் உதவிகரமாக சஞ்சரிக்க உள்ளார். இதனால் மனநிறைவு அமைதி மற்றும் மகிழ்ச்சி வாழ்க்கையில் அதிகமாக இருக்கும். குடும்ப விஷயத்தில் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி அன்பு பெருகும். கணவன் மனைவியரிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியாகும் நிலையில் அது உங்கள் ராசிக்கு புத்திர ஸ்தானமாக இருப்பதால் குழந்தைகளின் கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புகழ்பெற்ற கோயில்களுக்கு பயணம் மேற்கொள்ளும் சூழல் வரும்.

எதிர்காலத்திற்கு திட்டமிடுவது நல்லது

திருமணம் முயற்சிகள் வெற்றிகரமாக கைகூடும். கருத்தரிக்கும் யோகம் அமையும். வெளியூர் பயணங்கள் அலைச்சலாக இருந்தாலும் வெற்றிகரமாகவே அமையும். அதேசமயம் தேவையற்ற செலவுகள் உண்டாவதற்கான சூழல் அமையும். எனவே கவனமுடன் பணம் விஷயத்தில் செயல்படவும். மேலும் உறவினர்கள் நண்பர்களுடன் பகை உண்டாகுவதற்கான வாய்ப்பு உள்ளது. முடிந்த வரையில் எதிர்காலத்திற்கு நன்மை பயக்கும் வகையில் சேமிப்பு தொடங்கி அனைத்து விஷயங்களிலும் செயல்பட வேண்டும்.

உத்தியோகத்தை பொருத்தவரை மகர ராசிக்கு ஏழரை சனியின் கடைசி பகுதி நடைபெறுகிறது. இந்த நேரத்தில் குரு பெயர்ச்சி நடைபெற்றவுடன் குரு பகவான் மிதுன ராசியில் இருந்து ஒன்பதாம் பார்வையாக கும்ப ராசியில் சனிபகவானையும் ராகுவையும் பார்ப்பதால் அலுவலகத்தில் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி நல்ல முன்னேற்றம் உண்டாகும். இதுவரை கைக்கு வராமல் இருந்த சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்ற தகவல்கள் கிடைக்கும்.

முன்னேற்றத்தையும் லாபத்தையும் குறிக்கும்

புதிய வேலைக்கு முயற்சி செய்து வந்தால் அதற்கான வாய்ப்பு கிட்டும். வெளிநாடு செல்ல விருப்பம் இருப்பவர்கள் இந்த காலகட்டத்தில் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.தொழிலைப் பொறுத்தவரை அக்டோபர் 8ம் தேதி குரு பகவான் சப்தம ஸ்தானத்திற்கு மாறுகிறார். இது நல்ல முன்னேற்றத்தையும் லாபத்தையும் குறிக்கும் வகையில் அமைவதாகும். அதேசமயம் அதற்கு முன்னால் வரை வியாபாரத்தில் சிறிது சறுக்கலை சந்திக்க நேரிடும். சந்தையில் நிலவும் நியாயமற்ற போட்டிகள் காரணமாக இந்த பிரச்சனை உண்டாகலாம். திட்டமிட்டு செலவு செய்வது அவசியம் இல்லாவிட்டால் பணம் நெருக்கடி உண்டாகலாம்.

கலைத்துறையில் சாதிக்க விரும்புபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் குரு பெயர்ச்சியால் கிடைக்கப் போகிறது. அலைச்சல் இருந்தாலும் சரியான சந்தர்ப்பம் கிடைக்கும் என்பதால் நம்பிக்கையுடன் செயல்படுங்கள். அதேசமயம் உடல் நலத்திலும் கவனம் தேவை. அரசியலில் இருப்பவர்கள் உங்கள் பேச்சில் கவனமாக இருப்பது மிகவும் நல்லதாகும். இந்த ஆண்டு முடியும் வரை மேடைகளில் உணர்ச்சிவசப்பட்டு பேசுவதை சற்று குறைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்

குரு பெயர்ச்சியால் கல்வியில் ஒரு பகவான் ஓரளவு சாதகமாகவே மாணவ மாணவியர்களுக்கு உள்ளார். இதனால் முடிந்தவரை பாடங்களில் அதிக கவனம் எடுத்து படிக்க வேண்டும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களை பெறும் வேளையில் கவனத்தை எக்காரணம் கொண்டும் சிதற விடாதீர்கள். உயர்கல்வி பயில்வோர் வெளிநாடு செல்ல வேண்டுமென்றால் இந்த காலகட்டத்தில் அதற்கான முயற்சிகளில் ஈடுபடும் போது வெற்றி கிட்டும்.

(ஜோதிட நம்பிக்கையின்படி இந்த கட்டுரையானது எழுதப்பட்டுள்ளது. இதில் சொல்லப்பட்டுள்ள தகவல்களுக்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)