Sani Prathosam: சனிப்பிரதோஷத்தில் இப்படி வழிபட்டால் பலன்கள் ஏராளம்!

2025 மே மாதத்தில் வரும் இரண்டு பிரதோஷ தினங்களும் சனிக்கிழமையில் வருவது மிகவும் சிறப்பானதாக உள்ளது. பிரதோஷம் என்பது சிவபெருமான் மற்றும் பார்வதி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாளாகும். சனிக்கிழமை பிரதோஷம் மிகவும் சக்திவாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த நாளில் சிவ, பார்வதி வழிபாடு செய்வதால் வாழ்வில் மகிழ்ச்சி, செல்வம், வியாபார வளர்ச்சி கிடைக்கும் என நம்பப்படுகிறது.

Sani Prathosam: சனிப்பிரதோஷத்தில் இப்படி வழிபட்டால் பலன்கள் ஏராளம்!

சனிப்பிரதோஷம்

Updated On: 

10 May 2025 10:45 AM

இந்து மதத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு வளர்பிறை மற்றும் தேய்பிறையில் வரும் ஒவ்வொரு திதியும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அந்த வகையில் திரயோதசி திதியில் பிரதோஷம் கொண்டாடப்படுகிறது. இந்நாள் சிவன் மற்றும் பார்வதிக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாளாக பார்க்கப்படுகிறது. மற்ற நாட்களில் சிவனுக்கு மட்டுமே அனைத்து விதமான வழிபாடுகளும் நடக்கும் நிலையில் பிரதோஷ நாளில் அவரின் வாகனமான நந்தி பகவானுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். 2025 ஆம் ஆண்டு மே மாதம் வரும் 2 பிரதோஷ தினங்களும் சனிக்கிழமையில் வருவது மிகவும் விசேஷமாகும்.

ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நாளில் பிரதோஷம் வந்தாலும் சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் சக்தி வாய்ந்ததாக சிவ பக்தர்களிடையே கருதப்படுகிறது. இந்த பிரதோஷ நாளில், சிவபெருமானையும் பார்வதி தேவியும் ஒன்றாக வழிபட்டால் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும், செல்வ வளம் பெரும், வியாபாரம் செழிக்கும் என நம்பிக்கை உள்ளது.

2025ம் ஆண்டு மே மாதம் 10 ஆம் தேதியான இன்று சனிப்பிரதோஷம் கொண்டாடப்படுகிறது. ஆனால் திரயோதசி திதி மே 9 ஆம் தேதி பிற்பகல் 2:56 மணிக்கு தொடங்கி மே 10 ஆம் தேதி மாலை 5:29 மணிக்கு முடிவடைகிறது.சூரிய உதயத்தை கணக்கிடும்போது மே மாதம் 10 ஆம் தேதி சனிப்பிரதோஷமாக கடைபிடிக்கப்படுகிறது. பொதுவாக பிரதோஷ காலம் என்றாலே மாலை 4.30 மணி முதல் 6 வரை உள்ள காலமாகும்.

இந்நேரத்தில் அருகில் பிரதோஷ வழிபாடு நடைபெறும் ஏதேனும் ஒரு கோயிலுக்கு சென்று அங்கு அபிஷேகத்துக்கு உங்களால் முடிந்த பொருள்கள் வழங்கலாம். அல்லது வழிபாட்டில் மட்டுமாவது கலந்து கொண்டால் புண்ணியம் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

பிரதோஷ வழிபாடு முறை

பிரதோஷ விரத நாளில் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு சுத்தமான ஆடைகளை அணிய வேண்டும். வீட்டின் பூஜையறையைச் சுத்தம் செய்து கங்கை நீர் அல்லது ஏதேனும் அருகிலும் புண்ணிய நதிகளின் நீரை தெளிக்க வேண்டும். எதுவும் கிடைக்காவிட்டால் தண்ணீரில் மஞ்சள் பொடியை கலந்து தெளிக்கலாம். ஒரு மனை அமைத்து அதில் சிவன் மற்றும் பார்வதியுடன் நந்தியின் சிலை அல்லது படத்தை வைக்கவும்.

பூஜை வழிபாட்டில் பழங்கள், பூக்கள், தூபங்கள், விளக்குகள், பிரசாதம், வில்வ இலைகள், தண்ணீர், பஞ்சாமிர்தம் போன்றவற்றை இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். விரதம் இருக்க நினைப்பவர்கள் சிவபெருமான், பார்வதி , நந்தி ஆகியோரை வணங்க வேண்டும். சிவலிங்கத்திற்கு நீரால் அபிஷேகம் செய்ய வேண்டும்.

தொடர்ந்து பஞ்சாமிர்தம் கொண்டு அபிஷேகமும் செய்யலாம். மேலும் சிவபெருமானுக்கு வில்வ இலைகள், பூக்கள், பழங்கள் மற்றும் பணம் ஆகியவற்றை வைக்க வேண்டும். தொடர்ந்து தூபம் மற்றும் விளக்குகளை ஏற்ற வேண்டும். தூபம் காட்டும்போது “ஓம் நம சிவாய” போன்ற சிவ மந்திரங்களை உச்சரிக்க வேண்டும். கடைசியாக பூஜையின் போது தெரிந்தோ தெரியாமலோ ஏதேனும் தவறு செய்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்ளலாம்.

பிரதோஷ விரதத்தின் முக்கியத்துவம்

பிரதோஷம் என்றால் குறைகளை அழிப்பவர் என்று பொருள். இந்த காலமானது ஆன்மீகக் கண்ணோட்டத்தில் இந்த நேரம் மிகவும் சக்திவாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த நேரத்தில், சிவபெருமான் கைலாய மலையில் ஒரு தாண்டவத்தை நிகழ்த்தி, தனது பக்தர்களின் அழைப்பை உடனடியாகக் கேட்பதாக நம்பப்படுகிறது. பிரதோஷ விரதத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம், ஒரு நபரின் வாழ்க்கையின் பாவங்கள் அழிக்கப்பட்டு, முக்திக்கான பாதை அமைக்கப்படுகிறது என்றும் புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதோஷ விரதத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் வாழ்க்கையில் ஏற்படும் தடைகள், நோய்கள், எதிரி பயம், கிரக தோஷங்கள் போன்ற பிரச்சனைகளிலிருந்து ஒருவர் நிவாரணம் பெறுவார் என நம்பப்படுகிறது.

(ஆன்மிக நம்பிக்கையின்படி இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)