திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்.. வழிபட்டால் இவ்வளவு நன்மைகளா?
முருகனின் ஆறுபடை வீடுகளில் காலை விஸ்வரூப தரிசனம் என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. இது கடவுளை நேரில் காணும் அரிய வாய்ப்பாக பக்தர்களால் கருதப்படுகிறது. இந்த தரிசனத்தால் துன்பங்கள் நீங்கி, செல்வம், வளம் பெருகும் என நம்பப்படுகிறது. அதனைப் பற்றி நாம் காணலாம்.

கடவுள் முருகன்
தமிழ் கடவுளாகிய முருகனுக்கு உலகமெங்கும் கோயில்கள் உள்ளது என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். வயது வித்தியாசம் இல்லாமல் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை முருகனின் பக்தர்களாக தற்காலத்தில் இருக்கிறார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அனைத்து விதமான சைவ சமய கோயில்களிலும் முருகனுக்கு என தனி சன்னதியே உள்ளது. அதேசமயம் தமிழ்நாட்டில் முருகனுக்கு ஆறு இடங்களில் கோயில்கள் உள்ளது. இவை பக்தர்களால் அறுபடை வீடு என அழைக்கப்படுகிறது. இத்தகைய முருகன் கோயில்களில் அதிகாலையில் நடைபெறும் முதல் தரிசனத்திற்கு விஸ்வரூப தரிசனம் என்று பெயர். சில இடங்களில் விஸ்வரூப தரிசனம் என தெரிவித்து இருப்பார்கள். சில கோயில்களில் திருவனந்தல் என குறிப்பிடப்பட்டிருக்கும். இப்படியான நிலையில் இந்த முருகன் கோயிலில் நடைபெறும் விஸ்வரூப தரிசனத்தை கண்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம்.
விஸ்வரூப தரிசனம்
சாஸ்திரத்தை பொறுத்தவரை திருமஞ்சனம் என்ற வார்த்தை கடவுள் சிலைகளுக்கு நீராட்டும் வைபவத்தை குறிப்பதாகும். இத்தகைய திருமஞ்சனத்திற்கு முன்னதாக முந்தைய நாள் அவரின் அலங்காரத்தில் தரிசிப்பது தான் விஸ்வரூப தரிசனம் ஆகும். மற்ற நேரங்களில் வழிபாடுகளில் அலங்காரங்களில் நாம் கடவுளை தரிசனம் செய்வோம்.
ஆனால் இந்த விஸ்வரூப தரிசன நேரத்தில் கடவுள் நம்மை காண்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. அதாவது முந்தைய நாள் இரவு நடை சாற்றப்பட்டு காலையில் நடை திறக்கப்பட்டவுடன் திரை விளக்கப்படும் அப்போது என்னை காண யாரெல்லாம் வந்திருக்கிறார்கள் என இறைவன் பார்ப்பதாகவும் இதன் மூலம் அவரது அருள்பார்வை நேரடியாக நமக்கு கிடைக்கும் என்பதும் ஐதீகமாக உள்ளது.
இதனால்தான் அதிகாலை தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அனைத்து கோயில்களிலும் அலை மோதுகிறது. இறைவனின் பார்வை நேரடியாக கிடைப்பதால் நம் வாழ்க்கையில் உள்ள துன்பங்கள் அனைத்தும் நீங்கி இன்பம் பிறக்கும் என்பது நம்பிக்கையாகும். தேவர்களுக்கு தான் யார் என்பதை புரிய வைக்க முருகன் விஸ்வரூபமாக காட்சி தருவதே இதன் பின்னணியாகும்.
திருச்செந்தூரில் விஸ்வரூபம் எடுக்கும் முருகன்
முருகனின் இரண்டாம் படை வீடாக கருதப்படும் திருச்செந்தூரில் அதிகாலை 5 மணிக்கு நடைபெறும் விஸ்வரூப தரிசனத்தை காண ஏராளமான பக்தர்கள் நள்ளிரவு முதலே காத்துக் கிடப்பார்கள். இந்த நேரத்தின் போது வள்ளியம்மன் கோயிலில் செந்திலதிபன் சுப்ரபாதம் ஒலிக்கப்படும். இதனைத் தொடர்ந்து பள்ளியறை தீபாரதனையும் கருவறையில் மூலவருக்கு பூஜையும் நடைபெறும். அதன் பின் கொடி மரத்தடியில் பள்ளியறையில் இருந்த பாலும் கற்கண்டும் பக்தர்களுக்கு வழங்கப்படும்.
மேலும் திருச்செந்தூரில் அதிகாலை விஸ்வரூப தரிசன நேரத்தில் பக்தர்களுக்கு பன்னீர் இலை விபூதி பிரசாதம் கொடுப்பது வழக்கமாக உள்ளது. இந்த பன்னீர் இலை விபூதியானது நோய் தீர்க்கும் அருமருந்தாக பார்க்கப்படுகிறது. அதேசமயம் பழனியில் மூலவர் சிலை மீது பூசப்பட்ட சந்தனம் பக்தர்களுக்கு சிறு வில்லைகளாக மாற்றி பிரசாதமாக வழங்கப்படுகிறது . இதுவும் தீராத நோயையும் தீர்க்கும் என நம்பப்படுகிறது.
இந்த விஸ்வரூப தரிசனம் நாம் காணும் போது வாழ்க்கையில் கவலைகள் நீங்கி இன்பம் பிறக்கும் என்றும், செல்வ வளம் தொடங்கி அனைத்து வளங்களும் பெற்று சிறப்புடன் வாழ்வோம் எனவும் நம்பப்படுகிறது.
(ஆன்மிக அடிப்படையில் இந்த தகவலானது கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)