C.P.Radhakrishnan: மிகச்சிறந்த அங்கீகாரம்.. துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு குவியும் வாழ்த்து!

இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி, பாஜக தலைவர்கள், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சி.பி.ராதாகிருஷ்ணன் இந்த வெற்றியால் தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளதாகவும், அவரது சமூக சேவை, அர்ப்பணிப்பு போன்றவற்றைப் பாராட்டியும் பதிவிட்டு

C.P.Radhakrishnan: மிகச்சிறந்த அங்கீகாரம்.. துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு குவியும் வாழ்த்து!

சி.பி.ராதாகிருஷ்ணன்

Published: 

09 Sep 2025 21:42 PM

 IST

இந்தியத் துணைக் குடியரசுத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ள நிலையில் அவருக்கு பிரதமர் மோடி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்திய துணை குடியரசு தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து அந்த இடத்திற்கு செப்டம்பர் 9ஆம் தேதியான இன்று தேர்தல் நடைபெற்றது. பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மகாராஷ்டிரா ஆளுநராக பணியாற்றி வந்த சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டிருந்தார். அதேபோல் எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி சார்பில் உச்சநீதிமன்றம் முன்னாள் நீதிபதி சுதர்சன ரெட்டி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார்.

வாக்கெடுப்பில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதில் சி.பி.ராதாகிருஷ்ணன் 452 வாக்குகளும், சுதர்சன் ரெட்டி 300 வாக்குகளும் பெற்றனர், இதன் மூலம் 152 வாக்குகள் வித்தியாசத்தில்  சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்று இந்தியாவின் புதிய துணை குடியரசுத் தலைவராக விரைவில் பதவி ஏற்க உள்ளார். தமிழ்நாட்டில் இருந்து மூன்றாவது நபராக இந்த பதவிக்கு இவர் செல்ல உள்ளார்.

இதனால் தமிழகம் முழுவதும் பாஜக தொண்டர்கள் மற்றும் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சித் தலைவர்கள் பலரும் சிபி ராதாகிருஷ்ணனுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

பிரதமர் மோடி வாழ்த்து

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், “2025 துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். அவரது வாழ்க்கை எப்போதும் சமூகத்திற்கு சேவை செய்வதற்கும் ஏழைகள் மற்றும் ஓரங்கட்டப்பட்டவர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அவர் நமது அரசியலமைப்பை வலுப்படுத்தும் ஒரு சிறந்த துணைத் தலைவராக இருப்பார் என்று நான் நம்புகிறேன்: என கூறியுள்ளார்.

தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வாய்ப்பு

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ல பதிவில், “தமிழ் மண்ணின் மைந்தனுக்கு வாழ்த்துக்கள். அண்ணன் திரு சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். துணை ஜனாதிபதி தேர்தலில் மகத்தான ஆதரவுடன் வெற்றி பெற்று, விரைவில் இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள நீங்கள் மாநிலங்களவையை வழிநடத்தப் போகிறீர்கள். பல ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழ் மண்ணின் மைந்தர் ஒருவர் நாட்டை வழிநடத்தும் ஒரு முக்கியமான பொறுப்பை ஏற்க உள்ளார் என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் இந்தப் பொன்னான வாய்ப்பை வழங்கியதற்கு நமது மாண்புமிகு பிரதமர் திரு.நரேந்திரமோடி மற்றும் நமது பாஜக தேசியத் தலைவர் திரு.ஜேபி நட்டாவுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

மிகச் சிறந்த அங்கீகாரம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது பதிவில், “இந்தியத் திருநாட்டின் குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்றுள்ள மாண்புமிகு சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள். பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், பல்வேறு மாநிலங்களின் ஆளுநராகவும் திறம்படப் பணியாற்றிய அவர்தம் பொதுவாழ்விற்கும், தொடர் அர்ப்பணிப்போடு அவராற்றிய மக்கள் சேவைக்கும், இப்பதவி மிகச் சிறந்த அங்கீகாரம் ஆகும். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரை, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளராகத் தேர்வு செய்தமைக்கு மாண்புமிகு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களுக்கும், மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

அடிமட்டத்திலிருந்து எழுந்த ஒரு தலைவர்

உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “இந்திய துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். சமூகத்தின் அடிமட்டத்திலிருந்து எழுந்த ஒரு தலைவராக உங்கள் நுண்ணறிவும், நிர்வாகத்தைப் பற்றிய ஆழமான அறிவும், நமது நாடாளுமன்ற ஜனநாயகத்தில் சிறந்ததை வெளிக்கொணர்ந்து ஒதுக்கப்பட்டவர்களுக்கு சேவை செய்வதில் எங்களுக்கு உதவும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். மேல் சபையின் புனிதத்தின் பாதுகாவலராக உங்கள் பயணத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

விடாமுயற்சிக்கு  ஊக்கமளிக்கும் சான்று

பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தனது வாழ்த்து பதிவில், “இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு எனது வாழ்த்துக்கள். தமிழ்நாட்டின் பெருமைமிகு மகனான அவர், சேவை, அர்ப்பணிப்பு மற்றும் நேர்மை ஆகியவற்றின் மதிப்புகளுக்காக எப்போதும் உயர்ந்து நின்றுள்ளார். பொது வாழ்வில் அவரது ஆரம்ப நாட்களிலிருந்து மரியாதைக்குரிய தேசியத் தலைவராக அவர் உயர்ந்தது வரை, அவரது பயணம் கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சிக்கு ஒரு ஊக்கமளிக்கும் சான்றாகும்” என தெரிவித்துள்ளார்.