India vs Pakistan Conflict : வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு – வெளியாகும் முக்கிய அறிவிப்புகள்?
India Pakistan Conflict Response : பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் மத்திய அரசு சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சகம் மே 9, 2025 அன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பாக்கப்படுகிறது.

ஜம்மு – காஷ்மீர் (Jammu Kashmir) பகுதியில் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் பாகிஸ்தான் தாக்க முயன்றதாக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் உரி பகுதியில் மக்கள் வசிக்கும் பகுதிகளை பாகிஸ்தான் (Pakistan) குறிவைத்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இந்தியா அதற்கு எதிராக பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனையடுத்து உரி பகுதி முழுவதும் போர் சூழல் நிலவியது. மேலும் அந்த பகுதி குண்டுவெடிப்புகளால் அதிர்ந்ததாக கூறப்படுகிறது. மேலும் உரியில் துப்பாக்கிச் சூடு நடத்தி வரும் பாகிஸ்தானை இந்திய ராணுவம் பதில் தாக்குதல் அளித்து வருகிறது. துப்பாக்கிச் சூடு காரணமாக உள்ளூர் மக்கள் பீதியடைந்துள்ளனர். அவர்கள் வெளியேற வர வேண்டாம் என முன்னதாக எச்சரிக்கப்பட்டிருந்தனர்.
டெல்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு
டெல்லியின் முக்கிய பகுதிகளிலும், முக்கிய நிறுவனங்களுக்கு அருகிலும் டெல்லி காவல்துறை பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. குறிப்பாக டெல்லியின் முக்கிய இடங்களான இந்தியா கேட், குதுப் மினார் மற்றும் செங்கோட்டை அருகே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனுடன், டெல்லி காவல்துறையும் முக்கியமான அரசு அலுவலகங்கள் மற்றும் தூதரகங்களுக்கு அருகில் பாதுகாப்பை அதிகரித்துள்ளது.
பாகிஸ்தான் ராணுவம் எட்டு ஏவுகணைகள் மூலம் தாக்குதலை நடத்தியது. தாக்குதல்களின் போது ஏவப்பட்ட பாகிஸ்தான் ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. பாகிஸ்தானின் தாக்குதல்களை இந்திய ராணுவம் திறம்பட முறியடித்து வருகிறது.
செய்தியாளர்கள் சந்திப்பு
பாகிஸ்தானைச் சேர்ந்த லாகூர், இஸ்லாமாபாத், கராச்சி, சியால்கோட், பஹவல்பூர், பெஷாவர், கோட்லி ஆகிய பகுதிகளில் இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக மத்திய அரசு சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சகம் மே 9, 2025 அன்று காலை 9 மணியளவில் செய்தியாளர்களை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக பாகிஸ்தானுடனான தாக்குதல் சம்பம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ, ஐரோப்பிய ஆணையத்தின் துணைத் தலைவர் காஜா கல்லாஸ், இத்தாலியின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான அன்டோனியோ தஜானி ஆகியோருடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் விளக்கமளித்தார்.