தந்தையைக் கொன்று நாடகமாடிய மகன்- சிசிடிவியால் வெளிச்சத்துக்கு வந்த உண்மை
Crime Caught on CCTV : கர்நாடகாவில் தந்தையைக் கொன்ற மகன், அவர் கரண்ட் ஷாக் அடித்து இறந்ததாக நாடகமாடி வந்திருக்கிறார். இந்த நிலையில் சகோதரி அளித்த புகாரின் பெயரில் போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த நிலையில் உண்மை வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மாதிரி புகைப்படம்
பெங்களூரு மே 14 : கர்நாடகாவின் (Karnataka) துமகூர் மாவட்டத்தில் நிகழ்ந்த ஒரு கொடூரமான சம்பவம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே 11, 2025 அன்று இரவு, அப்போலோ ஐஸ்கிரீம் தொழிற்சாலையில் 55 வயதான நாகேஷ் என்பவரை அவரது மகன் சூர்யா கழுத்தை அழுத்தி கொலை செய்த சம்பவம் சிசிடிவி காட்சிகள் மூலம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. முன்னதாக சூர்யா தனது தந்தை கரண்ட் ஷாக் அடித்து இறந்தததாக நாடகமாடி வந்திருக்கிறார். தற்போது சிசிடிவி காட்சிகள் மூலம் உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தந்தையைக் கொலை செய்துவிட்டு நாடகமாடும் மகன்
கடந்த மே 11 , 2025 அன்று இரவு 1:45 மணியளவில், தந்தை மற்றும் மகனுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டிருக்கிறது. பின்னர் ஒரு கட்டத்தில் தகராறு முற்றி சண்டையாக மாறியிருக்கிறது. சிசிடிவி காட்சியில், நாகேஷ் தனது மகனை அடிக்கிறார். பின்னர் தான் அணிந்திருந்த செருப்பை எடுத்து அடிக்கவும் முயற்சிக்கிறார். பின்னர் அங்கிருந்த ஒரு கட்டையை எடுத்து அடிக்க முயற்சிக்கிறார். அதனை தடுத்த சூர்யா தனது கையில் உள்ள வெள்ளைத் துணியால் தனது தந்தை மற்றொருபுறம் திரும்பிய போது துணியால் அவரின் கழுத்தை நெறித்து கொலை செய்கிறார். அப்போது அவரது நண்பர் உள்ளே வந்து நாகேஷ் இறந்து கிடப்பதை பார்க்கிறார்.
சிசிடிவி மூலம் வெளிவந்த உண்மை
அதன் பிறகு இந்த கொலை சம்பவத்தை மின்சாரம் தாக்கி இறந்தது போல விபத்தாக மாற்ற முயற்சிக்கின்றனர். நாகேஷின் உடலை படுக்கையில் வைத்து, விரல்களில் மின்சாரத்தை செலுத்த முயற்சிக்கின்றனர். ஆனால் அவர்களது முயற்சி பலனளிக்கவில்லை. நாகேஷின் சகோதரி சவிதா சந்தேகத்தின் பேரில் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். அதன் பிறகு காவல்துறையினர் சிசிடிவையை ஆராய்ந்ததில் உண்மை சம்பவம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
இந்த நிலையில் சூர்யாவை தற்போது போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். அவருடன் இருந்த நண்பர் தற்போது தலைமறைவாகி இருப்பதாக கூறப்படுகிறது. அவரை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். தந்தை மகன் இடையே ஏற்கனவே முன் பகை இருந்ததா? எதற்காக இந்த கொலை நடந்தது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மகனே தனது தந்தையைக் கொன்ற அதிர்ச்சி சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த சம்பவங்கள் சிசிடிவி காட்சிகள் குற்றவாளிகளை பிடிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதை உணர்த்துகின்றன. இது போல, இந்தியாவின் பல பகுதிகளில் சிசிடிவி காட்சிகள் குற்றங்களை வெளிச்சம் போட உதவுகின்றன. இதுபோன்ற வழக்குகளில் உண்மையை கண்டறிய சிசிடிவி காட்சிகள் பெருமளவில் உதவியிருக்கின்றன.