உச்சக்கட்ட பதற்றம்.. 24 விமான நிலையங்களை மூடிய இந்தியா.. தலைநகரில் உஷார் நிலை!
India Pakistan Conflict : இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவுகிறது. இதனை அடுத்து, 24 விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளது. ஜம்மு, லே, சண்டிகர் உள்ளிட்ட 24 விமான நிலையங்கள் மூடப்பட்டு, விமான நிலையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், தலைநகர் டெல்லியும் உஷார் நிலையில் உள்ளது.

விமான நிலையம் மூடல்
டெல்ல், மே 09 : இந்தியா பாகிஸ்தான் இடையே, பதற்றமான சூழல் (india pakistan conflict) நிலவி வரும் நிலையில், 24 விமான நிலையங்களில் மத்திய அரசு மூடியுள்ளது. பாகிஸ்தான் இந்தியா இடையே போர் பதற்றம் நிலவுகிறது. இந்த பாகிஸ்தான் மோதல் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இருநாடுகளும் மாறி மாறி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. இது அறிவிக்கப்படாத போராக பார்க்கப்படுகிறது. பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா 2025 மே 7ஆம் தேதி இரவு ஏவுகணைகள் வீசி பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது. இதில் பயங்கரவாதிகளின் முகாம்களை மட்டுமே இந்தியா குறிவைத்து 9 இடங்களில் தாக்குதல் நடத்தியது.
இந்தியா பாகிஸ்தான் பதற்றம்
ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய அமைப்புகளுக்குச் சொந்தமான பயங்கரவாத தளங்களை இந்தியா தாக்கியது. இதில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்த முயன்றது.
ஆனால், அந்த ட்ரோன்கள் இந்தியா கட்சிதமாக சுட்டு வீழ்த்தியது. பஞ்சாப், ஜம்மு, ராஜஸ்தான், உதம்பூர் உள்ளிட்ட பல இடங்களில் ட்ரோன் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் முயன்றது. ஆனால், அதனை S-400 வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் இந்தியா சுட்டு வீழ்த்தியது. மேலும், 8 ஏவுகணைகளையும் முறியடித்தாக தெரிகிறது.
இந்த தாக்குதலால் மக்கள் பீதியடைந்துள்ளனர். மேலும், டெல்லி, பஞ்சாப், ஹரியானா, காஷ்மீர், ஜம்மு ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்பட்டு, சைரன்கள் எழுப்பப்பட்டன. அதோடு, தர்மசாலாவில் நடந்த ஐபிஎல் போட்டியும் ரத்து செய்யப்பட்டன. இதனால், இருநாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவுகிறது.
24 விமான நிலையங்களை மூடிய இந்தியா
இந்த நிலையில், 24 விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. பாதுகாபபு நடவடிக்கையாக 24 விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. சண்டிகர், ஸ்ரீநகர், அமிர்தசரஸ், லூதியானா, பூந்தர், கிஷன்கர், பாட்டியாலா, சிம்லா, காங்க்ரா-காகல், பதிண்டா, ஜெய்சால்மர், ஜோத்பூர், பிகானேர், ஹல்வாரா, பதான்கோட், ஜம்மு, லே, முந்த்ரா, ஜாம்நகர், ஹிராசா (ராஜ்கோட்),போர்பந்தர், கெஷோத், கண்ட்லா, பூஜ் ஆகிய விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.
அதோடு, தலைவர் டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா கேட், விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தயார் நிலையை கருத்தில் கொண்டு, அரசு அலுவலர்களுக்கு விடுமுறையை ரத்து செய்துள்ளது. அதோடு, ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலத்தில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும், பல்வேறு இடங்கள் இருளில் சூழ்ந்துள்ளன.
இன்று காலை 9 மணி வரை மின்தடை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இருநாடுகளுக்கு இடையே பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என சொல்லப்படுகிறது. இதனை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.