HBD Trisha: தமிழ் சினிமாவின் பேரழகி.. நடிகை த்ரிஷா பிறந்தநாள் இன்று!
Trisha Birthday: நடிகை த்ரிஷா, 2002ல் 'மௌனம் பேசியதே' மூலம் அறிமுகமாகி, 23 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். ரஜினி முதல் விஜய் வரை முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். 'கில்லி', 'விண்ணைத் தாண்டி வருவாயா', 'பொன்னியின் செல்வன்' போன்ற பல படங்கள் அவருக்கான அடையாளமாக அமைந்துள்ளது.

நடிகை த்ரிஷா
பொதுவாக திரையுலகை எடுத்துக் கொண்டால் ஹீரோயினாக நடிக்க வருபவர்கள் ஒரு காலகட்டத்தில் எங்கே இருக்கிறார்கள் என தெரியாத அளவுக்கு காணாமல் போய்விடுவார்கள். ஒரு சிலர் எவ்வளவு ஆண்டுகள் கடந்தாலும், சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் எப்போதும் மக்களிடையே பரீட்சையமாக தோன்றுவார்கள். வாய்ப்பு இல்லாமல் போவது, திருமணம், மற்ற கேரக்டர்களை ஏற்க மறுப்பதால் ஃபீல்ட் அவுட் ஆவது என பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. இப்படியான நிலையில் 20ஆம் நூற்றாண்டில் ஹீரோயினாக அறிமுகமாகி கிட்டதட்ட 23 ஆண்டுகள் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை த்ரிஷா (Trisha). அவர் இன்று (2025, மே 4) தனது 42வது பிறந்தநாளை (Trisha Birthday) கொண்டாடுகிறார். அவரின் திரைப்பயணம் பற்றி பார்க்கலாம்.
தமிழ் சினிமா ஸ்பெஷல்!
2002 ஆம் ஆண்டு மௌனம் பேசியதே படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் த்ரிஷா. ஆனால் அவர் முதலில் கமிட்டானது லேசா லேசா படம் தான். சென்னையில் 1983 ஆம் ஆண்டு மே 4 ஆம் தேதி பிறந்த த்ரிஷாவுக்கு கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங்கலில் ஆர்வம் இருந்தது. 1999 ஆம் ஆண்டு மிஸ் சென்னை, மிஸ் சேலம் ஆகிய அழகி போட்டிகளில் கலந்துக் கொண்டு வென்றார். தொடர்ந்து 2001ல் மிஸ் இந்தியா போட்டியில் பெஸ்ட் பியூட்டிஃபுல் ஸ்மைல் விருதும் கிடைத்தது. அப்படியாக சினிமா வாய்ப்பும் வந்தது.
மௌனம் பேசியதே படத்துக்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது கிடைத்தது. தனது 3வது படமாக வெளியான சாமி அவரை பட்டித்தொட்டியெங்கும் பிரபலமாக்கியது. தொடர்ந்து வந்த கில்லி படம் கேரியரின் உச்சமாக அமைந்தது. குறிப்பாக அப்படிப்போடு பாடல் குழந்தைகள் வரை ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது.
நடிக்காத ஹீரோக்களே இல்லை
2000க்கு பிறகு தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, தனுஷ், ஜெயம் ரவி, விஜய் சேதுபதி, சிலம்பரசன் என அத்தனை முன்னணி ஹீரோக்களுடன் நடித்த ஒரே நடிகை த்ரிஷா தான். அதுமட்டுமல்லாமல் மௌனம் பேசியதே “சந்தியா”, கில்லி “தனலட்சுமி”, உனக்கும் எனக்கும் “கவிதா”, அபியும் நானும் “அபி”, விண்ணைத் தாண்டி வருவாயா “ஜெஸ்ஸி”, கொடி “ருத்ரா”, 96 “ஜானு”, என்னை அறிந்தால் “ஹேமானிகா”, என்றென்றும் புன்னகை “பிரியா”, பொன்னியின் செல்வன் “குந்தவை” என அவரின் பெயர் சொல்லும் கேரக்டர்களும் இங்கு ஏராளம்.
ஒரு கட்டத்தில் ஹீரோயினுக்கான கதைகளிலும் நடிக்க தொடங்கினார். கிட்டதட்ட 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் த்ரிஷா இன்றைக்கும் ஓராண்டில் அதிக படங்களில் நடிக்கும் ஹீரோயினாக திகழ்கிறார். அடுத்ததாக கமலுடன் “தக் லைஃப்”, சூர்யாவுடன் ஒரு படம் என இந்தாண்டு 2 படங்கள் வெளியாகவுள்ளது. தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம் என மற்ற மொழிகளிலும் அசத்தி வருகிறார். தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் த்ரிஷா 20ஆம் நூற்றாண்டின் தமிழ் சினிமாவின் ஒரு அடையாளம். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!