Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Tourist Family: எப்படி சசி கதை பிடிக்கிறீங்க?.. டூரிஸ்ட் ஃபேமிலி பார்த்து வியந்த ரஜினி!

சசிகுமார் நடித்து 2025, மே 1 ஆம் தேதி வெளியான "டூரிஸ்ட் ஃபேமிலி" படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார். குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் ரஜினியின் பாராட்டு கவனம் பெற்றுள்ளது. இந்த பாராட்டு டூரிஸ்ட் ஃபேமிலி படக்குழுவினருக்கு கிடைத்த பெரும் ஊக்கமாக அமைந்துள்ளது.

Tourist Family: எப்படி சசி கதை பிடிக்கிறீங்க?.. டூரிஸ்ட் ஃபேமிலி பார்த்து வியந்த ரஜினி!
டூரிஸ்ட் ஃபேமிலி குழுவுக்கு ரஜினி பாராட்டு
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 30 May 2025 11:27 AM

நடிகர் சசிகுமார் (M Sasikumar) நடிப்பில் வெளியாகி மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வரும் டூரிஸ்ட் ஃபேமிலி (Tourist Family) படக்குழுவினரை நடிகர் ரஜினிகாந்த் (Rajinikanth) பாராட்டியுள்ள சம்பவம் சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளது. தமிழ் சினிமாவில் குறைந்த பட்ஜெட்டில் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட சில படங்கள் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெறும். கதை தரமானதாக இருந்தால் மக்கள் பெரிய பட்ஜெட், சின்ன பட்ஜெட் என்றெல்லாம் பார்க்க மாட்டார்கள். மிகப்பெரிய வெற்றியைப் பரிசாக கொடுப்பார்கள் என்பதற்கு உதாரணமாக அமைந்துள்ளது டூரிஸ்ட் ஃபேமிலி படம். 2025, மே 1 ஆம் தேதி வெளியான இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கியுள்ளார். மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ், எம்.ஆர்.பி எண்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது.

சசிகுமார் வெளியிட்ட பதிவு

இந்நிலையில் இந்த படத்தைப் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளதாக நடிகர் சசிகுமார் தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “படம் சூப்பர் என யார் சொன்னாலும் மனம் சொக்கிப் போகும். இப்படியான நிலையில் சூப்பர் ஸ்டாரே படம் சூப்பர் என சொன்னால் அந்த சந்தோஷத்திற்கு சொல்ல வேண்டும். நான் நடித்த அயோத்தி, நந்தன் ஆகிய படங்களை பார்த்து பாராட்டிய ரஜினிகாந்த் ஹாட்ரிக் பரவசமாக டூரிஸ்ட் ஃபேமிலி படம் பார்த்து சூப்பர் சசிகுமார் என அழுத்தி சொன்னார். நீங்கள் தர்ம தாஸாகவே வாழ்ந்திருக்கீர்கள். சொல்வதற்கு வார்த்தையே இல்லை.  அந்த அளவு வாழ்ந்து காட்டியிருக்கிறீர்கள்.

பல சீன்களில் கலங்க வைத்துள்ளீர்கள். சமீபகாலமாக உங்களுடைய கதை தேர்வு வியக்க வைக்கிறது சசிகுமார்” என ரஜினிகாந்த் சொல்ல சொல்ல நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது.  படத்தின் ஒவ்வொரு காட்சியும் மனதில் நிறுத்தி அத்தனை பேரின் பங்களிப்பையும் வாழ்த்திய ரஜினிகாந்த் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் டூரிஸ்ட் ஃபேமிலி படக்குழுவுக்கு கிடைத்த பொக்கிஷ பட்டயமாகும். தட்டிக் கொடுத்து உற்சாகமூட்டும் உங்களின் தங்கமான மனசுக்கு மிகவும் நன்றி” என தெரிவித்துள்ளார்.

டூரிஸ்ட் ஃபேமிலி படம்

சமூக உறவை, நல்லிணக்கத்தை பேணும் வகையில் வெளியாகியுள்ள டூரிஸ்ட் ஃபேமிலி படம் அனைவரையும் கவர்ந்துள்ளது என சொல்லலாம். இந்த படத்தில் சசிகுமாருடன் சிம்ரன், யோகிபாபு, மிதுன் ஜெய் ஷங்கர், கமலேஷ், எம்.எஸ்.பாஸ்கர், இளங்கோ குமாரவேல், ரமேஷ் திலக், பகவதி பெருமாள், ஸ்ரீஜா ரவி, ராம்குமார் பிரசன்னா, யோகலட்சுமி என பலரும் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படம் ரூ.14 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு பாக்ஸ் ஆபீஸில் ரூ.55 கோடி வசூல் செய்துள்ளது. முன்னதாக நடிகர் சிவகார்த்திகேயனும் இப்படத்தைப் பாராட்டி படக்குழுவினரை நேரில் அழைத்து வாழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.