சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை வெகுவாகப் பாராட்டிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Tourist Family Movie: நடிகர்கள் சசிகுமார் மற்றும் சிம்ரன் இருவரும் இணைந்து நடித்து தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ள படம் டூரிஸ்ட் ஃபேமிலி. அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் பிரபலங்கள் மற்றும் மக்கள் இடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் நடிகர் சசிகுமார் (Actor Sasikumar) நாயகனாக நடித்துள்ள படம் டூரிஸ்ட் ஃபேமிலி. மே மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி வெற்றிநடை போடும் இந்தப் படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடிகை சிம்ரன் (Actress Simran) நடித்துள்ளார். நடிகை சிம்ரனின் அண்ணனாக யோகி பாபுவும் சசிக்குமார் மற்றும் சிம்ரனின் மகன்களாக நடிகர்கள் மிதுன் ஜெய் சங்கர் மற்றும் கமலேஷ் நடித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து இந்தப் படத்தில் நடிகர்கள் எம்.எஸ்.பாஸ்கர், பக்ஸ், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். கொரோனாவிற்கு பிறகு ஏற்படும் பொருளாதார நெருக்கடி காரணமாக சொந்த நாடான இலங்கையை விட்டுவிட்டு தமிழ் நாட்டில் வாழ்வதற்காக குடும்பத்துடன் ஓடிவரும் குடும்பத்தின் கதைதான் டூரிஸ் ஃபேமிலி.
இந்தப் படம் திரையரங்குகளில் வெளியானதில் இருந்தே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் முன்னதாக படத்தின் ப்ரீ ரிலீஸில் படத்தைப் பார்த்த இயக்குநர்கள் நடிகர்கள் என பிரபலங்கள் பலரும் இந்தப் படத்தை வெகுவாகப் பாராட்டினர். படத்தின் அறிமுக வீடியோ வெளியான போதே ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது இந்தப் படம்.
இந்த நிலையில் திரையரங்குகளில் நாளுக்கு நாள் படத்தின் வசூல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. படத்தைப் பார்த்த பிரபலங்களும் ரசிகர்களும் தொடர்ந்து தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் படத்தைப் பார்த்துவிட்டு எக்ஸ் தள பக்கத்தில் பாராட்டி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட பதிவு:
டூரிஸ்ட் ஃபேமிலி (Tourist Family)என்ற படம் என் மனதை மிகவும் ஈர்த்தது.
அக்கம் பக்கத்திலே இருப்பவரோடு மனிதாபிமான உறவோடும் பேரன்போடும் வாழும் வாழ்க்கையை போதிக்கிறது இப்படம்.
படத்தின் நாயகன் சசிகுமார் பேரன்பும்,இரக்கமும்,உதவும் குணமும் உள்ளவராய்
நடித்துள்ளார்…இல்லை..இல்லை வாழ்ந்தே… pic.twitter.com/edjFYhKnUr— Subramanian.Ma (@Subramanian_ma) May 4, 2025
அதில் அவர் கூறியுள்ளதாவது, டூரிஸ்ட் ஃபேமிலி (Tourist Family)என்ற படம் என் மனதை மிகவும் ஈர்த்தது. அக்கம் பக்கத்திலே இருப்பவரோடு மனிதாபிமான உறவோடும் பேரன்போடும் வாழும் வாழ்க்கையை போதிக்கிறது இப்படம். படத்தின் நாயகன் சசிகுமார் பேரன்பும், இரக்கமும், உதவும் குணமும் உள்ளவராய் நடித்துள்ளார்…
இல்லை..இல்லை வாழ்ந்தே காட்டியுள்ளார். நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பதைக்காட்டும் அற்புதமான படம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் தியேட்டர்களில் படம் பார்க்கும் இயல்புடைய நான் இன்று (மே மாதம் 4-ம் தேதி 20205-ம் ஆண்டு) மதியம் குடும்பத்தினருடன் சென்று படம் பார்த்தேன்.
படம் முடிந்து வெளிவந்தவுடன் நடிகர் சசிகுமார் அவர்களிடமும், இயக்குனர் அபிசன் ஜீவிந்த் அவர்களிடமும் அலைபேசியின் வாயிலாக என்னுடைய மகிழ்ச்சியையும் பாராட்டுக்களையும் பரிமாறிக்கொண்டேன் என்று அந்த எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.