பதற்றத்தில் பாகிஸ்தான்.. லாகூரில் குண்டுவெடிப்பு… வெளியான பரபரப்பு தகவல்!
Pakistan Lahore Blast : பாகிஸ்தானின் லாகூரில் விமான நிலையம் அருகே குண்டுவெடிப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. குண்டுவெடிப்பு சத்தம் கேட்டதை அடுத்து, வீடுகளில் இருந்து மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இதனால், அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. இதில், யாருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

லாகூரில் குண்டுவெடிப்பு
பாகிஸ்தான், மே 08 : பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள லாகூரில் (Lahore Blast) பல இடங்களில் குண்டு வெடிப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. லாகூரில் உள்ள வால்டன் விமான நிலையம் அருகே அடுத்தடுத்து குண்டு வெடித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. லாகூரில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. லாகூர் விமான நிலையம் அருகே இரண்டு அல்லது மூன்று முறை குண்டு வெடிப்பு சத்தங்கள் கேட்டதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். வால்டன் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள லாகூரில் உள்ள கோபால் நகர் மற்றும் நசீராபாத் பகுதிகளில் குண்டுவெடிப்பு சத்தங்கள் கேட்டதாக உள்ளூர் மக்கள் கூறியுள்ளனர்.
பதற்றத்தில் பாகிஸ்தான்
குண்டு வெடிப்பு சத்தத்தை கேட்டதை அடுத்து, அங்கு மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி அச்சத்தில் சாலைகளில் கூடியுள்ளனர். இந்த குண்டு வெடிப்பை அடுத்து, லாகூர் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. நேரில் கண்ட சாட்சிகளின் கூற்றுப்படி, இரண்டு முதல் மூன்று வெடிப்புகள் ஏற்பட்டதாக அவர்கள் கூறியுள்ளனர்.
குண்டுவெடிப்புகளுக்குப் பிறகு லாகூர் பழைய விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக பல விமானங்கள் பாதிக்கப்பட்டு பயணிகள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இந்த பகுதியில் லாகூர் கன்டோன்மெண்ட் உள்ளது. வெடி குண்டு தாக்குதலை அடுத்து, சியால்கோட், கராச்சி மற்றும் லாகூர் விமான நிலையங்களில் விமான சேவைகள் தற்காலிகாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
லாகூரில் குண்டு வெடிப்பு
Three blasts were heard in Lahore Walton air port…
Further details awaited pic.twitter.com/9UHe19gjAb— War & Gore (@Goreunit) May 8, 2025
இந்த குண்டுவெடிப்பில் எந்த உயிரிழப்பு ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும், புகைப்படங்கள் மற்றும் வீடியோவில் குண்டு வெடிப்பு தாக்குதலில் கட்டிடங்கள் பலத்த சேதம் ஏற்பட்டததை காட்டுகிறது. இதனால், பாகிஸ்தானில் பதற்றமான சூழல் நிலவுகிறது. குண்டுவெடிப்பு எப்படி நடந்தது? பின்னணியில் யார் என்பது குறித்த எந்த தகவலும் வெளிவரவில்லை. லாகூரில் நடந்த குண்டுவெடிப்பு குறித்து பாகிஸ்தான் விசாரணை நடத்தி வருகிறது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலாக, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா 2025 மே 7ஆம் தேதி நள்ளிரவு 1 மணியளவில் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் 50க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் உயிரிழந்தாக தெரிகிறது. இருப்பினும், இதுகுறித்து பாகிஸ்தான் எந்த தகவலையும் கூறவில்லை. இந்தியாவின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இருநாடுகளின் எல்லையிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் எல்லைகள் உஷார் நிலையில் உள்ளன.