வரதட்சணை கொடுமை.. கொலை மிரட்டல்.. பிரபல யூடியூபர் சுதர்சன் கைது..
Youtuber Sudarshan Arrest: மதுரையை சேர்ந்த பிரபல யூடியூபர் சுதர்சன் மீது மனைவி விமலாதேவி, தேனி அனைத்து மகளிர் காவல் வரதட்சணை புகார் அளித்திருந்த நிலையில் அவரையும் , அவரது குடும்பத்தினரையும் கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை, ஜூலை 6, 2025: பிரபல யூடியூபர் மீது டாக்டர் மனைவி வரதட்சணை புகார் அளித்ததன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். புகாரின் அடிப்படையில் யூடியூபர் உட்பட அவரது குடும்பத்தினர் ஐந்து பேர் மீது தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியை சேர்ந்தவர் பிரபல யூடியூபர் சுதர்சன். இவர் யூடியூப் சேனலில் பணிபுரிந்து வந்தார் . பின்பு டெக்னிக்கல் சூப்பர் ஸ்டார் என்ற யூடியூப் சேனல் தொடங்கி புதுவரவான மொபைல் போன்களின் தொழில்நுட்பம் குறித்து எடுத்துரைத்தும் விமர்சனம் செய்து வருகிறார். யூடியூபில் இவருக்கு 1.6 மில்லியன் பேர் இவரை பின் தொடர்கிறார்கள்.
வரதட்சணை கேட்டு கொலை மிரட்டல்:
இவருக்கும் தேனி மாவட்டம் வீரபாண்டியை சேர்ந்த மருத்துவர் விமலா தேவிக்கும் கடந்த ஆண்டு (2024) மார்ச் மாதம் திருமணம் நடைபெற்றது. விமலாதேவி எம்பிபிஎஸ் முடித்துவிட்டு மதுரையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்ததை தொடர்ந்து திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பெண் வீட்டில் இருந்து 30 சவரன் நகை, 5 லட்சம் ரொக்கம் 2 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் வழங்கி உள்ளனர். திருமணம் நடைபெற்ற சில மாதங்களுக்கு பிறகு யூடியூபர் சுதர்சன் மனைவியின் நகையை வைத்து சொந்தமாக வீடு கட்டியுள்ளார். மேலும் வீடு கட்டிய கூடுதல் கடனை அடைப்பதற்கு மனைவி விமலாதேவியின் குடும்பத்திடம் 20 சவரன் நகை கேட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து இரு வீட்டாரும் பேசி விமலாதேவி குடும்பத்தினர் 15 லட்சம் பணம் கொடுத்துள்ளனர். பணத்தை பெற்றுக் கொண்டும் மேலும் 20 சவரன் நகை கேட்டு யூடியூபர் சுதர்சன் மற்றும் அவரது குடும்பத்தினர் விமலாதேவியிடம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
கைது செய்து விசாரணை:
இதன்காரணமாக மருத்துவர் விமலாதேவி தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனது கணவர் யூடியூபர் சுதர்சன் மற்றும் அவரது தந்தை சுந்தர்ராஜன், தாய் மாலதி, தங்கை சக்திபிரியா அவரது கணவர் விக்னேஸ்வரன் ஆகிய ஐந்து நபர்கள் மீது புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் யூடியூபர் சுதர்சன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் அளித்திருந்தார். இந்த புகாரை தொடர்ந்து தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரபல யூடியூபர் மீது வரதட்சணை புகார் எழுந்து கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.