திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேகம்.. சிறப்பு ஏற்பாடுகள் என்ன?
Tiruchendur Murugan Temple: 2025, ஜூலை 7 ஆம் தேதியான நாளை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிறப்பான முறையில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இத்றகாக 6000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஜூலை 1, 2025 முதல் கோயில் வளாகத்தில் ஹோமங்கள் வளர்க்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது.

திருச்செந்தூர், ஜூலை 6, 2025: அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திகழும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நாளை அதாவது ஜூலை 7 2025 அன்று மகா கும்பாபிஷேக விழாவானது நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. திருச்செந்தூர் கோயிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூலை 7, 2025 தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்காக 300 கோடி ரூபாய் செலவில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து 2025 ஜூலை 1 ஆம் தேதி முதல் யாகசாலையில் ஹோமங்கள் வளர்க்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. அதே போல் மூலவர் ஷண்முகர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு ராஜகோபுரத்தின் கீழ் பிரம்மாண்டமான யாகசாலை குண்டங்கள் அமைத்து பூஜைகள் மேற்கொள்ளப்படுகிறது. சரியாக 2025 ஜூலை 7ஆம் தேதி காலை 6:15 முதல் 6:50 மணிக்குள் ராஜ கோபுர கலசங்கள், மூலவர், வள்ளி, தெய்வானை விமான கலசங்களுக்கும் பிற பரிவார மூர்த்தி கலசங்களுக்கும் புனித நீரூற்றி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
பாதுகாப்பு பணியில் 6000 போலீசார்:
திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகத்தை ஒட்டி அப்பகுதி முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. மக்கள் பக்தி பரவசத்தில் தினசரி சுவாமி தரிசனத்தை மேற்கொண்டு வருகின்றனர். திருச்செந்தூர் முருகன் கோயில் அறுபடை வீடுகளில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். இங்கு முருகனுக்கு விசேஷமான நாட்கள் குறிப்பாக சூரா சம்ஹாரம், சஷ்டி, வைகாசி விசாகம், பங்குனி உத்திரம் ,ஆடி கிருத்திகை, கார்த்திகை போன்ற நாட்களில் ஆயிரம் கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்வார்கள். ஜூலை 7 2025 தேதியான நாளை மகா கும்பாபிஷேகம் நடைபெற இருக்கும் நிலையில் குறைந்தபட்சம் 10 லட்சம் பேர் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. மூன்று ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். திருச்செந்தூர் நகரம் முழுவதும் 6000 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் ஆங்காங்கே சுமார் 30 காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ட்ரோன் கேமரா மூலமாகவும் கண்காணிப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது.
சிறப்பு ஏற்பாடுகள்:
திருச்செந்தூருக்கு வரக்கூடிய பக்தர்கள் எந்த சிரமமும் இன்றி அவர்களின் வசதிக்காக கும்பாபிஷேகத்தை கண்டு கழிக்க 70 இடங்களில் பிரம்மாண்ட எல்.இ.டி திரைகள் அமைக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் கும்பாபிஷேக விழாவை ஒட்டி தமிழகத்திலிருந்து 400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. அதேப்போல் திருச்செந்தூரில் மூன்று பேருந்து நிலையங்கள் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளது.
ட்ரோன் மூலம் புனித நீர் தெளிக்க ஏற்பாடு:
2025 ஜூலை 7ஆம் தேதி நடைபெற இருக்கும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அங்கு இறுதிக்கட்ட ஏற்பாடுகள் நடைபெற்ற வருகிறது. அந்த வகையில் ஜூலை 5 2025 தேதியான நேற்று சண்முகர விமானத்தில் தங்க தகடுகள் பதிக்கப்பட்டது. முக்கியமாக திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகத்தை கடற்கரை பகுதி மற்றும் கோயில் வளாகத்தில் நின்று தரிசிக்கும் பக்தர்கள் மீது புனித நீர் தெளிப்பதற்காக ட்ரோன் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக 20 ட்ரோன்கள் தயார் நிலையில் உள்ளது. ஜூலை 7 2025 தேதியான நாளை மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, பெருமாள், நடராஜர் மற்றும் பரிவார மூர்த்தி சுவாமிகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.