வேளச்சேரி ரயில் நிலையத்தில் உள் விளையாட்டு அரங்கம்.. என்னென்ன வசதிகள் இடம்பெற உள்ளது?
Indoor Stadium At Velachery: வேளச்சேரி ரயில் நிலையத்தில் புதிய முயற்சியாக உள் விளையாட்டு அரங்கம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆரோக்கிய வாழக்கை முறையை ஊக்குவிக்க, பயணிகள் மற்றும் ரயில் நிலையம் அருகில் உள்ள குடியிருப்பாளர்கள் பங்கேற்க கூடிய விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு திட்டங்களை வழங்குதல் இதன் நோக்கமாகும்.

சென்னை, ஜூலை 5, 2025: வேளச்சேரி ரயில் நிலையத்தில் உள் விளையாடரங்க மையம் அமைக்க தெற்கு இரயில்வே சென்னை கோட்டம் புதிய முயற்சி மேற்கொண்டுள்ளது. தெற்கு ரயில்வே சென்னை கோட்டத்தின் வணிகப் பிரிவின் மூலமாக, வேளச்சேரி ரயில் நிலையத்தில் பொழுதுபோக்கு வசதிகளுடன் கூடிய ஒரு விளையாட்டு மையத்தை அமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த முயற்சியின் மூலம் வேளச்சேரி ரயில் நிலைய வளாகம் மேலும் வளர்ச்சியடைந்து, விளையாட்டுகள், உடற்பயிற்சி, உடல்நலம்/ ஆரோக்கியத்தை மேம்படுத்துதல் மற்றும் பொழுதுபோக்கு வசதிகளை உள்ளடக்கிய முக்கிய சமூக பயன்பாட்டு மையமாக உருவெடுக்கும். ஆரோக்கிய வாழக்கை முறையை ஊக்குவிக்க, பயணிகள் மற்றும் ரயில் நிலையம் அருகில் உள்ள குடியிருப்பாளர்கள் பங்கேற்க கூடிய விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு திட்டங்களை வழங்குதல் இதன் நோக்கமாகும்.
என்னென்ன வசதிகள் இருக்கும்?
பல்வேறு விளையாட்டு துறைகளில் அனுபவமுள்ள பயிற்சியாளர்களை நியமித்து பயிற்சி வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், ரயில் நிலையங்களில் இருக்கும் காலி இடங்களை வருவாய் ஈட்டும் மையங்களாக மாற்றுதற்கான முயற்சியாக இது அமைந்துள்ளது.
இந்த வணிக ஒப்பந்தம் செயல்பாட்டிற்கு வரும்போது, சுற்றுப்புற மக்கள் மற்றும் ரயில் பயணிகளின் தேவை மற்றும் விருப்பத்திற்கு ஏற்ப டேபிள் டென்னிஸ், பூப்பந்து, ஜிம்னாசியம், கூடைப்பந்து, ஷட்டில், கபடி, கேரம், செஸ், வாலிபால், யோகா, ஸ்னோ பவுலிங், கராத்தே, டேக்வாண்டோ, ஜூடோ, குத்துசண்டை, பளுதூக்குதல், பில்லியர்ட்ஸ் போன்ற பலதரப்பட்ட உள்/வெளி அரங்க விளையாட்டுகளை நடத்த அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகுதி பெற்ற பயிற்சியாளர்கள் மட்டுமே இந்த விளையாட்டு மையப்பணியில் அனுமதிக்க படுவார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வேளச்சேரி ரயில் நிலையம்:
வேளச்சேரி ரயில் நிலையம் மிகவும் முக்கியமான ரயில் இணைப்பு தளங்களில் ஒன்றாகும். வேளச்சேரியில் இருக்கக்கூடிய பறக்கும் ரயிலானது சென்னையில் இருக்கக்கூடிய பல்வேறு பகுதிகளுக்கு இணைப்பாக செயல்படுகிறது. குறிப்பாக சென்னை வேளச்சேரியில் இருந்து புறப்படும் ரயில்கள் தரமணி, பெருங்குடி, அடையாறு, கோட்டூர்புரம், மயிலாப்பூர், மந்தைவெளி, லைட் ஹவுஸ், பசுமை வழி சாலை, வழியாக சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு சென்றடைகிறது.
தினசரி ஏராளமான மக்கள் இதில் பயணம் மேற்கொள்கின்றனர். பல ஆண்டுகளாக வேளச்சேரி ரயில் நிலையம் பராமரிப்பு அற்று கடப்பதாக எழுந்த கருத்துக்களை கொண்டு இந்த புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வேளச்சேரி ரயில் நிலையத்தில் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடம், அதே போன்று உணவகங்கள் என பல்வேறு வசதிகள் இருக்கும் நிலையில் தற்போது மக்களுக்கு கூடுதல் வசதியாக இந்த உள் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது