சென்னை வாசிகளே உஷார்.. மாலை முதல் பொளக்கப்போகும் மழை.. வெதர்மேன் சொன்ன தகவல்..

Chennai Rains: காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு போன்ற பகுதிகளில் பகல் நேரங்களில் இடை இடையே மழை இருக்கும் என்றும், இரவு முதல் அதிகாலை வரை மழையின் அளவு அதிகரிக்கக்கூடும் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சென்னை வாசிகளே உஷார்.. மாலை முதல் பொளக்கப்போகும் மழை.. வெதர்மேன் சொன்ன தகவல்..

கோப்பு புகைப்படம்

Published: 

17 Oct 2025 09:54 AM

 IST

சென்னை, அக்டோபர் 17, 2025: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 16, 2025 அன்று (நேற்று) தொடங்கியது. வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பதிவாகி வருகிறது. பொதுவாக வடகிழக்கு பருவமழை என்பது செப்டம்பர் மாதம் இறுதி அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கி ஜனவரி மாதம் வரை நீடிக்கும். இந்த காலத்தில் சென்னை உள்ளிட்ட கடலோர பகுதிகளில் நல்ல மழை பதிவாகும். அதேசமயம் வங்கக் கடல் மற்றும் அரபிக்கடலில் பல்வேறு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகி, அவை காற்றழுத்த தாழ்வு மண்டலங்களாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இந்த தாழ்வு மண்டலங்கள் புயலாக மாறக்கூடும்; வடகிழக்கு பருவமழைக் காலத்தில் தமிழகத்தை ஒரிரு புயல் தாக்கும் வாய்ப்பும் உள்ளது.

சென்னையில் இடைவிடாது பெய்யும் மழை:

இந்த சூழலில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக அக்டோபர் 16, 2025 அன்று மாலை முதல் இதுவரை சென்னையில் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை பதிவாகி வருகிறது. சென்னையில் தாம்பரம், கேம்ப் ரோடு, சேலையூர், மாடம்பாக்கம், ராஜகுருபாக்கம், சந்தோஷபுரம், மேடவாக்கம், பெரும்பாக்கம், பள்ளிக்கரணை, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை இருந்தது.

மேலும் படிக்க: கட்சிக்கும் அன்புமணிக்கும் எந்த தொடர்பும் இல்லை.. தனிக்கட்சியை தொடங்கலாம்.. மீண்டும் பாமக நிறுவனர் திட்டவட்டம்..

அதேபோல், மடிப்பாக்கம், ஆலந்தூர், ஆதம்பாக்கம், மீனம்பாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை, கிண்டி, சைதாப்பேட்டை, சின்னமலை, தேனாம்பேட்டை, அண்ணா சாலை, ஆயிரம் வழக்கு, பட்டினப்பாக்கம், எம்.ஆர்.சி. நகர், அடையாறு, திருவான்மியூர், கிழக்கு கடற்கரை சாலை, ஓஎம்ஆர், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மழை பதிவாகியுள்ளது. இதன் காரணமாக பல சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால், அலுவலகம் செல்பவர்கள் மற்றும் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

அக்டோபர் 17, 2025 இன்று காலை நிலவரப்படி:

  • மீனம்பாக்கம் – 24.8 மில்லிமீட்டர்
  • நுங்கம்பாக்கம் – 14.3 மில்லிமீட்டர்
  • மகாபலிபுரம் – 25 மில்லிமீட்டர்
  • மீனம்பாக்கம் (மற்றொரு அளவீடு) – 20 மில்லிமீட்டர்
  • சென்னை நகரப் பகுதிகள் – 15 மில்லிமீட்டர்
  • திருவள்ளூர் – 9.5 மில்லிமீட்டர்
  • நாவலூர் – 59.5 மில்லிமீட்டர்
  • பள்ளிக்கரணை – 31.1 மில்லிமீட்டர்
  • நந்தனம் – 30.5 மில்லிமீட்டர்
  • அண்ணா பல்கலைக்கழகம் – 16 மில்லிமீட்டர்

சென்னையில் மாலை முதல் கொட்டப்போகும் மழை – பிரதீப் ஜான்:


காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு போன்ற பகுதிகளில் பகல் நேரங்களில் இடை இடையே மழை இருக்கும் என்றும், இரவு முதல் அதிகாலை வரை மழையின் அளவு அதிகரிக்கக்கூடும் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. சென்னை உள்ளிட்ட பகுதிகளில் வெளுக்கப்போகும் மழை.. பிரதீப் ஜான்

அதேபோல் தென் தமிழகத்தில், குறிப்பாக சிவகங்கை, இராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல மழை பதிவாகும். குறிப்பாக மாஞ்சோலை பகுதியில் கனமழை இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.