வெயிலுக்கு சின்ன பிரேக்.. வெளுக்கப்போகும் கனமழை.. சென்னையில் எப்படி?
Tamil Nadu Weather Update : தமிழகத்தில் கத்திரி வெயில் தொடங்க உள்ள நிலையில், அடுத்த சில தினங்களுக்கு மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, மயிலாடுதுறை, தஞ்சாவூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டஙகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, மே 03 : தமிழகத்தில் வெயில் கொளுத்தி எடுக்கும் நிலையில், மாநிலத்தில் ஒருசில பகுதிகளில் கனமழை (Chennai Weather Update) பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளத. 2025 மே 3ஆம் தேதி முதல் 8ஆம் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி எடுக்கிறது. 2025 மார்ச் மாதத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. பல்வேறு மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரியை கடந்து பதிவாகி வருகிறது. இன்னும் வரும் நாட்களில் வெப்பநிலை தாக்கம் கடுமையாக இருக்கும். கத்திரி வெயில் 2025 மே 4ஆம் தேதி துவங்க உள்ளதால், வெயில் மோசமாக இருக்கும்.
வெளுக்கப்போகும் கனமழை
கிட்டதட்ட வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என நிபுணர்கள் கூறி வருகின்றனர். இதனால், மக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. கொளுத்தும் வெயிலுக்கு இடையே சென்னை வானிலை மையம் குளுகுளு அப்டேட்டை வெளியிட்டு இருக்கிறது.
அதாவது, தமிழகத்தில் கனமழை பெய்யும் என கணித்துள்ளது. அதாவது, தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
2025 மே 3ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025 மே 6ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.
சென்னையில் எப்படி?
அதோடு, கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதியிலும் கனமழை வெளுக்கும் என வானிலை மையம் கூறியுள்ளது. அதைத் தொடர்ந்து, மே 8ஆம் தேதி வரை மிதமான மழைக்கே வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை, 2025 மே 3ஆம் தேதி வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
அதோடு, அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 முதல் 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், 2025 மே 3ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவே இருக்கக் கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.