தேமுதிகவில் இருந்து விலகும் நல்லதம்பி? பிரேமலதாவிற்கு எழுதிய கடிதமும் கொடுத்த விளக்கமும் என்ன?
Nallathambi Letter: முன்னாள் எம்.எல்.ஏ நல்லதம்பி, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்திற்கு எழுதிய கடிதத்தில் தன்னை உயர்மட்ட குழு உறுப்பினர் பதவியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றும், இல்லை என்றால் கட்சியில் இருந்து விலகப்போவதாக குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேமுதிகவில் 2025, ஏப்ரல் 30ஆம் தேதி தர்மபுரியில் இருக்கும் பாலக்கோட்டில் அதன் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இளைஞர் அணி செயலாளராக மறைந்த விஜயகாந்த் அவர்களின் மூத்த மகன் விஜய பிரபாகரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேவேளை இதற்கு முன்னதாக இளைஞனரை செயலாளராக இருந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு உயர்மட்ட குழு உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து நல்லதம்பி, பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் தன்னை உயர்மட்ட குழு உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அப்படி இல்லை என்றால் தானே விலகிக் கொள்வேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதம் தற்போது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.
தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் நடந்தது என்ன?
அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அனைத்து கட்சிகள் தரப்பிலும் தேர்தலை சந்திப்பதற்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக கூட்டணி அமைப்பது, பூத் கமிட்டி ஏஜெண்டுகள் அமைப்பது, கள நிலவரம் என்ன என்பதை ஆராய்வது, மக்கள் மனநிலை எப்படி இருக்கிறது என பல்வேறு விஷயங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் பாமகவில் இருக்கக்கூடிய உட்கட்சி விவகாரம் பூதாகரமாக வெடித்து வெளிவந்தது. அதனை தொடர்ந்து தற்போது தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்றே கூறலாம்.
கடந்த ஏப்ரல் 30 2025 அன்று தர்மபுரியில் பாலக்கோட்டில் தேமுதிகவின் செயற்குழு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் மறைந்த பின்பு நடைபெறும் முதல் பொதுக்குழு கூட்டம் அது. இது தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய விஷயங்கள் தீர்மானங்கள் மற்றும் முடிவுகள் எடுக்கப்பட்டது. குறிப்பாக தேமுதிகவின் இளைஞர் அணி செயலாளராக விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் நியமனம் செய்யப்பட்டார். அதேபோல் கட்சியின் பொருளாளராக எல்.கே சுதீஷ் நியமிக்கப்பட்டார்.
நல்லதம்பி எழுதிய கடிதம்:
இதனைத் தொடர்ந்து முன்னாள் இளைஞர் அணி செயலாளராக இருந்த நல்ல தம்பி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். பிரேமலதா விஜயகாந்திற்கு எழுதப்பட்ட இந்த கடிதத்தில் அவர் ஒரு சில முக்கிய விஷயங்களை குறிப்பிட்டுள்ளார். அதாவது அந்த கடிதத்தில் ” நான் ஏதாவது தவறு செய்திருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் இந்த இயக்கத்தில் இருந்து என்னை விடுவித்தாலும் என்றுமே நான் தங்களுடைய பிள்ளை என்றைக்கும் நான் கழகத்தின் கடை கோடி தொண்டன் என்பதை என் உதிரத்தின் ஒவ்வொரு துளியும் சொல்லும் என்பதை தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். எனவே கழகப் பொதுச் செயலாளர் கடந்த 30-4-2025 அன்று வெளியிட்ட கழக அறிவிப்பில் எனக்கு கழக உயர்மட்ட குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இப் பொறுப்பிலிருந்து என்னை விடுவிக்குமாறு தங்களை மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் அப்படி விடுவிக்கா பட்சத்தில் நான் கட்சியிலிருந்து விலகிக் கொள்வேன் என்று தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். இதனை நான் எந்தவிதமான வருத்தத்திலும் கூறவில்லை மன மகிழ்ச்சியோடு தான் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
நல்லதம்பி விளக்கம்:
எப்பொழுதும் போல காசுக்கு மாரடிக்கும் மீடியாக்கள் தங்களது வேலையை ஆரம்பித்துவிட்டார்கள்.
அண்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
உண்மை தொண்டர்கள் என்றும் இறுதி மூச்சு வரை கழகத்தை விட்டு போகமாட்டார்கள்.#nallathambi #dmdk #captain #PremalathaVijayakanth #politics #trending #dmdkitwing pic.twitter.com/0nKezCXxHJ
— மோ. அ. ஹரி ஹர சுதன் (தேமுதிக) (@HariHar05420396) May 3, 2025
இந்த கடிதம் வெளியானது பெரும் சர்ச்சைக்குள்ளான ஒரு விஷயமாக மாறி உள்ளது. அதாவது இளைஞர் அணி செயலாளர் பதவி விஜய பிரபாகரனுக்கு ஒதுக்கப்பட்டதில் நல்லதம்பிக்கு உடன்பாடு இல்லை என்றும் இதனால் தன்னை அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்க வேண்டும் இல்லை என்றால் தான் கட்சியில் இருந்து விலகிக் கொள்வதாக கடிதம் எழுதியுள்ளார். இந்த உட்கட்சி விவகாரம் தற்போது வெளியான நிலையில் பலரும் நல்ல தம்பி கட்சியிலிருந்து விலகுவதாக தகவல் தெரிவித்தனர். ஆனால் இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் எக்ஸ் தள பக்கத்தில் நல்லதம்பி அவர்கள் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் கட்சியிலிருந்து நான் விலகப் போவதில்லை என்றும் பொறுப்பில் இருந்து மட்டுமே விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதே நேரம் கடைசி மூச்சு இருக்கும் வரை, தான் கட்சி தொண்டனாக பணியாற்றுவார் என்றும் தெரிவித்துள்ளார். தேமுதிகவில் இருக்கும் உட்கட்சி விவகாரம் தற்போது வெளிவந்த நிலையில் இது அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது