நாளை உருவாகும் காற்றழுத்தம் தாழ்வுபகுதி.. தமிழகத்தில் வெளுக்கும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள்?

Tamil Nadu Weather Update : கர்நாடக கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுகிறது. இதன் காரணமாக, சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுக்கும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், கேரளாவில் இன்னும் 4 தினங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளது.

நாளை உருவாகும் காற்றழுத்தம் தாழ்வுபகுதி.. தமிழகத்தில் வெளுக்கும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள்?

மழை

Updated On: 

21 May 2025 07:09 AM

சென்னை, மே 21 : அரபிக்கடலில் 2025 மே 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக் கூடும் என வானிலை மையம் (tamilnadu weather update) தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2025 மார்ச் மாதத்தில் இருந்தே கோடை வெயில் இருந்தது. கோடை வெயில் வெளுத்து வாங்கியது. இதனால், பல்வேறு மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரியை கடந்து பதிவானது. 2025 மே முதல் வாரம் வரையுமே வெயிலின் தாக்கம் இருந்து வந்தது. அதன்பிறகு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னையிலும் கூட, மழை பெய்து வருகிறது. இதனால், வெப்பம் முழுவதுமாகவே தணிந்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டி வருகிறது.

நாளை உருவாகும் காற்றழுத்தம் தாழ்வுபகுதி

இன்னும் ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டால், இன்னும் மழையின் தாக்கம் அதிகமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த நிலையில், அடுத்த சில தினங்களுக்கான வானிலை நிலவரத்தை பார்ப்போம். அதாவது, தென்மேற்கு பருவமழை கேரளாவில் அடுத்த 4 தினங்களில் தொடங்குவதற்கான வாய்ப்புள்ளது.

அதே சமயத்தில் தமிழக்ததில் சில பகுதிகளிலும் பரவுவதற்கான வாய்ப்பு உள்ளது. மத்திய மேற்கு வங்கக் கடல் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரா பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல சுழற்சி நிலவுகிறது. கர்நாடக கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு பகுதியில் 2025 21ஆம் தேதி வாக்கில் ஒருவளி மணிடல மேலடுக்கு சுழற்சி உருவாகக் கூடும்.

இதன் காரணமாக, 2025 மே 22ஆம் தேதி அதே பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். பிறகு இது வடக்கு திசையில் நகர்ந்து வலுவடையக் கூடும். இதனால், தமிழகத்தில் 2025 மே 21ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வெளுக்கும் மழை

2025 மே 21ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை 34 முதல் 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 முதல் 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் கடந்த இரு தினங்களாகவே  பல்வேறு  இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.  மீனம்பாக்கம், கோயம்பேடு, வடபழனி, எழும்பூர் மற்றும் புறநகர் பகுதிகளிலும்  மழை பெய்து வருகிறது.