கோடையில் சிறப்பு வகுப்புகள்.. தனியார் பள்ளிகளுக்கு வார்னிங்.. பள்ளிக்கல்வித்துறை அதிரடி!
Summer Special Classes : தமிழகத்தில் கோடை விடுமுறையில் 2026ஆம் ஆண்டு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக புகார் எழுந்துள்ளது. இதனை அடுத்து, தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை தடை விதித்துள்ளது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

சென்னை, மே 03 : கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது என்று தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. உத்தரவை மீறும் பள்ளி நிர்வாகத்தின் மீது முதன்மைக் கல்வி அதிகாரி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் கோடை விடுமுறை மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் 1 முதல் 9ஆம் வகுப்புகளுக்கும், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது மாணவர்கள் கோடை விடுமுறையில் உள்ளனர். 2025 ஏப்ரல் மாதத்தில் மத்தியில் இருந்தே கோடை விடுமுறை தொடங்கிவிட்டது.
கோடையில் சிறப்பு வகுப்புகள்
1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2025 ஏப்ரல் 17ஆம் தேதி தேர்வு முடிந்ததை அடுத்து, 2025 ஏப்ரல் 18ஆம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்கியது. அதைத் தொடர்ந்து, 6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2025 ஏப்ரல் 24ஆம் தேதி கோடை விடுமுறை தொடங்கிவிட்டது. கோடை விடுமுறை முடிந்து, ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருக்கிறது.
கிட்டதட்ட 50 நாட்களுக்கு மேலாக கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், கோடை விடுமுறை பாதுகாப்பாக கழிப்பதற்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுரையும் வழங்கி இருக்கிறது. இதற்கிடையில், தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டததில் உள்ள தனியார் பள்ளிகள் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தி வருகிறது.
ஆண்டுதோறும் தனியார் பள்ளிகள் இதை செய்து வருகின்றனர். 2026ஆம் ஆண்டு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள், கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளுக்காக பள்ளிக்கு சென்று வருகின்றனர். சில பள்ளிகள் ஆன்லைனின் வகுப்புகளை நடத்துவதாக தெரிகிறது. இது தொடர்பாக புகார்களும் எழுந்துள்ளன.
தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு வார்னிங்
இந்த நிலையில் தான் தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது.அதாவது, கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது என்று தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், 2025 ஜூன் 1ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, அதுவரை தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகளை நடத்த கூடாது என பள்ளி முதல்வர்கள், தாளாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. உத்தரவை மீறி சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு மாணவர்கள் பாதிக்கப்பட்டால், பள்ளி நிர்வாகத்தின் மீது முதன்மைக் கல்வி அதிகாரி நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது. இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், “வரும் நாட்களில் வெப்பநிலை மேலும் உயரும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. எனவே, இந்த நேரத்தில் சிறப்பு வகுப்புகள் நடத்துவது சரியான அல்ல. இது மாணவர்களுக்கு உதவாது” என்று கூறினார்.