Health Tips: கோடையில் சர்க்கரை நோயாளிகள் இளநீர் குடிக்கலாமா..? இரத்த சர்க்கரையை அதிகரிக்குமா..?
Coconut Water Diabetes: சர்க்கரை நோயாளிகளுக்கு கோடை காலத்தில் மட்டுமல்லாமல், எல்லா பருவங்களிலும் இளநீர் நல்லதா என்பது பலரின் கேள்வி. இளநீரில் இயற்கை சர்க்கரை இருந்தாலும், அதன் அளவு குறைவு, கிளைசெமிக் குறியீடும் குறைவு. இதனால் இரத்த சர்க்கரை திடீரென அதிகரிப்பதில்லை. மேலும், இளநீரில் உள்ள பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் இதய ஆரோக்கியத்திற்கு உதவி செய்யும்.

கோடையில் (Summer) மட்டுமின்றி இளநீர் அனைத்து பருவ காலங்களிலும் மிகச்சிறந்த இயற்கை பானமாகும். அதிலும் குறிப்பாக கோடை காலத்தில் கிடைக்கும் மற்ற பானங்களை விட இளநீர் (Coconut Water) மிகவும் நல்லது. இளநீர் உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்குவதோடு மட்டுமல்லாமல், உடலை நீரேற்றமாகவும் வைக்க உதவுகிறது. இதனால், நீங்கள் வெயிலில் சென்று வரும்போது ஏற்படும் தலைசுற்றல், கிறக்கம், சோர்வு போன்றவற்றை சரிசெய்யும். இருப்பினும், சர்க்கரை நோயாளிகள் (Diabetics) கோடை காலத்தில் இளநீர் எடுத்துக்கொள்ளலாமா வேண்டாமா என்ற சந்தேகம் பலருக்கு உண்டு. அதனை பற்றிய முழு விவரங்களை இங்கு தெரிந்து கொள்வோம்.
இயற்கை பானம்:
இளநீரில் இயற்கையான சர்க்கரை உள்ளது. மேலும், இது சற்று இனிப்பாகவும் இருக்கும். சர்க்கரை நோயாளிகள் கோடைக்காலம் மட்டுமல்ல, எந்த பருவ காலத்திலும் தாராளமாக இளநீரை எடுத்துக்கொள்ளலாம். ஏனெனில், இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இளநீரில் சர்க்கரை அளவு குறைவாகவும், கிளைசெமிக் குறியீடு குறைவாகவும் உள்ளது. இதன் பொருள் இது இரத்த சர்க்கரையை மெதுவாக அதிகரிக்கிறது, திடீர் இரத்த சர்க்கரை அதிகரிப்பு அபாயத்தைக் குறைக்கிறது.
இளநீரில் இயற்கை சர்க்கரை உள்ளதா?
இளநீரில் இனிப்பு சுவை இயற்கையாகவே உள்ளது. அதாவது இளநீரில் உள்ள இனிப்பு சுவை குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் போன்ற சர்க்கரை கூறுகளிலிருந்து வருகிறது. ஒரு தடுத்தர அளவிலான இளநீரில் சுமார் 200 – 250 மில்லி தண்ணீரும், சுமார் 5-6 கிராம் இயற்கை சர்க்கரை உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், இளநீரை சக்கரை நோயாளிகள் தினமும் ஒன்று என்ற அளவில் தாராளமாக எடுக்கலாம்.
ஆரோக்கிய நன்மைகள்:
இளநீரில் பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம் போன்ற கூறுகள் உள்ளன. இவை இதயம் மற்றும் தசைகள் சிறப்பாக செயல்பட உதவி செய்யும். இளநீரில் அதிக அளவு கொழுப்பு இல்லை. மேலும், இதில் கலோரிகள் என்பது மிக குறைவு. அதன்படி, உடல் பருமனைக் குறைக்கவும் எடையைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது, இது நீரிழிவு நோய்க்கு மிகவும் முக்கியமானது. மேலும், இது உடலுக்கு தேவையாக குளிர்ச்சியையும் தருகிறது.
இளநீரில் உள்ள மெக்னீசியம் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் உடலின் இன்சுலின் பயன்படுத்தும் திறனை மேம்படுத்தும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சர்க்கரை நோயாளிகளும் இதில் உள்ள தேங்காய் பருப்பை சாப்பிடலாம். ஏனெனில் இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும் ஊட்டச்சத்துக்களால் நிறைந்துள்ளது. இளநீர் குடிப்பதால் உடலில் காணப்படும் குறைபாடுகள் நீங்கும். இது உடனடி ஆற்றலைத் தரும்.
(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TV9Tamil பொறுப்பேற்காது.)