கோடையில் அதிகம் உருவாகும் சிறுநீரக கற்கள் – என்ன காரணம்? தவிர்ப்பது எப்படி?
Prevent Kidney Stones : கோடைகாலத்தில் சிறுநீர் கற்கள் பிரச்னைகள் அதிகம் ஏற்படுகின்றன. உடலில் அதிக அளவு நீர் வியர்வை மூலம் வெளியேறுவதால் சிறுநீர் கழிக்கும் வாய்ப்பு குறைகிறது. இதன் காரணமாக சிறுநீரகக் கற்கள் உருவாகின்றன. இதற்கான காரணம் என்ன ? தவிர்ப்பது எப்படி? என இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

இன்றைய காலகட்டத்தில் சிறுநீரகக் கற்கள் (Kidney Stone) உருவாகும் நிலை மிகவும் சாதாரணமாகிவிட்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் இதன் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். கால்சியம், யூரிக் ஆசிட், ஆக்ஸலேட் போன்ற சில கனிமங்கள் உடலில் அதிகமாக சேரும் போது, அவை சிறுநீரில் கலந்து வெளியேற முடியாமல் படிப்படியாக சேர்ந்து, சிறு சிறு கற்களாக உருவாகின்றன. இது தான் சிறுநீரகக் கற்களின் ஆரம்ப நிலை. குறிப்பாக கோடைகாலம் (Summer) வந்துவிட்டாலே, உடலில் வெப்பம் அதிகரித்து வியர்வை வெளியேற ஆரம்பித்து விடுகிறது. இதனால் உடலில் தண்ணீரின் அளவு குறைந்து, சிறுநீர் கழிக்கும் வாய்ப்பு குறைகிறது. இதுதான் சிறுநீரகக் கற்கள் (Kidney Stones) உருவாகச் செய்யும் முக்கியமான காரணிகளில் ஒன்று.
சிறுநீரகக் கற்கள் ஏற்படும் போது ஏற்படும் அறிகுறிகள்
சிறுநீரகத்தில் கற்கள் உருவானால்வயிறு, அல்லது சிறுநீர்ப்பாதையில் கடும் வலியுடன் நோயாளி தவிப்பார். சில நேரங்களில் வாந்தி, மயக்கம் அல்லது சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் போன்ற பிரச்னைகள் தோன்றலாம். இரவுகளில் இந்த வலி அதிகரித்து தூக்கத்தை பாதிக்கும்.
சிறுநீரகக் கற்கள் ஏற்படுவதற்கான முக்கியமான காரணம் போதிய அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது தான். உடலில் நீரிழப்பு ஏற்படும் போது சிறுநீர் வெளியேறாமல் அதில் உள்ள கனிமங்கள் தங்கிவிடும். அதோடு அதிக உப்பு, தேநீர், சாக்லேட், கீரைகள் போன்ற உணவுகள் அதிகம் உட்கொள்ளப்பட்டாலும் இது ஏற்படலாம். குடும்பத்தில் யாருக்கேனும் இந்த பிரச்னை இருந்து அதன் மூலம் மரபணு மூலம் இந்த நோய் ஏற்படலாம். மேலும், தொடர்ச்சியான யூரினரி இன்ஃபெக்ஷன்களையும் சிறுநீரகக் கற்கள் உருவாக்கக்கூடும்.
சிறுநீரகக் கற்கள் உருவாவதற்கு காரணம்
வெயில் காலங்களில் சிறுநீர் கற்கள் ஏற்படுவதன் காரணம் குறித்து ஹிந்துஸ்டான் டைம்ஸ் இணையளத்துக்கு டாக்டர் ஹிமான்ஷு வர்மா பேட்டியளித்திருந்தார். சிறுநீரகக் கற்கள் ‘யூரொலிதியாஸிஸ்’ என்றும் அழைக்கப்படுகின்றன. இதன் அளவு மணல் துகளிலிருந்து கால்பந்து அளவுக்கே பெரிதாகலாம். உடலில் உள்ள நச்சுகள் வெளியேறாமல் கால்சியம் போன்ற கனிமங்கள் சிறுநீரகத்தில் சேருவதால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. ஆனால், இதை சுலபமாகத் தடுக்க முடியும். ஆரோக்கியமான உணவுமுறையும், வாழ்க்கை முறையும், போதுமான நீர் அருந்துவதன் மூலம் இதனை தடுக்கலாம்.
வெயில்காலத்தில் வியர்வை அதிகரிப்பதால் உடலில் நீர் வியர்வை மூலம் வெளியேறுகிறது. இதனால் சிறுநீர் வெளியேறுவது குறைந்து, கற்கள் உருவாவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. குறிப்பாக வேலைக்கு செல்பவர்கள் வெயிலில் செல்வதை தவிர்க்க முடியாது. அதனால் இந்த காலகட்டத்தில் வழக்கத்தை விட அதிக நீர் குடிக்க வேண்டும்.
சிறுநீர் கற்கள் உருவாவதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
-
உடலில் நீரிழப்பதைத் தவிர்க்க அதிகம் தண்ணீர் குடிக்கவும்.
-
சிறுநீரின் நிறத்தை கவனிக்கவும். கரும் மஞ்சள் நிறம் உடலில் நீர் குறைவாக இருக்கிறது என்று அர்த்தம். அதனால் உடனடியாக தண்ணீர் குடிக்க வேண்டும்.
-
பசலைக்கீரை, பீட்ரூட் போன்ற ஆக்ஸலேட் நிறைந்த உணவுகளைத் தவிர்க்கவும்.
-
இந்த காலகட்டத்தில் அதிக உப்பும் நான் வெஜ் உணவுகளையும் தவிர்க்கவும்.
-
கூல்டிரிங்ஸ் போன்ற செயற்கை பானங்களை தவிர்க்கவும்.