மொபைல் கேமிங்கில் மூழ்கும் இந்திய Gen Z இளைஞர்கள் – அதிர்ச்சி தரும் சமீபத்திய ஆய்வு
Mobile Gaming Craze : இந்திய Gen Z இளைஞர்களில் 74 சதவிகிதம் பேர் மொபைல் கேமிங்கில் அதிக நேரத்தை செலவிடுவதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும் கேமிங்கிற்காக ஸ்மார்ட்போன் தேர்வில் அதன் செயல்திறனையும் சிப்செட் தரத்தையும் முக்கியமாக கருதி வருகின்றனர். இந்த ஆய்வு முடிவுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

பெரும்பாலான இளைஞர்கள் இன்று மொபைல் கேமிங்கிற்கு அடிமையாகியிருக்கிறார்கள். கடந்த ஜனவரி 31, 2025 அன்று ஹரியானாவை (Haryana) சேர்ந்த ஒரு 15 வயது சிறுவன் தன்னை குடும்பத்தினர் மொபைல் போன் கேம் (Mobile Gaming)விளையாட தடை செய்ததால் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அந்த அளவுக்கு மொபைல் கேம் அவர்களின் மனதை ஆக்கிரமித்திருக்கிறது. இந்திய இளைஞர்களின் அன்றாட வாழ்கையில் முக்கியமான ஓர் பகுதியாக மொபைல் கேம் ஆகிவிட்டது. தினமும் கேம்ஸ் விளையாடுவது அதனை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வது என அவர்களிடையே பரவும் டிரெண்டாக மாறியிருக்கிறது. குறிப்பாக ஜென் சி (Gen Z) எனப்படும் இளைய தலைமுறையினருக்கு அது ஒரு தினசரி செயல்பாடாக மாறியிருக்கிறது.
மொபைல் கேமிங்கிற்கு அடிமையான ஜென் சி இளைஞர்கள்
இதனை உறுதி செய்யும் வகையில், சைபர் மீடியா ரிசர்ச் (CyberMedia Research) நடத்திய சமீபத்திய ஆய்வில், 13 வயது முதல் 28 வயது வரை உள்ள இளைஞர்கள் அதிக நேரம் மொபைல் கேம் விளையாடுவதாக தெரியவந்திருக்கிறது. குறிப்பாக, 74 சதவிகிதம் பேர் வாரத்திற்கு குறைந்தது 6 மணி நேரத்துக்கு மேல் கேம்ஸ் விளையாடுவதாக கூறியுள்ளனர். அதிலும் 32 சதவிகிதம் பேர் வாரத்திற்கு நான்கு முதல் ஆறு மணி நேரம் மொபைலில் கேமிங் விளையாடுகிறார்கள் என்றும் சர்வே கூறுகிறது. ஃப்ரீ ஃபைர் (Free Fire) மற்றும் பேட்டில் கிரௌண்ட் (Battle Ground) ஆகியவை, தீவிரமாக கேம் விளையாடுபவர்கள் அதிகம் விரும்பும் கேம்களாக கண்டறியப்பட்டுள்ளன.
கேமிங்கிற்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
இன்றைய இளம் தலைமுறையினர் இதற்கு ஏற்ப மொபைல் போன்களை தேர்ந்தெடுக்கின்றனர். மொபைல் போன்கள் சிப்செட் பார்த்து தேர்ந்தெடுத்து பயன்படுத்துகின்றனர். சைபர் மீடிய ரிசர்ச் ஆய்வில் இந்தியாவில் உள்ள ஜென் சி இளைஞர்கள் ஸ்மார்ட்போன்களை தேர்வு செய்யும் போது, அதில் பயன்படுத்தப்படும் சிப்செட்டின் திறன், செயல்திறன் மற்றும் பிராண்டின் மதிப்பு ஆகியவற்றை முக்கியமாக கருதுகின்றனர். இந்த ஆய்வில் பங்கேற்றவர்களிடம், MediaTek Dimensity மற்றும் Qualcomm Snapdragon சிப்செட்டுகளை அதிகம் விரும்புகின்றனர்.
ஆன்லைன் கேமிங்கால் ஏற்படும் பிரச்னை
இந்த ஆய்வு முடிவுகள் நாட்டில் இளைஞர்கள் கேமிங்கிற்கு அடிமையாகும் நிலை அதிகரித்திருப்பதை காட்டுகிறது. குறிப்பாக பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் கேமிங் செயலிகளும் அதிகரித்திருக்கின்றன. அதில் மக்கள் தங்கள் அனைத்து சேமிப்புகளையும் இழக்கிறார்கள். மேலும் கடன் வாங்கி விளையாடுகிறார்கள். இதனால் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு தள்ளப்படுகிறார்கள். இத்தகைய ஆன்லைன் கேம்களை தட செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மொபைல் கேமிங் இந்திய இளைஞர்களிடையே ஒரு பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி, அது அவர்களது வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறிவிட்டது. இது கவலைக்குரிய விஷயமாக மாறியிருக்கிறது. இதனால் மன அழுத்தம், பார்வைக் குறைபாடு போன்ற பிரச்னைகளை சந்தித்து வருகிறார்கள். எனவே இதனை கட்டுப்படுத்துவது அவசியம்.