Covid 19 : தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள்?.. பொது சுகாதாரத்துறை விளக்கம்!

Tamil Nadu Coronavirus Situation | உலகின் பல்வேறு பகுதிகளில் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ள நிலையில், தமிழகத்திலும் தொற்று பரவல் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா என பொதுமக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ள நிலையில், தமிழக பொது சுகாதாரத்துறை அது குறித்து விளக்கம் அளித்துள்ளது.

Covid 19 : தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள்?.. பொது சுகாதாரத்துறை விளக்கம்!

மாதிரி புகைப்படம்

Published: 

24 May 2025 07:59 AM

சென்னை, மே 24 : தமிழகத்தில் கொரோனா (Corona) பாதிப்பு அச்சுறுத்தும் வகையில் இல்லாததால் கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை என்று பொது சுகாதாரத்துறை (Health Department) அறிவித்துள்ளது. ஆனால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்று அச்சம் நிலவி வருகிறது. இந்த நிலையில், பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் சுகாதாரத்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது குறித்து, சுகாதாரத்துறை கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மீண்டும் வேகம் எடுக்கும் கொரோனா தொற்று பரவல்

சீனாவின் வூகான் மாகாணத்தில் 2019 ஆம் ஆண்டு உருவான கொரோனா வைரஸ் படிப்படியாக உலகம் முழுவதும் பரவி கடும் சவால்களை ஏற்படுத்தியது. கோடிக்கணக்கான மக்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில், லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இந்த நிலையில், உயிர் பலி எண்ணிக்கைகளை கட்டுப்படுத்தும் வகையிலும், தொற்று பரவலை தடுக்கும் வகையிலும் உலகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி அவர்கள் வீட்டு சிறையில் வைக்கப்பட்டனர்.

அதன் பின்னர் தடுப்பூசிகள் போடப்பட்ட சரியாக ஒரு ஆண்டு கழித்து உலகம் மெல்ல மெல்ல இயல்புக்கு திரும்பியது. இந்த நிலையில், உலகின் பல்வேறு பகுதிகளில் கொரொனா தொற்று பாதிப்பு மீண்டு அதிகரித்துள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக ஹாங்காங், சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட பகுதிகளிலும், கேரளா மற்றும் தமிழகத்திலும் தொற்று பரவல் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் அமலுக்கு வருமா என பொதுமக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது. இந்த நிலையில் தான், பொது சுகாதாரத்துறை அது குறித்து விளக்கம் அளித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் – பொது சுகாதாரத்துறை விளக்கம்

இது குறித்து கூறியுள்ள பொது சுகாதாரத்துறை தமிழகத்தில் தற்போது பரவி வருவது வழக்கமான கொரோனா பாதிப்பு என்றாலும், திடீரென அதன் தாக்கம் உயர்ந்திருப்பது மக்கள் இடையே சிறு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு முன்பு அரசு சார்பில் பரவலாக மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனைகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன. தனியார் மருத்துவமனைகளிலும்,  மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும் எடுக்கப்படும் குறைந்தபட்ச எண்ணிக்கையிலான பரிசோதனைகளிலேயே பாதிப்புகள் ஆங்காங்கே பதிவாவது உறுதி செய்யப்படுகிறது. இதன் காரணமாக மருத்துவ பரிசோதனையை விரிவுபடுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ள நிலையில் அதற்கான அவசியம் தற்போது இல்லை என பொது சுகாதாரத் துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.