Tamilisai Soundararajan: அதிமுக – பாஜக கூட்டணி மகிழ்ச்சியான கூட்டணி.. தமிழிசை சௌந்தரராஜன் பெருமிதம்!
Tamil Nadu 2026 Elections: 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி மற்றும் திமுக கூட்டணியின் அரசியல் நகர்வுகள் குறித்த விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன. தமிழிசை சௌந்தரராஜன் அதிமுக-பாஜக கூட்டணியை மகிழ்ச்சியான கூட்டணி என கூறியுள்ளார். திமுக கூட்டணி காங்கிரஸுடன் கூட்டணி அமைத்தது குறித்த விளக்கம் தேவை எனவும் அவர் கூறியுள்ளார். நடிகர் விஜயின் அரசியல் நுழைவு மற்றும் அவரது கூட்டணி தீர்மானம் தேர்தல் முடிவுகளை பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழிசை சௌந்தரராஜன் - எடப்பாடி பழனிசாமி
சென்னை, மே 4: தமிழ்நாட்டில் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் (2026 Assembly Election) நடைபெறவுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது ஆளும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான கூட்டணி கட்சியை வீழ்த்துவதற்காக பாரதிய ஜனதா கட்சியுடன் (BJP) மீண்டும் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கூட்டணி அமைத்தது. அதேநேரத்தில், திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளும் மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற முனைப்பில் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றன. மேலும், நடிகர் விஜய் (Actor Vijay) தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் எந்த கட்சியுடனாவது கூட்டணி வைக்குமா..? அப்படி வைத்தால் யாருடன் வைக்கும் என்ற எதிர்பார்ப்புகளும் உள்ளது. இந்தநிலையில், அதிமுக – பாஜக இடையிலான கூட்டணி மகிழ்ச்சியான கூட்டணி என முன்னாள் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன்:
அதிமுக – பாஜக கூட்டணி குறித்து செய்தியாளர்களை சந்தித்து முன்னாள் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் கூறியதாவது, “அதிமுகவிற்கு அதிக அழுத்தத்தை கொடுத்து பாஜக கூட்டணி வைத்து கொண்டதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்கிறார். ஆனால், உண்மையில் அவர்தான் அழுத்தத்தில் இருக்கிறார். அதேபோல், எந்த அழுத்தத்தின் பேரில் நீங்கள் காங்கிரஸுடன் கூட்டணி வைத்துள்ளீர்கள்.
உங்கள் ஆட்சியை கலைத்தது காங்கிரஸ், உங்களை எமர்ஜென்சி நேரத்தில் சிறையில் அடைத்தது காங்கிரஸ், இலங்கையில் நம் தமிழ் சொந்தங்களை கொன்றது காங்கிரஸ் இப்படியான சூழ்நிலையில் எப்படி கூட்டணி வைத்தீர்கள். ராஜ மன்னார் கமிட்டி என்று ஒன்றை ஆரம்பித்தார்கள், 2 வருடத்தில் அவர்கள் கொடுத்த எதையும் பின்பற்றவில்லை. இப்படி எதன் அடிப்படையில் காங்கிரஸுடன் கூட்டணி வைத்தீர்கள் என்று திமுக விளக்க வேண்டும். அதிமுக – பாஜக கூட்டணி வைத்ததில் இருந்து அண்ணன் ஸ்டாலின், மிகுந்த அழுத்தத்தில் உள்ளார். அதனால், இந்த அழுத்தத்தில் பாஜக – அதிமுக கூட்டணி ஏற்பட்டதாக கூறுகிறார். அதிமுக – பாஜக கூட்டணி அழுத்தத்தில் இல்லை, மகிழ்ச்சியாகவே உள்ளது” என்று தெரிவித்தார்.
முன்னதாக, பாஜக – அதிமுக கூட்டணி குறித்து பேசிய தமிழிசை சௌந்தரராஜன், “அதிமுக – பாஜக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி அல்ல, இது திமுகவின் தவறான நிர்வாகத்திலிருந்து தமிழ்நாட்டை மீட்பதற்காக கட்டமைக்கப்பட்ட கூட்டணி. மக்கள் தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்பதை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். மேலும், அவர்கள் மாற்றத்திற்கு தயாராக உள்ளனர்.
ஒரு அரசியல்வாதியாக எனது பங்கு அதிகாரத்தில் இருந்துகொண்டு தவறு செய்பவர்களை கேள்வி கேட்பதுதான். நான் தீவிர அரசியலுக்கு திரும்பி தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்ய விரும்பிய காரணத்திற்காக, ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தேன். அதுதான் எனது வேலை.” என்று தெரிவித்தார்.