தூத்துக்குடியில் புதிய அனல் மின் நிலையம் அமைத்தால் மின் கட்டணம் உயருமா? CRH ஆய்வில் சொல்வது என்ன?
Coal Power Plant In Tuticorin: CRH ஆய்வின்படி, முன்மொழியப்பட்டுள்ள 2x800 மெகாவாட் அனல் மின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் செலவு, செயல்பாட்டு அளவைப் பொறுத்து ஒரு யூனிட்டுக்கு ரூ.8.75 முதல் ரூ.10.40 வரை இருக்கும். ஆனால், எட்டு மணி நேர பேட்டரி சேமிப்புடன் கூடிய சூரிய மின்சாரத்தின் செலவு ஒரு யூனிட்டுக்கு ரூ.5 மட்டுமே என மதிப்பிடப்பட்டுள்ளது.
அக்டோபர் 22, 2026: தூத்துக்குடியில் முன்மொழியப்பட்டுள்ள 1,600 மெகாவாட் நிலக்கரி அனல் மின் நிலையத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், சூரிய ஒளி மின்சாரம் மற்றும் பேட்டரி சேமிப்புடன் ஒப்பிடும்போது அதிக விலை கொண்டதாக இருக்கும் என கிளைமேட் ரிஸ்க் ஹொரைசன்ஸ் (Climate Risk Horizons – CRH) அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய அனல் மின் நிலையங்களை அமைப்பது தமிழ்நாட்டின் மின்துறை நிதிச்சுமையை அதிகரிக்கக்கூடும் என்றும் அந்த ஆய்வு எச்சரித்துள்ளது.
ஒரு யூனிட் மின்சாரத்திற்கு ரூ.10.40 வரை செலவு!
தமிழகத்தில் அதிகரித்து வரும் மின்தேவையைப் பூர்த்தி செய்வதற்காக தூத்துக்குடியில் இரண்டு புதிய நிலக்கரி அனல் மின் நிலையங்கள் அமைக்கப்படும் என முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் ஆகஸ்ட் 31ஆம் தேதி சட்டப்பேரவையில் அறிவித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையே, அக்டோபர் மாதத்தில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35 வரை கொள்முதல் செய்யப்பட்டதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: மதுரை – குருவாயூர் விஸ்டாடோம் கண்ணாடி கூரை ரயில் சேவை தொடக்கம்.. இயற்கை அழகை ரசிக்கலாம்!!
CRH ஆய்வின்படி, முன்மொழியப்பட்டுள்ள 2×800 மெகாவாட் அனல் மின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் செலவு, செயல்பாட்டு அளவைப் பொறுத்து ஒரு யூனிட்டுக்கு ரூ.8.75 முதல் ரூ.10.40 வரை இருக்கும். ஆனால், எட்டு மணி நேர பேட்டரி சேமிப்புடன் கூடிய சூரிய மின்சாரத்தின் செலவு ஒரு யூனிட்டுக்கு ரூ.5 மட்டுமே என மதிப்பிடப்பட்டுள்ளது.
10 ஆண்டுகளில் ரூ.31,725 கோடி சேமிக்க வாய்ப்பு!
புதிய நிலக்கரி மின் நிலையத்திற்கான மூலதனச் செலவு ரூ.20,800 கோடியாகவும், மாற்றாக முன்மொழியப்படும் 3,490 மெகாவாட் சூரிய மின்சாரம் மற்றும் 9,067 MWh பேட்டரி சேமிப்புத் திட்டத்திற்கான செலவு ரூ.27,289 கோடியாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.
இருப்பினும், மின்சார உற்பத்திச் செலவு குறைவாக இருப்பதால், சூரிய மின்சாரம் மற்றும் பேட்டரி சேமிப்புத் திட்டத்தைத் தேர்வு செய்வதன் மூலம் முதல் ஆண்டிலேயே சுமார் ரூ.3,372 கோடி சேமிக்க முடியும் என ஆய்வு தெரிவிக்கிறது. மேலும், ஐந்து ஆண்டுகளில் ரூ.16,384 கோடியும், பத்து ஆண்டுகளில் ரூ.31,725 கோடியும் சேமிக்க வாய்ப்புள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: சென்னை லைட் ஹவுஸ் முதல் அடையாறு திருவிக பாலம் வரை 4 கி.மீ. உயர்மட்ட மேம்பாலம்! டெண்டர் கோரிய அரசு..
புதிய அனல் மின் நிலையம் செயல்பாட்டுக்கு வந்தால், முதல் ஆண்டில் ரூ.4,120 கோடியும், முதல் ஐந்து ஆண்டுகளில் சுமார் ரூ.20,000 கோடியும் நிலையான செலவுகளாகச் செலுத்த வேண்டியிருக்கும் என்றும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
பேட்டரி சேமிப்புத் திட்டத்தை ஊக்குவிக்க வலியுறுத்தல்!
தமிழ்நாடு மின்துறையின் கடன் ரூ.2.47 லட்சம் கோடியாக உள்ள நிலையில், அதிக செலவு கொண்ட புதிய நிலக்கரி மின் நிலையங்களுக்குப் பதிலாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களில் முதலீடு செய்வது சிறந்தது என CRH இயக்குநரும் ஆய்வின் இணை ஆசிரியருமான ஆஷிஷ் பெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார். மேலும், ஒன்றிய அரசின் மின்கல சேமிப்புக்கான நிதி ஆதரவுத் திட்டத்தையும் பயன்படுத்திக்கொள்ளலாம் என ஆய்வு பரிந்துரைக்கிறது.
தூத்துக்குடியில் ஏற்கெனவே நிலவும் தொழிற்சாலை மாசுபாட்டைக் கருத்தில் கொண்டு, சூரிய மின்சாரம் மற்றும் பேட்டரி சேமிப்புக்கு முன்னுரிமை அளிப்பது சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் மின்சாரச் செலவைக் குறைப்பதற்கும் உதவும் என அந்த அறிக்கை வலியுறுத்துகிறது.