NEET Exam Restrictions: தாலியை கழற்றி வைத்துவிட்டு தேர்வு! வரலாறு காணாத அத்துமீறல்.. மா.சுப்பிரமணியன் கடும் கண்டனம்!
Minister Ma. Subramanian: நீட் யுஜி தேர்வில் அமலில் இருந்த கட்டுப்பாடுகள் குறித்து தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மாணவிகளின் புர்கா, நகை, தாலி அகற்றப்பட்டதையும், கண்டிப்புடன் பின்பற்றப்பட்ட விதிகளையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த கட்டுப்பாடுகள், 40க்கும் மேற்பட்ட மாணவர்களின் உயிரிழப்புக்குக் காரணமாக அமைந்த நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாட்டின் போராட்டத்தை மேலும் வலுப்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை, மே 5: நீட் யுஜி தேர்வு (NEET UG Exam) நேற்று (மே 4, 2025) இந்தியா முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு மத்தில் நடைபெற்றது. நீட் தேர்வு எழுத வந்த மாணவ, மாணவிகள் அணிந்திருந்த நகைகள், ருத்ராட்சம், கயிறு உள்ளிட்டவை கழட்டியே பிறகே, தேர்வு எழுத அனுமதி அளித்தார்கள். மேலும், நீட் தேர்வு எழுத வந்த முஸ்லிம் மாணவிகளின் புர்காவையும் அகற்ற சொன்ன விவகாரம் பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. அதேபோல், பெண்களின் சட்டைகளில் இருந்த பட்டன் முதற்கொண்டு கட் செய்யப்பட்டதும் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியது. இந்தநிலையில், தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் (Minister Ma. Subramanian) நீட் தேர்வு கட்டுப்பாடுகள் குறித்து கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் கருத்து:
இதுகுறித்து தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது, “தாலியை கழற்றி வைத்துவிட்டு தேர்வெழுத வேண்டும் என்ற விதிமுறை எல்லாம் வரலாறு காணாத அத்துமீறல். இன்றைக்கு மாணவிகளின் தாலியை கழட்டி, கணவரிடம் கொடுப்பது என்பதெல்லாம், மிகப்பெரிய துர்பாக்கிய நிலை. நேற்று, பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், நீட் நீட்டாக நடந்து கொண்டிருக்கிறது என்று தெரிவித்தார். இது புலமைமிக்க வார்த்தைகளை எளிதாக சொன்னாலும், நீட் என்பது பாஜகவால்தான் வந்தது என்பது நாட்டு மக்கள் அறிவார்கள்.
நீட் தேர்வினால் இதுவரை 40க்கு மேற்பட்டோர் தமிழ்நாட்டில் உயிரிழந்திருக்கிறார்கள் என்பதையும் நாடு அறியும். தமிழ்நாட்டில் நீட் விலக்கு ஏற்பட வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ளும் நடவடிக்கைகளையும் நாடு அறியும். இந்த நடவடிக்கைகளுக்கு எல்லாம் மத்திய பாஜக அரசு முட்டுக்கட்டையாக இருப்பது மட்டுமல்லாமல், அதை நியாயப்படுத்தியும் வருகிறார்கள்.
தமிழ்நாட்டின் முன்னாள் மறைந்த முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி மருத்துவத்தில் 15% சதவீத இடஒதுக்கீட்டை, நீட் இல்லாதபோது குறிப்பிட்ட சமுதாய மாணவர்களுக்கு தந்தார்கள். ஆனாலும், அதற்கு உயர்நீதிமன்றம் சார்பில் தடை விதிக்கப்பட்டது. இது 2007-08 ம் ஆண்டுகளில் நடைபெற்ற நிகழ்வுகள். தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 10.5 சதவீதத்தை ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்களுக்கு பெற்று தந்தார். அந்த வழக்கும் தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
7.5 சதவீதம் என்பது சட்டரீதியாக ஏற்று கொள்ளப்பட்ட ஒன்று. இந்த 7.5 சதவீதத்தால் தமிழ்நாட்டில் பலரும் பயனடைந்துள்ளார்கள். இதன் காரணமாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவம், சட்டம் போன்ற துறைகளில் 7.5 சதவீதம் கொடுத்து கிராமப்புற மாணவர்கள் பயனடையும் வகையில் செய்துள்ளார். அதன் காரணமாக, அவசரமாக எந்த சட்டங்களையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறப்பிக்கப்படவில்லை” என்று தெரிவித்தார்.