பெரியார் நூலக கட்டிடத்தில் கண் திருஷ்டி படம் ஏன்? அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்
Coimbatore Periyar Library Building : தமிழக அரசு சார்பில் கோவை காந்திரபுரத்தில் கட்டப்பட்டு வரும் நூலகத்தின் நுழைவு வாயிலில் பெரிய கண் திருஷ்டி படம் வைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், அந்த படம் அகற்றப்பட்டது. இது தொடர்பாக பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு விளக்கம் அளித்துள்ளார்.

அமைச்சர் எ.வ.வேலு
கோவை, ஜூலை 19 : கோவை மாவட்டத்தில் தமிழக சார்பில் கட்டப்பட்டு வரும் பெரியார் நூலக கட்டிடத்தில் கண் திருஷ்டி படம் வைக்கப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை அடுத்து, கண் திருஷ்டி படம் அகற்றப்பட்டது. இந்த நிலையில், இது தொடர்பாக அமைச்சர் எ.வ.வேலு விளக்கம் அளித்துள்ளார். கோயம்புத்தூர் மாவட்டம் காந்திரபுரத்தில் பெரியார் நூலகம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. ரூ.245 கோடி மதிப்பில் 6 ஏக்கர் பரப்பளவில் இந்த நூலகம் அமைய உள்ளது. இதற்கான கட்டுமான பணிகளும் நடந்து வருகிறது. 2026ஆம் ஆண்டு இந்த நூலகம் திறக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதற்கு ஏற்றவாறு பணிகளும் நடந்து வருகிறது. இந்த நிலையில் தான், 2025 ஜூலை 19ஆம் தேதியான இன்று பெரியார் நூலகம் கட்டப்பட்டு வரும் நுழைவு வாயிலில் கண் திருஷ்டி படம் வைக்கப்பட்டிருந்தது.
பெரியார் நூலக கட்டிடத்தில் கண் திருஷ்டி படம் ஏன்?
இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பேசும் பொருளாக மாறியது. மேலும், பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் கோவை ராமகிருஷ்ணன் கண்டனமும் தெரிவித்து இருந்தார். மேலும், பெரியார் அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன. இதனை அடுத்து, அந்த படம் அகற்றப்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து செய்தியாளர்கள் பொதுப் பணித்துறை எ.வ.வேலுவிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அவர், “நூலக கட்டிடத்தில் கண் திருஷ்டி படம் வைத்தது எனது கவனத்திற்கு வரவில்லை. நானே ஒரு பெரியாரிஸ்ட், பகுத்தறிவாளன்.
Also Read : அதிமுக பாஜக கூட்டணியில் குழப்பமா? அண்ணாமலை சொன்ன முக்கிய விஷயம்!
இதனால், இதுபோன்ற விஷயத்தை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால், கட்டடம் கட்ட வருபவர்கள் எல்லாம் பெரியாரிஸ்டாக இருக்க வேண்டும் என நாம் எதிர்பார்க்க முடியாது. அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கையின் அடிப்படையில் கண் திருஷ்டி படத்தை வைத்திருக்கலாம். கண் திருஷ்டி படம் வைக்க வேண்டும் என ஒப்பந்தத்தில் குறிப்பிடவில்லை.
எனவே, அவரது நம்பிக்கைக்கு அவர் வைத்துள்ளார். எனவே, கட்டடங்கள் முழுமை பெறும்போது அது போன்று இருக்காது” என தெரிவித்துள்ளார். மூட நம்பிக்கைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்தவர் பெரியார். இவரின் சமூக சீர்திருத்த கொள்கைகள் தமிழகத்திற்கு புதிய பாதையை அமைத்து தந்தது.
Also Read : கடலூர்: மகிழ்ச்சியாக வாழட்டும்.! காதலுடன் மனைவியை அனுப்பி வைத்த கணவர்..
இன்றளவு திராவிட கட்சிகள் இங்கு ஆதிக்கம் செலுத்துவதற்கு பெரியார் வகுத்த கொள்கைகளே காரணம். இப்படியிருக்க, பெரியார் என பெயர் வைக்கப்பட்ட நூலகத்தில் கண் திருஷ்டி புகைப்படம் வைக்கப்பட்ட சம்பவம் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.