முழு நேர சினிமா விமர்சகராக மாறிய முதல்வர் ஸ்டாலின் – எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்..
Edappadi Palaniswami: மழையால் நெல் முளைத்துப் போய், தாங்கள் உழைத்து பயிரிட்ட விவசாயிகளின் துயரங்கள் பற்றி கொஞ்சம் கூட யோசிக்காமல், பைசன் படம் பார்க்க மணிக்கணக்கில் நேரம் செலவழித்துக் கொண்டு இருக்கிறீர்கள் என எடப்பாடி பழனிசாமி, முதல்வர் ஸ்டாலினை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

கோப்பு புகைப்படம்
சென்னை, அக்டோபர் 26, 2025: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பைசன் திரைப்படத்தை பார்த்ததற்காக, அதிமுக பொதுச் செயலாளர் மற்றும் தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சனங்களை முன்வைத்துள்ளார். குறிப்பாக, “நாற்று நட்ட கைகளில் மழையில் நனைந்து முளைத்திருந்த நெல்லைப் பிடித்த போது, விவசாயிகளின் விவரிக்க முடியாத வேதனையை உணர்ந்தேன். ஆனால், இந்த நெல்லைப் பிடித்திருக்க வேண்டிய முதல்வரின் கை, படக்குழுவினரின் கையைப் பற்றிக் கொண்டிருக்கிறது,” என குறிப்பிட்டுள்ளார்.
நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ததன் காரணமாக ஏக்கர் கணக்கில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி, விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கொள்முதலுக்காக வைக்கப்பட்டிருந்த நெற்பயிர்கள் முளைத்ததால், விவசாயிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். மேலும், சரியான நேரத்தில் நெல் கொள்முதல் செய்யப்படாததே இதற்குக் காரணம் எனவும் அவர்கள் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர்.
மேலும் படிக்க: சென்னைக்கு 790 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ள புயல்.. 28 ஆம் தேதி தீவிர புயலாக கரையை கடக்கும்..
இந்த சூழலில், தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பாதிக்கப்பட்ட விளைநிலங்களை நேரில் பார்வையிட்டு, விவசாயிகளுக்கு ஆறுதல் தெரிவித்து வருகிறார். இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அக்டோபர் 25, 2025 அன்று மாரி செல்வராஜ் இயக்கிய பைசன் திரைப்படத்தை பார்த்து, இயக்குநருக்கு பாராட்டு தெரிவித்திருந்தார். இதனை கடுமையாக விமர்சித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
முழு நேர சினிமா விமர்சகராக மாறிய முதல்வர் ஸ்டாலின்:
நாற்று நட்ட கைகளில், மழையில் நனைந்து முளைத்திருந்த நெல்லைப் பிடித்த போது, விவசாயிகளின் விவரிக்க முடியாத வேதனையை உணர்ந்தேன்.
ஆனால், இந்த நெல்லைப் பிடித்திருக்க வேண்டிய முதல்வர் @mkstalin-ன் கை, படக்குழுவினரின் கைகளைப் பற்றிக் கொண்டிருக்கிறது.
திரைப்படங்களை பார்ப்பதிலோ, திறமையான… pic.twitter.com/zmBIuEXJsE
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) October 26, 2025
இது தொடர்பான தனது வலைதள பதிவில், நாற்று நட்ட கைகளில், மழையில் நனைந்து முளைத்திருந்த நெல்லைப் பிடித்த போது, விவசாயிகளின் விவரிக்க முடியாத வேதனையை உணர்ந்தேன். ஆனால், இந்த நெல்லைப் பிடித்திருக்க வேண்டிய முதல்வரின் கை, படக்குழுவினரின் கைகளைப் பற்றிக் கொண்டிருக்கிறது.
திரைப்படங்களை பார்ப்பதிலோ, திறமையான திரைப்பட குழுவினரை பாராட்டுவதிலோ எந்த தவறும் இல்லை, ஆனால் தான் எதற்கு முதல்வர் ஆனோம்? என்பதையே மறந்துவிட்டு, முழுநேர சினிமா விமர்சகராக மாறிவிட்டார் இன்றைய பொம்மை முதல்வர் என்பதுதான் கவலை அளிக்கிறது,
மேலும் படிக்க: அதிகரிக்கும் இரிடியம் மோசடி.. சிபிசிஐடி அதிரடி சோதனை.. 50 பேர் கைது..
படம் பார்க்க மணிக்கணக்கில் நேரம் செலவழித்த முதல்வர்:
தென் தமிழகம் மழையில் மிதந்த போது, கூட்டணி பேச்சுவார்த்தைக்கு டெல்லி பறந்தவர் தானே நீங்கள்? தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தின் போது கூலி திரைப்படம் பார்த்தவர் தானே நீங்கள்? அதே போலத் தான், இப்போதும் மழையால் நெல் முளைத்துப் போய், தாங்கள் உழைத்து பயிரிட்ட விவசாயிகளின் துயரங்கள் பற்றி கொஞ்சம் கூட யோசிக்காமல், பைசன் படம் பார்க்க மணிக்கணக்கில் நேரம் செலவழித்துக் கொண்டு இருக்கிறீர்கள்.
விவசாயிகளின், மக்களின் கண்ணீரை உணராத இந்த குடும்ப மன்னராட்சியாளர்களுக்கு, மக்களாட்சியின் சக்தியை உணர்த்தப் போகும் நாள் வெகு தொலைவில் இல்லை!