தேர்தலை சந்திக்க தயாராகும் தேமுதிக.. பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்..

DMDK Meeting: தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் இளைஞரணி செயலாளராக மறைந்த விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், பொருளாளராக எல்.கே சுதீஷ் நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த ஆண்டு வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்க்கொள்ளும் வகையில் இந்த மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலை சந்திக்க தயாராகும் தேமுதிக.. பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்..

தேமுதிக பொதுக்குழு கூட்டம்

Published: 

01 May 2025 20:10 PM

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர் விஜயகாந்த் மறைவிற்குப் பிறகு முதல் முறையாக அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் இந்த கூட்டம் தர்மபுரியில் இருக்கக்கூடிய பாலக்கோட்டில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. அதாவது தேமுதிகவின் இளைஞர் அணி செயலாளராக விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் தேமுதிக பொருளாளராக எல்.கே சுதீஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் வர இருக்கும் நிலையில் தேமுதிகவில் இந்த முக்கிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் இந்த கூட்டத்தில் அடுத்த ஆண்டு தேர்தலை சந்திப்பதற்கான பல முக்கிய விஷயங்களும் ஆலோசிக்கப்பட்டது.

தேசிய முற்போக்கு திராவிட கழகம் கடந்து வந்த பாதை:

தேசிய முற்போக்கு திராவிட கழகம் 2005 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மதுரையில் விஜயகாந்தால் தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2006 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டது. தேர்தலை சந்தித்த முதல் களத்திலேயே விருதாச்சலம் தொகுதியில் விஜயகாந்த் தனித்து நின்று போட்டியில் வெற்றி பெற்றார். தேமுதிகவிலிருந்து முதல் ஆளாக இந்த தேர்தல் மூலம் சட்டமன்றத்திற்குள் விஜயகாந்த் காலடி எடுத்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் மீண்டும் தனித்துப் போட்டியிட்டு களத்தை சந்தித்தது, இந்த தேர்தலில் 40 தொகுதியிலும் தோல்வி அடைந்தாலும் சுமார் 10 சதவீத வாக்குகள் பெற்றது தேமுதிக. இது பிற அரசியல் கட்சிகளை திரும்பிப் பார்க்க வைத்தது. தொடக்கம் முதலில் தனித்துப் போட்டியிட்ட தேமுதிக, 2011 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது. அப்போது 41 தொகுதிகளில் சுமார் 29 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தேமுதிக. இந்த வெற்றிக்கு பிறகு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக அமர்ந்தார் விஜயகாந்த். அதன் பின்பு அதிமுகவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கூட்டணியில் இருந்து விலகியது தேமுதிக.

தொடர்ந்து தேர்தலை சந்தித்து வந்த தேமுதிக 2016 ஆம் ஆண்டு மக்கள் நல கூட்டணியுடன் இணைந்து சட்டமன்றத் தேர்தலை சந்தித்தது. இந்த அணியின் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டார். 104 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக அனைத்து இடங்களிலும் வெற்றி வாய்ப்பை இழந்தது. அதோடு தேமுதிகவின் வாக்கு சதவீதமும் கணிசமாக சரிந்தது. அதாவது 2.4 சதவீதமாக சரிந்தது. இதனைத் தொடர்ந்து ஏறுமுகமாக இருந்த தேமுதிக அடுத்தடுத்து சரிவை கண்டது.

இந்த சூழலில் 2023 டிசம்பர் 28ஆம் தேதி தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக 71 வது வயதில் உயிரிழந்தார். அவரது மறைவு அரசியலில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கியதென்று பல அரசியல் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

தேமுதிக பொதுக்குழு கூட்டம்:

தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் மறைவிற்குப் பிறகு அக்கட்சியின் பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் நியமிக்கப்பட்டார். தேமுதிக பொருளாளராக எல்கே சுதீஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தர்மபுரி பாலக்கோடு வெள்ளிச்சந்தை கே.பி மஹாலில் நடைபெற்ற இந்த பொதுக்குழு கூட்டத்தில் கழக நிர்வாகிகள், உயர்மட்ட குழு உறுப்பினர்கள், செயலாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர். அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த பொதுக்குழு கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதேப்போல் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தலை சந்திப்பதற்காக கட்சியில் இந்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேமுதிகவின் இளைஞர் அணி செயலாளர் மற்றும் பொருளாளர் புதிய நியமனத்தை தொடர்ந்து தலைமை நிலைய செயலாளராக பார்த்தசாரதியும் இளங்கோவனும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த கூட்டத்தில் பத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கியமாக சென்னை வடபழனியில் இருக்கக்கூடிய 100 அடி சாலைக்கு மறைந்த விஜயகாந்த் அவர்களின் பெயரை சூட்ட வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் விஜயகாந்திற்க்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானங்களோடு அடுத்த ஆண்டு 2026 ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி தேமுதிக கட்சியின் மாநாடு கடலூரில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தலில் கூட்டணி யாருடன்?

அடுத்த ஆண்டு (2026) நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்காக அனைத்து கட்சிகள் தரப்பிலும் மும்முரமான அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமீபத்தில் அதிமுக பாஜகவுடன் கூட்டணி கைகோர்த்தது. திமுக தரப்பிலும் தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு சட்டப்பேரவையில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியிட்டுள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின். பாமக தரப்பிலும் கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து நடைபெற்று வருகிறது. அதே போல் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இம்முறையும் தேர்தலை தனித்து சந்திப்பதாக குறிப்பிட்டுள்ளார். இப்படி ஒவ்வொரு கட்சியும் சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்காக நகர்ந்து வரும் நிலையில் தேமுதிகவின் கூட்டணி குறித்து தகுந்த நேரத்தில் தெரிவிக்கப்படும் என அக்காட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார்.

சில நாட்களுக்கு முன் பிரேமலதா விஜயகாந்த் அவரது எக்ஸ் தல பக்கத்தில் பிரதமர் மோடி விஜயகாந்த் குறித்து பேசியது நினைவு கூறும் வகையில் ஒரு வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில் கேப்டன் விஜயகாந்த் தமிழ்நாட்டின் சிங்கம் என பிரதமர் மோடி அடிக்கடி சொல்வார் என தெரிவித்திருந்தார். மேலும் பிரதமர் மோடி தனக்கு ஒரு சகோதரர் போன்றவர் என்றும் குறிப்பிட்டிருந்தார். அதற்கு பதில் அளிக்கும் வகையில் பிரதமர் மோடியும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இந்த பதிவுகள் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தேமுதிகவும் பாஜகவும் கூட்டணி அமைக்க வியூகம் வகிப்பதாக அரசியல் வல்லுனர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. தகுந்த நேரத்தில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிக இணையும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் தான் நடைபெற்ற முடிந்த பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது