2 குழந்தைகளை கொன்ற பெற்றோர்.. கடைசியில் எடுத்த விபரீத முடிவு.. திருச்சியில் அதிர்ச்சி!
Trichy Crime News : திருச்சியில் இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடன் பிரச்னையால் தம்பதி இதுபோன்ற முடிவை எடுத்தள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாதிரிப்படம்
திருச்சி, மே 14 : திருச்சியில் இரண்டு குழந்தைகளை கொன்றுவிட்டு, தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடன் பிரச்னையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரும் உயிரிழந்துள்ளனர். திருச்சி மாவட்டம் மேல கல்கண்டார் பகுதியைச் சேர்ந்தவர் அலெக்ஸ் (42). இவரது மனைவி விக்டோரியா (35). இந்த தம்பதிக்கு 9 மற்றும் 3 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் கல்கண்டார் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருவதாக தெரிகிறது. இந்த நிலையில், 2025 மே 13ஆம் தேதியான இன்று காலையில் நீண்ட நேரமாகியும் வீடு திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால், சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர், ஜன்னல் வழியாக பார்த்துள்ளனர்.
2 குழந்தைகளை கொன்ற பெற்றோர்
அப்போது, நான்கு பேரும் உள்ளே கிடந்துள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது, அலெக்ஸ் மற்றும் விக்டோரியா தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளனர். மேலும், இரண்டு குழந்தைகள் விஷம் அருந்தி இறந்து கிடந்துள்ளன.
இதனை பார்த்து அதிர்ச்சி அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், 4 பேரின் உடல்களையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சம்பவ இடத்தில் பொன்மலை உதவி ஆணையர் சதீஷ் குமார் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணையில், அலெக்ஸ் ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். அதில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது தெரிகிறது. விக்டோரியா ரயில்வே ஊழியராக பணிபுரிந்து வந்தார். ஜவுளி வியாபாரம் நஷ்டத்தில் சென்றுள்ளது. இதனால், கடன் பிரச்னையும் ஏற்பட்டது. இதற்கிடையில், அலெக்ஸ் புதிதாக வீடு ஒன்றும் வாங்கியதாக தெரிகிறது.
கடைசியில் எடுத்த விபரீத முடிவு
அதற்கான கடன் தொகையும் அலெக்ஸால் செலுத்த முடியாததாக தெரிகிறது. மேலும், உறவினர்களிடமும் கடன் வாங்கி இருக்கிறார். எந்த கடனையும் செலுத்த முடியாமல், அலெக்ஸ் மற்றும் விக்டோரியா மன உளைச்சலில் இருந்துள்ளதாக தெரிகிறது.
கடன் சுமை நாளுக்கு நாள் அதிகரித்ததால், தனது இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு, அவர்கள் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு இருப்பதாக போலீசார் கூறியுள்ளனர். கடன் சுமையால், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
(எதற்கும் தற்கொலை தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)