விமான விபத்தின் போது என்ன செய்ய வேண்டும்? சென்னையில் நடத்தப்பட்ட மாதிரி பயிற்சி..

Mock Drill at Chennai: அகமதாபாதில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தை தொடர்ந்து சென்னையில் பரங்கிமலைக்கு அடுத்து விமான விபத்தின் போது என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பான மாதிரி பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. இதில் 300 பேர் கலந்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விமான விபத்தின் போது என்ன செய்ய வேண்டும்? சென்னையில் நடத்தப்பட்ட மாதிரி பயிற்சி..

கோப்பு புகைப்படம்

Published: 

30 Jun 2025 12:18 PM

சென்னை: சமீபத்தில் அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தை தொடர்ந்து மத்திய தொழில் துறை பாதுகாப்பு படை மற்றும் விமான நிலைய அவசர சேவைகள் இணைந்து சென்னை விமான நிலையத்தை ஒட்டியுள்ள பரங்கிமலை அருகே பெரிய அளவிலான அவசரகால மாதிரி பயிற்சி மேற்கொண்டனர். பேரிடர் தயார் நிலையை சோதித்து பார்க்கவும் மேம்படுத்தவும் இந்த பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த பயிற்சியின் போது மாதிரி விமானம் தீ பற்றி எரிந்தது போலும் அதனை எப்படி சமாளிப்பது என்பது போன்ற மாக் ட்ரில் மேற்கொள்ளப்பட்டது. மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை, தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள், காவல்துறை, விமான நிலைய அதிகாரிகள், மருத்துவ துறை, உளவுத்துறை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படை என பல்துறை சார்ந்த அதிகாரிகள் இந்த பயிற்சியில் ஈடுபட்டனர்.

விமான விபத்தின் போது என்ன செய்ய வேண்டும்?

இந்த பயிற்சி முக்கியமாக விமானம் ஆபத்துக்குள்ளான நிலையில் இருக்கும் போது, அதற்கு விரைவான பதில் அளிப்பதையும் விரைவாக செயல்படுத்துவதையும், மேலும் இது போன்ற சூழ்நிலைகளில் உயிரிழப்புகளை குறைப்பதையும் நோக்கமாக கொண்டு நடத்தப்பட்டது. மேலும் இந்த பயிற்சியின் பொழுது ஒரு பகுதியாக பயணிகளை வெளியேற்றுவது பாதுகாப்பு நடவடிக்கைகளை நிறுவுதல் தீயணைப்பு நடவடிக்கைகள், காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவ உதவி மற்றும் ஒட்டு மொத்த நிலைமையை நிர்வகித்தல் ஆகியவற்றை பயிற்சி வடிவத்தில் நடத்தப்பட்டது.

சென்னையில் நடத்தப்பட்ட மாக் ட்ரில்:


மேலும் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு விரைவாக அழைத்துச் செல்லும் வகையில் ஆம்புலன்ஸ்களுக்கு வழி விடும் வகையில் போக்குவரத்து காவல்துறையினர் அப்பகுதியில் போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தினர். அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தை தொடர்ந்து அனைத்து விமான நிலையங்களுக்கும் அவசரகால பயிற்சிகளை நடத்துமாறு சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவு பிறப்பித்த நிலையில் இந்த பயிற்சியானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வழக்கமாக மேற்கொள்ளும் பயிற்சி தான் – விமான நிலைய இயக்குனர் சி வி தீபக்:


விமான நிலைய ஆணையத்தின் விமான நிலைய இயக்குனர் சி வி தீபக், இது தொடர்பாக கூறுகையில் இந்த மாதிரி பயிற்சி விமான நிலையங்கள் எப்போதும் நடத்தக்கூடிய ஒன்று எனவும் தற்போது முதல் முறையாக விமான நிலையத்திலிருந்து வெளிப்பகுதிகளில் நடத்தப்படுவதாகவும், இந்த பயிற்சியில் தோராயமாக 300 பேர் பங்கேற்றதாகவும், அதில் 55 பேர் விமான பயணிகளாக பங்கேற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.