21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. உதகையில் கைது செய்யப்பட்ட அரசு பள்ளி ஆசிரியர்..
Crime News: கோத்தகிரி அரசு பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வரும் செந்தில் குமார் என்பவர் அந்த பள்ளியில் பயிலும் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அவரை காவல் துறையினர் போக்சோ வழக்கின் கீழ கைது செய்துள்ளனர்.

கோப்பு புகைப்படம்
உதகை, ஜூலை 4, 2025: 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த அரசு பள்ளி ஆசிரியரை போக்சோ வழக்கில் கைது செய்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகில் உள்ள ஹோப் பார்க் பகுதியை சேர்ந்தவர் செந்தில் குமார். இவருக்கு வயது 50. இவர் கடந்த 23 ஆண்டுகளாக அரசுப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இவர் அரசு பள்ளிகளில் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது கோத்தகிரியில் இருக்கக்கூடிய அரசு பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் அங்கு ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையில் இருக்கக்கூடிய மாணவர்களுக்கு அறிவியல் பாடம் கற்றுக் கொடுத்து வருகிறார்.
பாலியல் புகாரில் சிக்கிய ஆசிரியர்:
கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த பள்ளியில் பாலியல் கல்வி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக காவல்துறையினர் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்து கலந்து கொண்டுள்ளனர். அப்போது அங்கு இருக்கக்கூடிய மாணவ மாணவிகளுக்கு குட் டச் என்றால் என்ன பேட் டச் என்றால் என்ன என்பதை குறித்து விளக்கமாக தெரிவித்துள்ளனர். அதேபோல் பாலியல் சீண்டல் என்றால் என்ன பாலியல் ரீதியான துன்புறுத்தல் என்றால் என்ன என்பது தொடர்பாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர்.
விழிப்புணர்வு நிகழ்ச்சி முடிந்ததும் அங்கு இருக்கக்கூடிய மாணவி ஒருவர் காவல்துறையினரை அணுகி தன்னை அறிவியல் ஆசிரியர் செந்தில்குமார் தகாத இடத்தில் தொட்டு பாலியல் துன்புறுத்தல் செய்ததாக குறிப்பிட்டுள்ளார். இதனை கேட்டு அதிர்ந்த காவல்துறையினர் உடனடியாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணை மேற்கொண்டதில் அவர் பள்ளியில் இருக்கக்கூடிய ஏராளமான மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் செய்தது அம்பலமானது.
போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் குமார்:
விசாரணையின் முடிவில் கிட்டத்தட்ட 21 மாணவிகளுக்கு ஆசிரியர் செந்தில்குமார் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா உள்ளிட்ட அதிகாரிகளுக்கும், குழந்தைகள் நலப் பிரிவு அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பெயரில் இவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உதகை ஊரக இன்ஸ்பெக்டர் விஜயா தலைமையிலான போலீசார் செந்தில்குமாரை கைது செய்தனர். செந்தில்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் பள்ளி மாணவிகளின் பெற்றோரிடையே கலக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது.