தேசபக்தியின் வெளிப்பாடு.. ராணுவ வீரர்களுக்கு 8 வயது சிறுவன் நன்கொடை
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 8 வயது தன்விஷ், தனது சேமிப்பை இந்திய ராணுவத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளான். பாகிஸ்தான் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு நடைபெற்ற ஆபரேஷன் சிந்தூரில் ராணுவ வீரர்களின் தியாகத்தால் ஈர்க்கப்பட்ட அவன், உண்டியலில் சேமித்த பணத்தை ஆட்சியரிடம் வழங்கினான். இந்தச் செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

சிறுவன் தன்விஷ்
கரூர், மே 15: தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 வயது சிறுவன் இந்திய ராணுவத்தின் சேவை மற்றும் தியாகங்களால் ஈர்க்கப்பட்டு தன்னுடைய சேமிப்பு முழுவதையும் ராணுவத்திற்கு கொடுத்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளான். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் வைரலாகி அந்த சிறுவனுக்கு பாராட்டுகள் சமூக வலைதளங்கள் மூலமாக குவிந்து வருகிறது. கடந்த 2025, ஏப்ரல் 22 ஆம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் உள்ள பகல்ஹாம் என்ற இடத்தில் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 22 பேர் கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் இந்த தாக்குதல் மிகப்பெரிய அளவில் பதற்றத்தையும், கொந்தளிப்பையும் உண்டாகியது. இப்படியான நிலையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதில் நடவடிக்கையாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா பதிலடி கொடுத்தது.
பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் இந்த நடவடிக்கை ஒட்டுமொத்த மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. மேலும் இரவு பகல் பாராமல் எல்லையில் கண்காணித்து தங்களை காத்து வரும் ராணுவ வீரர்களுக்கு சமூக வலைதளங்கள் மூலமாக வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர். இப்படியான நிலையில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்குமார் பவித்ரா தம்பதியினரின் மகனான தன்விஷ் செய்த செயல் நெகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது.
8 வயது சிறுவனின் பரந்த மனது
8 வயதான அந்த சிறுவன் அங்கிருக்கும் வெள்ளியணை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறான். அந்தச் சிறுவனுக்கு சிறுவயதிலிருந்தே சேமித்து வைக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. அதன்படி பெற்றோர் மற்றும் உறவினர்கள் கொடுக்கும் பணத்தை உண்டியலில் சேமித்து வைத்து வந்துள்ளான். சமீபத்தில் இந்தியா – பாகிஸ்தான் மோதல் ஏற்பட்டபோது ராணுவ வீரர்கள் எல்லையில் கடுமையாக போராடினர். இது தொடர்பான தகவல்கள் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் வாயிலாக வெளியாகி வந்தது.
இதனை பார்த்த சிறுவன் தன்விஷ் ராணுவ வீரர்களுக்கு உதவ முன்வந்தான். அதன்படி தான் பத்து மாதங்களாக உண்டியலில் சேமித்து வைத்திருந்த பணத்தை ராணுவத்திற்கு வழங்குவதற்கு முடிவு செய்தான். இதனை தன் பெற்றோரிடம் தெரிவிக்க அவர்களும் மகிழ்ச்சியுடன் சம்மதம் தெரிவித்தனர். இதன் பின்னர் கரூர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்த தன்விஷ் தனது சேமிப்பு உண்டியலை வழங்கி ராணுவத்துக்கு அளிக்குமாறு கேட்டுக் கொண்டான். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பலரையும் வியப்படைய செய்தது.
வீரர்களுக்கு செலுத்தும் நன்றியுணர்வு
பலரும் சிறுவனின் செயலுக்கு பாராட்டு தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சிறுவன் தன்விஷ், “நமது நாட்டுக்காக பாகிஸ்தான் போரின் போது போராடிய ராணுவ வீரர்களின் நலனுக்கு பயன்படும் வகையில் நான் சேமித்த பணத்தை வழங்கியுள்ளேன். நம்மை பாதுகாப்பவர்களுக்கு உதவ விரும்பினேன். ராணுவம் மீதான மரியாதை மற்றும் வீரர்களுக்கு செலுத்தும் நன்றியுணர்வின் அடிப்படையில் இந்த செயலை செய்தேன்” என்று தனக்கே உரித்தான மழலைப் பேச்சில் பேசி அனைவரையும் கவர்ந்தான். சிறுவன் தன்விஷின் செயலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பொதுமக்கள் என பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
சிறுவன் தன்விஷ் எவ்வளவு பணம் கொடுத்தான் என்ற தகவல் வெளியிடப்படவில்லை என்றாலும், அவனது எண்ணம் மிகப்பெரியது என பலரும் தெரிவித்துள்ளது.