Neeraj Chopra: இந்திய இராணுவத்தில் முக்கிய பதவி.. தங்க மகன் நீரஜ் சோப்ராவிற்கு சிறப்பு கௌரவம்..!
Neeraj Chopra's Military Promotion: டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு இந்திய பிராந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னல் பதவி வழங்கப்பட்டது. இது முன்னாள் கிரிக்கெட் கேப்டன் எம்.எஸ்.தோனிக்கும் வழங்கப்பட்ட அதே பதவி. இந்திய அரசிதழில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1948ம் ஆண்டு விதிமுறைகளின்படி இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது. நீரஜ் சோப்ராவின் சாதனை இந்தியாவுக்கு பெருமை சேர்க்கிறது.

நீரஜ் சோப்ரா
கடந்த 2021ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்றதன் மூலம், உலகம் முழுவதும் பிரபலமடைந்த நீரஜ் சோப்ராவிற்கு (Neeraj Chopra) இந்திய ராணுவத்தில் ஒரு முக்கியமான பதவி வழங்கப்பட்டது. அதன்படி, அவருக்கு பிராந்திய இராணுவத்தில் லெப்டினண்ட் கர்னல் பட்டம் (Lieutenant Colonel in Territorial Army) வழங்கப்பட்டது. முன்னதாக, இதே பதவிதான் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனிக்கும் (MS Dhoni) வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இது நீரஜ் சோப்ராவிற்கு மட்டுமின்றி, முழு இந்தியாவிற்கும் பெருமை சேர்க்கும் விஷயமாகும். இது இந்திய அரசின் வாராந்திர அதிகாரப்பூர்வ இதழான இந்திய அரசிதழில் பாதுகாப்பு அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
பதவி உயர்வு:
🚨 BREAKING NEWS
Double Olympic medallist Neeraj Chopra has been conferred the Honorary Rank of Lieutenant Colonel in the Territorial Army. pic.twitter.com/UtFMNc5Edo
— Megh Updates 🚨™ (@MeghUpdates) May 14, 2025
1948ம் ஆண்டு இந்திய பிராந்திய இராணுவ விதிமுறைகளின் பத்தி-31ன் கீழ் நீரஜ் சோப்ராவிற்கு இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, நீரஜ் சோப்ராவுக்கு லெப்டினண்ட் கர்னல் பதவியை வழங்கியுள்ளார். இதற்கு முன்பு, நீரஜ் சோப்ரா ராஜ்புதன ரைபிள்ஸில் சுபேதராக நியமிக்கப்பட்டார். அதேபோல், கடந்த 2016ம் ஆண்டு நீரஜ் சோப்ரா இந்திய இராணுவத்தில் நைப் சுபேதார் பதவியில் ஜூனியர் கமிஷன்டு அதிகாரியாக சேர்ந்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அவருக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது. கடந்த 2021ம் ஆண்டில் சுபேதார் பதவிக்கு உயர்த்தப்படுவதற்கு முன்பு, நீரஜ் சோப்ரா தனது பாராட்டத்தக்க சேவைக்காக கேல் ரத்னா மற்றும் விஷிஷ்ட் சேவா பதக்கங்களை வென்றார்.
தொடர்ந்து 2 ஒலிம்பிக்கில் பதக்கங்கள்:
கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று நீரஜ் சோப்ரா இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார். இதன்மூலம், இந்தியாவிற்காக தனிநபர் தங்கப் பதக்கம் வென்ற முதல் தடகள வீரர் என்ற பெருமையை பெற்றார். அன்றைய போட்டியின்போது, நீரஜ் சோப்ரா 2வது முயற்சிலேயே 87.58 மீட்டர் தூரம் எறிந்து முதலிடத்தை பிடித்து தங்கம் வென்றார். அதனை தொடர்ந்து, 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு வெள்ளி பதக்கத்தை வென்று அசத்தினார்.
நீரஜ் சோப்ரா அடுத்ததாக வருகின்ற 2025 மே 16ம் தேதி தோஹா டயமண்ட் லீக்கில் பங்கேற்கிறார். தொடர்ந்து, வருகின்ர 2025 மே 23ம் தேதி போலந்தின் சோர்சோவில் நடைபெறும் 71வது ஜானுஸ் குசோசின்ஸ்கி நினைவு, உலக தடகள கான்டினென்டல் டூர் போட்டியிலும் பங்கேற்கவுள்ளார்.