MS Dhoni Retirement: ஐபிஎல்லில் வீரராக ஓய்வு..? பயிற்சியாளராக களமிறங்குகிறாரா எம்.எஸ்.தோனி..?
MS Dhoni IPL 2025: தோனியின் சிறுவயது பயிற்சியாளர் கேசவ் ரஞ்சன் பானர்ஜி, தோனி ஐபிஎல் 2025க்குப் பிறகு ஓய்வு பெறலாம் என்றும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராகத் தொடரலாம் என்றும் தெரிவித்துள்ளார். தோனியின் கடைசி போட்டி கொல்கத்தாவில் நடைபெறலாம் என்றும், அவர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தோனியின் ஓய்வு குறித்து அனைவரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

மகேந்திர சிங் தோனி
இந்திய கிரிக்கெட் அணியின் (Indian Cricket Team) வரலாற்றை எடுத்துகொண்டால், எம்.எஸ்.தோனியை (MS Dhoni) எந்த காலத்திலும் தவிர்க்க முடியாது. இந்திய கிரிக்கெட் அணியின் இன்றுவரை புகழ்பெற்ற வீரராக இருந்தவருகிறார். கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வுபெற்ற போதிலும், ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வார் முழங்கையில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக முழுவதுமாக விலகினார். இதையடுத்து, தற்போது 43 வயதாகும் எம்.எஸ்.தோனி மீண்டும் கேப்டனாக பதவியேற்றார். இருப்பினும், ஐபிஎல் 2025 (IPL 2025) சீசன் முடிந்ததும் தோனி ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறுவதாக நம்பப்படுகிறது. இந்தநிலையில், தோனி சிறு வயது பயிற்சியாளர் தோனியின் ஓய்வு குறித்து பேசியுள்ளார்.
என்ன சொன்னார் தோனியின் சிறுவயது பயிற்சியாளர்..?
தோனியின் ஓய்வு குறித்து அவரது சிறு வயது பயிற்சியாளர் கேசவ் ரஞ்சன் பானர்ஜி தெரிவிக்கையில், “ தோனி தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்காலத்திற்காக தயார் செய்வதில் மும்முரமாக உள்ளார். இது அவரது கடைசி ஐபிஎல் சீசனா இல்லையா என்பது எம்.எஸ்.தோனிக்கு மட்டுமே தெரியும். ஒருவேளை தோனி ஐபிஎல் 2025க்கு பிறகு ஓய்வு பெற்றால், தொடர்ந்து சென்னை அணியின் பயிற்சியாளராக தொடரலாம். இருப்பினும், தோனி முடிந்தளவிற்கு நீண்ட காலம் விளையாடுவதை நாம் அனைவரும் பார்க்க விரும்புகிறோம்” என்று தெரிவித்தார்.
எம்.எஸ்.தோனி ஓய்வா..?
ஐபிஎல் 2025 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நாளை அதாவது 2025 மே 6ம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டிக்கு ஒருநாள் முன்னதாக இரு அணிகளும் இன்று அதாவது 2026 மே 6ம் தேதி செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தும். வழக்கமாக எம்.எஸ்.தோனி போட்டிக்கு முந்தைய பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொள்ள மாட்டார். ஆனால், தோனி இன்று கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால்தான் கொல்கத்தாவில் நடைபெறும் CSK vs KKR போட்டிக்காக ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர். கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் தோனி கடைசியாக விளையாடுவார் என்று நம்பப்படுகிறது.
கடந்த 2014ம் ஆண்டு எம்.எஸ்.தோனி யாரும் எதிர்பார்க்காதவகையில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். பின்னர், 2025 ஆகஸ்ட் 15ம் தேதி அவர் ஒருநாள் மற்றும் டி20 சர்வதேச போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்றார்.
ஐபிஎல் 2025ல் சென்னை சூப்பர் கிங்ஸ் 11 போட்டிகளில் 9 போட்டிகளில் தோல்வியடைந்து பிளேஆஃப் பந்தயத்திலிருந்து வெளியேறியுள்ளது. இன்னும் சென்னை அணிக்கு 3 போட்டிகள் மட்டுமே மீதமுள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கடைசி போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தப் போட்டியின் கடைசி ஓவரில் தோனி 8 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் பிறகு தோல்விக்கு காரணம் நான்தான் என்று பொறுப்பேற்றார்.