IPL 2025: இன்று முதல் மீண்டும் ஐபிஎல்.. பெங்களூரு – கொல்கத்தா மோதல்!
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றத்தால் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட ஐபிஎல் 2025 போட்டிகள், மே 17 முதல் மீண்டும் தொடங்குகின்றன. பெங்களூருவில் இன்று பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. பாதுகாப்பு காரணங்களால், எஞ்சிய போட்டிகள் குறிப்பிட்ட நகரங்களில் மட்டுமே நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு Vs கொல்கத்தா
இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐபிஎல் போட்டிகள் மீண்டும் இன்று (2025, மே 17) முதல் தொடங்கவுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த தொடரானது தற்போது 18வது சீசனில் உள்ளது. கடந்த 2025, மார்ச் 22 ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் போட்டியானது விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத், குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ் ஆகிய 10 அணிகள் விளையாடி வந்தன.
ஐபிஎல் போட்டி தற்காலிகமாக நிறுத்தம்
இதனிடையே பாகிஸ்தானின் பயங்கரவாதிகள் இந்தியாவின் காஷ்மீர் பகுதியில் உள்ள பஹல்காமில் 2025, ஏப்ரல் 22 ஆம் தேதி தாக்குதல் நடத்தினர். இதில் பொதுமக்கள் 22 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் 2025, மே 6 முதல் மே 8 ஆம் தேதி இந்திய பாதுகாப்பு படை பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது. இருநாட்டு எல்லையிலும் போர் பதற்றம் நிலவியதால் ஐபிஎல் போட்டி ஒரு வார காலம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
பின்னர் பிசிசிஐ நிர்வாகிகள் கூடி 2025, மே 17 ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் என தெரிவித்தனர். அதன்படி இன்று பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடக்கும் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.
இந்த ஐபிஎல் நிலவரம்
2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியைப் பொறுத்தவரை பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியானது 11 போட்டிகளில் விளையாடி 8 போட்டிகளில் வெற்றி, மூன்று தோல்வி ஆகியவை பெற்று 16 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அதே சமயம் கொல்கத்தா அணி 12 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி, 6தோல்வி, ஒரு போட்டியில் முடிவில்லை என 11 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளது. பெங்களூரு அணியின் ப்ளே ஆப் வாய்ப்பு உறுதியாகியுள்ள நிலையில் கொல்கத்தாவுக்கு அந்த வாய்ப்பு குறைவாகவே உள்ளது.
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக எஞ்சிய ஐபிஎல் போட்டிகள் லக்னோ, டெல்லி, மும்பை, ஜெய்ப்பூர், பெங்களூரு, அகமதாபாத் ஆகிய இடங்களில் மட்டுமே நடைபெற உள்ளது.
போட்டி நிலவரம்
இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் கொல்கத்தா – பெங்களூர் ஆட்டமானது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது இப்படியான நிலையில் இரு அணிகளிலும் ஐபிஎல் போட்டி ஒட்டி வைக்கப்பட்டதால் தங்கள் சொந்த நாட்டுக்கு திரும்பிய வெளிநாட்டு வீரர்கள் மீண்டும் போட்டிகளில் இணைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால் கடைசி நேரம் வரை யார் அணியில் இருக்க போகிறார் என்ற விவரம் சஸ்பென்ஸாகவே உள்ளது.
இந்த இரண்டு அணிகளும் இதுவரை 35 நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில் கொல்கத்தா 20 ஆட்டங்களிலும், பெங்களூரு 15 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று கனமழை கொட்டி தீர்த்த நிலையில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒருவேளை மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டால் இரு அணிகளுக்கும் ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.