தோஹா போட்டியில் அசத்திய நீரஜ் சோப்ரா.. ஈட்டி எறிதலில் புதிய சாதனை!
தோஹா டயமண்ட் லீக் போட்டியில் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா 90.23 மீட்டர் தூரம் எறிந்து புதிய சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையுடன், 90 மீட்டருக்கு மேல் ஈட்டி எறிந்த மூன்றாவது ஆசிய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். ஜூலியன் வெபர் முதலிடத்தைப் பிடித்தாலும், நீரஜின் சாதனை இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளது.

நீரஜ் சோப்ரா
தோஹாவில் நடைபெற்று வரும் டயமண்ட் லீக் போட்டியில் (Doha Diamond League) இந்தியாவைச் சேர்ந்த ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா (Neeraj Chopra) புதிய சாதனைப் படைத்துள்ளார். 2025, மே 16 ஆம் தேதி அங்குள்ள சுஹெய்ம் பின் ஹமாத் மைதானத்தில் நடைபெற்ற ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் அவர் 90.23 மீட்டர் தூரம் வீசி சாதனை புரிந்தார். இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா முதல் முறையாக 90 மீட்டருக்கும் அதிகமான தூரம் வீசியுள்ளார். அதேசமயம் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் 90 மீட்டரை கடந்த 3வது ஆசிய வீரர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார். இதற்கு முன்பு பாகிஸ்தானைச் சேர்ந்தவரும், ஒலிம்பிக் சாம்பியனுமான அர்ஷத் நதீமும், சீனாவின் தைபேயைச் சேர்ந்த சாவோ சுன் செங் என்பவரும் இந்த சாதனையைப் படைத்திருந்தனர். அதேசமயம் தோஹாவில் நடைபெற்ற அந்த போட்டியில் நீரஜ் சோப்ரா இரண்டாவது இடம் பிடித்தார். இப்போட்டியில் ஜெர்மனி வீரரான ஜூலியன் வெபர் முதலிடம் பிடித்து அசத்தினார். அவர் ஈட்டி வீசிய தூரம் 91.06 மீட்டராகும்.
மேலும் மூன்றாவது இடத்தை 85.64 மீட்டர் தூரம் வீசிய கிரனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் என்பவரும், இதே போட்டியில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீரரான ஜெனோ கிஷோர் 78.60 மீட்டர் தூரம் எறிந்து 8வது இடத்தைப் பிடித்தார். இப்போட்டியில் முதலிடம் பிடித்து தங்கம் வென்ற ஜூலியன் வெபரும் முதல் முறையாக 90 மீட்டருக்கு மேல் எறிந்துள்ளார் என்பது சுவாரஸ்யமான தகவலாகும்.
நீரஜ் சோப்ரா சொன்ன பதில்
இந்த போட்டிக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த நீரஜ் சோப்ரா, “90.23 மீட்டர் தூரம் வீசி சாதனைப் படைத்த தனக்கு, இப்படி விளையாடுவதற்கு ஒருபோதும் தனிப்பட்ட அழுத்தம் ஏற்படவில்லை என்று கூறினார். மேலும் பலரும் நான் கணிக்க முடியாத இலக்கை எட்ட முடியாது என நம்பினர். 2024 ஆம் ஆண்டில் இருந்து எனக்கு ஈட்டி எறிதலில் 90 மீட்டர் கடக்க வேண்டும் என்ற ஆசை மனதில் இருந்து வருகிறது. அதை அடைய வேண்டும் என்ற தீவிர எண்ணத்தில் இருந்ததாகவும் தெரிவித்தார்.
நான் இரண்டு முறை 88 மீட்டருக்கு மேல் ஈட்டி எறிந்துள்ளேன். அந்த வகையில் என்னால் 90 மீட்டர் தூரத்திற்குள் தான் அடைய முடியும் என நினைத்திருந்தேன். ஆனால் என்னுடைய பயிற்சியாளர் ஜான் எலென் எனக்கு மிகப்பெரிய சப்போர்ட்டாக இருந்தார். இந்த போட்டிக்கு முன்னதாக என்னிடம், இன்னைக்கு நீ நினைத்தது நடக்கும், உன்னால் சிறப்பாக பண்ண முடியும் அவர் சொல்லிக் கொண்டே இருந்தார். 2025, பிப்ரவரி மாதத்தில் தான் நான் அவருடன் பயிற்சியைத் தொடங்கினேன். குறுகிய காலத்திலேயே என் டெக்னிக்கைப் பற்றி நல்லா தெரிஞ்சிக்கிட்டாரு. இந்த போட்டியின் மூலம் எனக்கு மட்டுமல்ல, என் மீது நம்பிக்கைக் கொண்ட இந்தியர்களுக்கும் மிகப்பெரிய சுமை குறைந்துள்ளது” என நீரஜ் சோப்ரா கூறியுள்ளார்.