Vaikasi Amavasaya: வைகாசி அமாவாசை.. வீட்டிலேயே வழிபாடு செய்வது எப்படி?
வைகாசி அமாவாசை 2025 மே 26 ம் தேதி வருகிறது. இந்த சக்தி வாய்ந்த நாளில் முன்னோர்களை வழிபடுவது மிகவும் முக்கியமானதாகும். இந்நாளில் வீட்டை சுத்தம் செய்து, முன்னோர் படத்திற்கு விளக்கேற்றி, தர்ப்பணம் செய்து, அவர்களுக்குப் பிடித்த உணவுப் பொருட்களை வைத்து வழிபட வேண்டும் என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

வைகாசி அமாவாசை வழிபாடு
பொதுவாக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ள வளர்பிறை மற்றும் தேய்பிறையில் வரும் ஒவ்வொரு திதியும் ஒவ்வொரு தமிழ் மாதங்களில் மிக முக்கியமான பண்டிகை நாளாக கொண்டாடப்படுகிறது. அதேசமயம் மாதம் ஒருமுறை அமாவாசை, பௌர்ணமியும் அனைத்து மாதங்களிலும் மிகவும் புனித நாளாக பார்க்கப்படுகிறது. இதில் அமாவாசையை எடுத்துக் கொண்டால் அந்நாள் முழுக்க முழுக்க முன்னோர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாளாகவே உள்ளது. இந்நாளில் நம் வீட்டில் மறைந்த மூதாதையர்களை (Ancestor Worship) வழிபடலாம். விரதம் மேற்கொள்ளலாம். தர்ப்பணம், திதி ஆகியவை கொடுக்கலாம் என சொல்லப்படுகிறது. இப்படியான நிலையில் வைகாசி அமாவாசை (Vaikasi Amavasaya) அன்று வீட்டில் எந்தவிதமான வழிபாடுகளை மேற்கொண்டு முன்னோர்களின் ஆசிகளைப் பெறலாம் என்பது பற்றிப் பார்க்கலாம்.
2025 ஆம் ஆண்டு வைகாசி அமாவாசை மே 26 ஆம் தேதி திங்கட்கிழமை வருகிறது. பொதுவாக இந்து மதத்தில் திங்கட்கிழமை சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள நிலையில் அது மிகப்பெரிய சிறப்பான நாளாக பார்க்கப்படுகிறது. வைகாசி மாதம் சூரிய பகவான் ரிஷப ராசியில் பயணம் செய்யும் காலக்கட்டமாகும். அதேபோல் சந்திர பகவானும் இந்த ராசியில் உச்சம் அடைவார் என்பதால் இந்த அமாவாசை மிகவும் சக்தி வாய்ந்ததாக நம்பப்படுகிறது.
வீட்டிலேயே வழிபாடு செய்வது எப்படி?
பொதுவாக எந்தவொரு விசேஷ நாளாக இருந்தாலும் அந்நாளில் வீடானது வழக்கத்தை விட சுத்தமாக இருக்க வேண்டும். அந்த வகையில் வீட்டை அமாவாசைக்கு முதல் நாள் நன்றாக கழுவி சுத்தம் செய்துக் கொள்ள வேண்டும். மேலும் முன்னோர் படம் இருக்கும் பகுதிகளும் சுத்தப்படுத்தியிருக்க வேண்டும். அவர்கள் படத்தின் ஏற்றப்படும் விளக்கு சுத்தம் செய்யப்பட்டு எண்ணெய், திரி போட்டு தயாராக இருக்க வேண்டும். அமாவாசை தினத்தில் தனது வீட்டில் மறைந்தவர்களை நினைத்து விரதம் இருக்க நினைப்பவர்கள் அதிகாலையில் எழுந்து புனித நீராடி முன்னோர் படத்தின் முன் விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும்.
படத்திற்கேற்ப மாலை ஒன்றை வாங்கி வந்து மாட்ட வேண்டும். இந்நாளில் நீர்நிலைகளில் சிலர் தர்ப்பணம் கொடுப்பார்கள். அப்படி செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே எள்ளும், தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் செய்யலாம். இதனால் முன்னோர்களின் ஆன்மா சாந்தியடையும் என்பது நம்பிக்கையாகும்.
வீட்டில் கிழக்கு திசைப் பார்த்து நின்று சூரிய பகவானை பார்த்து வணங்க வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் சுத்தமான நீர் எடுத்துக் கொள்ள வேண்டும். வலது கையில் எள் எடுத்து அந்த நீரை அதன் மீது ஊற்ற வேண்டும். எள்ளும் நீரும் இன்னொரு பாத்திரத்தில் செல்ல வேண்டும். அந்த நீரை ஏதேனும் நீர் நிலைகள் அல்லது தோட்டத்தில் ஊற்றி விட வேண்டும். பின்னர் முன்னோர் படத்தின் வாழையிலை விரித்து அதில் அவர்களுக்கு பிடித்தமான உணவுப் பொருட்களை வைத்து வணங்க வேண்டும். தொடர்ந்து தீப, தூபம் காட்டி வழிபட வேண்டும்.
தொடர்ந்து காகத்திற்கு உணவு வைத்து படைத்த பிறகு தான் நாம் சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும். அப்போது இலையில் வைக்கப்பட்ட பொருட்களை பகிர்ந்துண்ண வேண்டும். இவ்வாறு நாம் செய்யும் போது முன்னோர்கள் திருப்தியடைந்து நம் வாழ்க்கையின் அனைத்து செயல்களிலும் துணை நிற்பார்கள் என்பது நம்பிக்கையாகும்.
(ஆன்மிக நம்பிக்கையின்படி இந்த செய்தியானது கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வமான விளக்கம் இல்லை என்பதால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)