தைப்பூசம் 2026.. 6 நாட்கள் விரதம் இருப்பது எப்படி? முழு வழிகாட்டி.. | TV9 Tamil News

தைப்பூசம் 2026.. 6 நாட்கள் விரதம் இருப்பது எப்படி? முழு வழிகாட்டி..

Published: 

23 Jan 2026 14:27 PM

 IST

தைப்பூச நாளில் நீராடல், முருகன் கோவிலுக்கு பால் எடுத்துச் சென்று அபிஷேகத்திற்கு அளித்தல், பெண்கள் சர்க்கரை பொங்கல் வைத்து வழிபடுதல் போன்றவை மிகுந்த பலன் தரும் என்று நம்பப்படுகிறது.மொத்தத்தில், தைப்பூச விரதம் முருகனை மனத்தில் நிறுத்தி, வாழ்க்கையில் நம்பிக்கை, தைரியம், மன அமைதி அளிக்கும் ஒரு புனித ஆன்மிகப் பயிற்சியாக விளங்குகிறது.

1 / 5முருகப்பெருமானை நினைத்தாலே மனிதனின் மனத்தில் ஒரு ஆறுதல், தைரியம், நம்பிக்கை தானாக எழுகிறது. அந்த நம்பிக்கையை அனுபவமாக மாற்றும் ஒரு உயர்ந்த ஆன்மிகப் பயிற்சியே தைப்பூச விரதம். விரதம் என்பது வெறும் உணவுத் தவிர்ப்பு அல்ல. அது உடல், மனம், உணர்வு என்ற மூன்று நிலைகளையும் தூய்மைப்படுத்தி, முருகப்பெருமானின் அருளை கிரகிக்கக் கூடிய பாத்திரமாக நம்மை மாற்றும் சாதனை. நாள் எண்ணிக்கை முக்கியமல்ல; மன உறுதியே விரதத்தின் அளவுகோல். நாற்பத்தெட்டு நாள், இருபத்தொரு நாள், ஆறு நாள்,  ஒரே நாள் என எவ்வளவு நாள் இருந்தாலும் விரதத்தின் நோக்கம் ஒன்றே.

முருகப்பெருமானை நினைத்தாலே மனிதனின் மனத்தில் ஒரு ஆறுதல், தைரியம், நம்பிக்கை தானாக எழுகிறது. அந்த நம்பிக்கையை அனுபவமாக மாற்றும் ஒரு உயர்ந்த ஆன்மிகப் பயிற்சியே தைப்பூச விரதம். விரதம் என்பது வெறும் உணவுத் தவிர்ப்பு அல்ல. அது உடல், மனம், உணர்வு என்ற மூன்று நிலைகளையும் தூய்மைப்படுத்தி, முருகப்பெருமானின் அருளை கிரகிக்கக் கூடிய பாத்திரமாக நம்மை மாற்றும் சாதனை. நாள் எண்ணிக்கை முக்கியமல்ல; மன உறுதியே விரதத்தின் அளவுகோல். நாற்பத்தெட்டு நாள், இருபத்தொரு நாள், ஆறு நாள், ஒரே நாள் என எவ்வளவு நாள் இருந்தாலும் விரதத்தின் நோக்கம் ஒன்றே.

2 / 5

முதலில் உடல் நிலை: விரதம் தொடங்கியவுடன் சில கட்டுப்பாடுகள் வர வேண்டும். இது தண்டனை அல்ல; தயாரிப்பு. இந்த உடம்பே முருகன் குடியிருக்கப் போகும் கோவில் என்ற உணர்வு வேண்டும். புகை, மதுபழக்கம், தேவையற்ற எண்ணங்கள் போன்ற அடிமைத்தனங்களிலிருந்து விலக முயற்சிப்பதே முதல் வெற்றி. அசைவ உணவைத் தவிர்த்து, எளிமையான உணவு - தயிர் சாதம், பருப்பு சாதம் போன்றவை சக்திக்காக மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். சூழ்நிலை, உடல்நிலையைப் பொறுத்து நடைமுறைகளைப் பின்பற்றலாம். தாய்மார்கள் வெளிப்பூஜை செய்ய முடியாவிட்டாலும், மனப்பூஜை, மந்திர ஜபம் எப்போதும் செய்யலாம்.

3 / 5

அடுத்தது மன நிலை; விரதத்தின் உயிரே வழிபாடு. வழிபாடு என்றால் பெரிய செலவோ, சடங்குகளோ அல்ல. மனம் உருகி, உள்ளம் நெகிழ்ந்து, முருகனை நினைப்பதே உண்மையான வழிபாடு. நாம ஜபம், பாராயணம் இதுவே முருகனுக்குப் பிடித்தது. தினமும் காலை அல்லது மாலை தவறாமல் வழிபாடு செய்ய வேண்டும். ஆறு தீபம் ஏற்றுவது மிகவும் சிறப்பு; ஆறு முகம், ஆறு சக்தி, ஆறு ஞானம் என்பதன் சின்னம் அது. ஒவ்வொரு தீபமும் ஏற்றும்போது “சரவணபவ” என்று உச்சரிக்கலாம்.

4 / 5

இறுதியாக உணர்வு நிலை: உடலும் மனமும் சுத்தமாக இருந்தால் போதாது; உணர்வும் சுத்தமாக வேண்டும். தினமும் ஒரு நேரம் அமைதியான இடத்தில் அமர்ந்து, முதுகு நேராக வைத்து, கண்கள் மூடி, உதடு அசையாமல், மனத்திற்குள் “ஓம் சரவணபவாய நமஹ” என்று ஜபம் செய்ய வேண்டும். எண்ணங்கள் வந்தாலும், அவற்றை எதிர்க்காமல் முருக சிந்தனையில் மனத்தை நிலைநிறுத்த வேண்டும். இதுவே மௌன விரதத்தின் சாரம்.

5 / 5

தைப்பூச நாளில் நீராடல், முருகன் கோவிலுக்கு பால் எடுத்துச் சென்று அபிஷேகத்திற்கு அளித்தல், பெண்கள் சர்க்கரை பொங்கல் வைத்து வழிபடுதல் போன்றவை மிகுந்த பலன் தரும். காவடி, கூர்வளம் கட்டாயமல்ல; பக்தியே போதும். இந்த விரதத்தை முழு ஈடுபாட்டுடன் செய்தால், அருணகிரிநாதர் வேண்டிய இரண்டு வரங்கள் நிச்சயம் கிடைக்கும். எப்போதும் முருகனை நினைக்கும் மனம் மற்றும் திருவடி தரிசன அனுபவம் மேற்கொண்டால், வடிவேலன் உங்கள் வீட்டிலும், மனத்திலும், வாழ்க்கையிலும் எழுந்தருளுவான்.