India-Pakistan Ceasefire Violated: சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியது உண்மை.. வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி விளக்கம்!

Foreign Secretary Vikram Misri: பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் (LOC) இந்தியா மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியதாகவும், சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாகவும் கூறப்படுகிறது. இந்திய ராணுவம் ட்ரோன்களை வீழ்த்தியதாகவும், எந்தவிதமான உயிரிழப்பும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது. வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி பாகிஸ்தானின் செயலைக் கண்டித்தார். மின்சாரம் துண்டிக்கப்பட்ட பகுதிகளில் மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது.

India-Pakistan Ceasefire Violated: சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியது உண்மை.. வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி விளக்கம்!

இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி

Published: 

10 May 2025 23:16 PM

ஜம்மு, காஷ்மீர், மே 10: எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் (India-Pakistan Ceasefire) சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாகிஸ்தான் நடத்திய தாக்குதல் முயற்சி தற்போது நிறுத்தப்பட்டதாகவும், தற்போது துப்பாக்கிச் சூடு எதுவும் இல்லை என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. ஸ்ரீநகரில் தற்போது எந்த குண்டு வெடிப்பும் இல்லை என்றும், துப்பாக்கிச் சூடு எதுவும் நடைபெறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், மின் தடை செய்யப்பட்ட பகுதிகளில் மீண்டும் மின்சார விநியோகம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, சிறிது நேரத்திற்கு பிறகு ட்ரோன் தாக்குதல் குறித்த அப்டேட்களை வழங்குவதாக இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், பாகிஸ்தான் தாக்குதல் முயற்சிக்கு பிறகு, சண்டை நிறுத்த உடன்படிக்கையை பாகிஸ்தான் மீறியது உண்மை என வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி (Foreign Secretary Vikram Misri) தெரிவித்துள்ளார்.

இந்திய ராணுவம்:

இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், ”இந்திய எல்லை நோக்கி வந்த அனைத்து ட்ரோன்களும் சுட்டு வீழ்த்தப்பட்டது. பாகிஸ்தான் அனுப்பிய சில ட்ரோன்கள் மீண்டும் திரும்ப சென்று விட்டன. அதன்படி, உள்ளே வந்த பெரும்பாலான ட்ரோன்கள் பின்வாங்கிவிட்டன. ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதிகளான உரி, பாரமுல்லா அல்லது வடக்கு காஷ்மீரில் ஷெல் தாக்குதல், துப்பாக்கிச் சூடு அல்லது ட்ரோன்கள் எதுவும் காணப்படவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வடக்கு காஷ்மீரின் அனைத்து இடங்களிலும் மின்தடை செய்யப்பட்டது. அமிர்தசரஸில் உள்ள விமானப்படை தளத்தின் மீது எந்த தாக்குதலும் நடக்கவில்லை” என்று தெரிவித்தது.

விக்ரம் மிஸ்ரி விளக்கம்:

பாகிஸ்தான் அத்துமீறியது குறித்து இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறுகையில், ”கடந்த சில மணி நேரமாக எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி வருகிறது. பாகிஸ்தானின் தாக்குதலை இந்திய இராணுவ படைகள் முறியடித்து வருகின்றன. அத்துமீறும் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க இந்திய இராணுவத்தினருக்கு முழு சுதந்திரம் உள்ளது. எல்லை கட்டுப்பாட்டு பகுதி எல்லையில் நிலைமை உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. நிலைமை புரிந்துகொண்டு பாகிஸ்தான் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சண்டை நிறுத்த உடன்படிக்கையை பாகிஸ்தான் மீறியது உண்மை. இந்திய ராணுவம் இந்த எல்லை ஊடுருவலுக்கு பதிலடி கொடுத்து சமாளித்து வருகிறது. இந்த ஊடுருவல் மிகவும் கண்டிக்கத்தக்கது, இதற்கு பாகிஸ்தான் தான் பொறுப்பு. பாகிஸ்தான் இந்த சூழ்நிலையை சரியாகப் புரிந்துகொண்டு, இந்த ஊடுருவலைத் தடுக்க உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்.” என்று தெரிவித்தார்.