Operation Sindoor: ஆபரேஷன் சிந்தூரில் 100 பயங்கரவாதிகள் உயிரிழப்பு.. டிஜிஎம்ஓ லெப்டினண்ட் ஜெனரல் ராஜீவ் காய் விளக்கம்..!

DGMO Lieutenant General Rajiv Ghai: இந்திய ராணுவத்தின் டிஜிஎம்ஓ லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய், பாகிஸ்தானின் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் மேற்கொள்ளப்பட்டது என அறிவித்தார். பஹல்காமில் நடந்த தாக்குதலுக்கு பதிலடியாக, 9 பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு 100 க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், பாகிஸ்தானின் தொடர் தாக்குதல்களும் முறியடிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

Operation Sindoor: ஆபரேஷன் சிந்தூரில் 100 பயங்கரவாதிகள் உயிரிழப்பு.. டிஜிஎம்ஓ லெப்டினண்ட் ஜெனரல் ராஜீவ் காய் விளக்கம்..!

டிஜிஎம்ஓ லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய்

Published: 

11 May 2025 20:18 PM

டெல்லி, மே 11: ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) நடவடிக்கையின் கீழ் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய இராணுவத்தின் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் லெப்டினண்ட் ஜெனரல் ராஜீவ் காய் (DGMO Lieutenant General Rajiv Ghai) இன்று அதாவது 2025 மே 11ம் தேதி செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் போரை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே பாகிஸ்தான் படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தின என்றும், இந்திய ராணுவம் தீவிரவாதிகளை மட்டுமே குறிவைத்தது. ஆனால், அப்பாவி மக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது பாகிஸ்தான் என்றும் தெரிவித்தார்.

முழு விவரம்:

2025 மே 11ம் தேதியான இன்று இந்தியாவின் முப்படைகளின் தளபதிகளும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தினர். அப்போது பேசிய இந்திய இராணுவத்தின் டிஜிஎம்ஓ லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய், ” கடந்த 2025 ஏப்ரல் 22ம் தேதி பஹல்காமில் 26 சுற்றுலா பயணிகளை கொடூரமாக கொலை செய்த விதத்தை உங்கள் அனைவரும் நன்றாக தெரியும். நமது ஆயுதப்படைகள் மற்றும் நிராயுதபாணியான பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களுக்கு திட்டமிட்டவர்கள் மற்றும் குற்றவாளிகளை தண்டிப்பது மற்றும் அவர்களின் பயங்கரவாத உள்கட்டமைப்பை அழிப்பது என்ற தெளிவான இராணுவ நோக்கத்துடன் ’ஆபரேஷன் சிந்தூர்’ திட்டமிடப்பட்டது. அதன்படி, பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய இராணுவம் பதிலடி கொடுத்தது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் இருந்த பயங்கரவாத முகாம்கள் துல்லியமாக குறிவைக்கப்பட்டது. கடந்த 2025 மே 7ம் தேதி அதிகாலை இந்திய இராணுவம் 9 பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில், 100 க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை இந்திய இராணுவம் கொன்றது.

செய்தியாளர்கள் சந்திப்பு:

2025 மே 6-7 ம் தேதிகளில் இந்திய இராணுவம் நடத்திய தாக்குதலில் யூசுப் அசார், அப்துல், மாலிக் ரவூப் மற்றும் முதாசிர் அகமது போன்ற பயங்கரவாத குழுவின் தலைவர்கள் கொல்லப்பட்டனர். இவர்கள், IC814 விமானக் கடத்தல் மற்றும் புல்வாமா தாக்குதலுக்கு காரணமானவர்கள். இதற்குப் பிறகு பாகிஸ்தானும் கட்டுப்பாட்டை மீறி, இந்தியாவில் தாக்குதல் நடத்த முயற்சி செய்தது. பாகிஸ்தான் இராணுவத்தின் இந்தத் தாக்குதலில், பொதுமக்கள், கிராமங்கள் மற்றும் குருத்வாராக்கள் போன்ற மதத் தலங்கள் குறிவைக்கப்பட்டன. இந்த தாக்குதல் பலரின் துயர மரணத்தில் விளைந்தது.

சில விமானநிலையங்கள் மற்றும் குப்பைக் கிடங்குகள் மீது மீண்டும் மீண்டும் வான்வழித் தாக்குதல்கள் நடத்த பாகிஸ்தான் இராணுவம் முயற்சி மேற்கொண்டது. இவை அனைத்தும் முறியடிக்கப்பட்டன. 2025 மே 7 முதல் 10 வரை எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பீரங்கி மற்றும் சிறிய ஆயுதத் தாக்குதல்களில் சுமார் 35 முதல் 40 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.” என்று தெரிவித்தார்.