முடி மாற்று சிகிச்சை செய்த பல் மருத்துவர்.. 2 பொறியாளர்கள் பலியான சோகம்!
2 Engineers died after hair transplant surgery | உத்தர பிரதேசத்தில் பல் மருத்துவர் முடி மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட நிலையில், இரண்டு பொறியாளர்கள் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியௌ ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உத்தர பிரதேசம், மே 17 : உத்தர பிரதேசத்தில் (Uttar Pradesh) பல் மருத்துவர் ஒருவர் முடி மாற்று அறுவை சிகிச்சை (Hair Transplant Surgery) மேற்கொண்ட நிலையில், இரண்டு பொறியாளர்கள் உயிரிழந்ததாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. அந்த மருத்துவரின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இரண்டு பொறியாளர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலையில், சம்மந்தப்பட்ட மருத்துவர் மீது பாதிக்கப்பட்ட மேலும் சிலரும் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில், பல் மருத்துவர் முடி மாற்றும் அறுவை சிகிச்சை மேற்கொண்டது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பொதுமக்கள் மத்தியில் பிரபலமாக உள்ள முடி மாற்று அறுவை சிகிச்சை
முடி கொட்டுவது மனிதர்கள் வாழ்வில் நடைபெறும் இயல்பான ஒரு விஷயம் ஆகும். 50 வயதுக்கு மேல் முடி கொட்டுவது வழக்கமாக உள்ள நிலையில், சிலருக்கு இளம் வயதிலேயே முடி கொட்ட தொடங்கி விடுகிறது. நவீன மருத்துவத்தில் இதற்கு தீர்வு காணும் வகையில் கண்டுபிடிக்கப்பட்டது தான் முடி மாற்று அறுவை சிகிச்சை. இந்த சிகிச்சையின் மூலம் மிக சுலபமாக தலை முடியை வளர வைத்துவிடலாம். இதன் காரணமாக ஏராளமான பொதுமக்கள் இந்த முடி மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டு வருகின்றனர்.
முடி மாற்றும் அறுவை சிகிச்சை செய்த பல் மருத்துவர் – அதிர்ச்சி சம்பவம்
இந்த நிலையில், உத்தர பிரதேசத்தின் பரூக்காபாத்தை சேர்ந்த பொறியாளரான மய்ங்க் கட்டியார் என்பவர் கான்பூரில் அனுஷ்கா திவாரி என்று பெண் நடத்தி வரும் மருத்துவமனைக்கு முடி மாற்று அறுவை சிகிச்சைக்காக சென்றுள்ளார். அவர் நவம்பர் 18, 2024 அன்று முடி மாற்று அறுவை சிகிச்சை பெற்றுள்ளார். ஆனால் சிகிச்சை பெற்ற 24 மணி நேரத்திற்குள்ளாகவே அவரது முகம் வீங்கி, உடல்நிலை மோசமடைய தொடங்கியுள்ளது. இதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதேபோல கான்பூரை சேர்ந்த வினீத் துபே என்ற பொறியாளர் ஒருவரும் அதே மருத்துவமனைக்கு முடி மாற்றும் சிகிச்சைக்காக சென்றுள்ளார். முடி மாற்று சிகிச்சை பெற்ற பிறகு அவரும் உயிரிழந்துள்ளார். அதன்படி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். அப்போது, மருத்துவர் அனுஷ்கா திவாரியிடம் பல் மருத்துவத்துக்கான சான்றுகள் மட்டுமே உள்ளதும் அவர் முடி மாற்றும் சிகிச்சை மேற்கொள்ள தகுதியற்றவர் என்பதையும் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த விவகாரம் வெளியே தெரிய வந்த நிலையில், அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பாதிக்கப்பட்ட மேலும் சிலரும் முன்வந்து புகார் அளித்துள்ளனர். இதன் காரணமாக தலைமறைவாக உள்ள மருத்துவர் மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.