இந்தி ரசிகர்களுக்காக ரஜினி மற்றும் கமல் படக்குழு செய்யும் புதிய திட்டம்?
Hindi Cinema Market: தமிழ் சினிமாவில் தற்போது ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படம் நடிகர் கமல் ஹாசனின் தக் லைஃப் படம் மற்றும் நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் உருவாகி வரும் கூலி ஆகிய படங்கள் ஆகும். இயக்குநர்கள் மணிரத்னம் மற்றும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இந்தப் படங்கள் உருவாகியுள்ளது.

தக் லைஃப், கூலி
தமிழ் சினிமாவைப் (Tamil Cinema) பொருத்தவரை ஒரு படம் திரையரங்குகளில் வெளியாகிறது என்றால் அது எவ்வளவு பெரிய உச்ச நட்சத்திரமாக இருந்தாலும் சரி அந்தப் படம் வரவேற்பைப் பெருகிறதோ அல்லது வரவேற்பு பெறவில்லையோ திரையரங்குகளில் வெளியான 4 வாரங்களுக்குப் பிறகு ஓடிடியில் (OTT) வெளியிடப்படும் என்ற நடைமுறை வழக்கத்தில் உள்ளது. ஆனால் இந்தி சினிமாவில் அப்படி இல்லை ஒரு படம் திரையரங்குகளில் வெளியாகி 8 வாரங்களுக்குப் பிறகே ஓடிடியில் வெளியிட வேண்டும் என்ற கட்டுப்பாட்டை இந்தி சினிமாவில் உள்ள திரையரங்கு உரிமையாளர்கள் விதித்துள்ளனர். இது இந்தி மொழி படங்களுக்கு மட்டும் அல்ல தென்னிந்திய மொழியில் உருவாகும் படங்கள் இந்திப் பதிப்பில் வெளியிட வேண்டும் என்றால் இந்த கட்டுப்பாட்டிற்கு ஒத்துவர வேண்டும். அப்படி அவர்கள் ஒத்துவந்தால் மட்டுமே இந்தி பதிப்பிற்கு அங்கு அதிக திரையரங்குகள் ஒதுக்கப்படும் என்ற நிலை உள்ளது.
அப்படி தான் தென்னிந்திய மொழியில் உருவான அல்லு அர்ஜுனின் புஷ்பா உட்பட சில தென்னிந்திய மொழி படங்கள் இந்தி சினிமாவில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழில் உச்ச நடிகர்களாக விளங்கும் நடிகர்கள் கமல் ஹாசன் மற்றும் ரஜினிகாந்தின் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது.
இந்தப் படங்களை இந்தி பதிப்பில் வெளியிட படக்குழு முனைப்புடன் செயல்பட்டு வருகின்றது. முன்னதாக தமிழ் சினிமாவில் வெளியான பல பெரிய பட்ஜெட் படங்கள் திரையரங்குகளில் வெளியான 4 வாரங்களில் ஓடிடியில் வெளியாவதற்கான ஒப்பந்தத்தை பின்பற்றி வந்ததால், இந்தி சினிமாவில் உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் அந்த திரைப்படங்கள் வெளியாகவில்லை.
குறிப்பாக தமிழ் சினிமாவில் வெளியாகி வசூல் வேட்டையை நடத்திய நடிகர் கமல் ஹாசனின் விக்ரம் படம், நடிகர் விஜய்யின் நடிப்பில் வெளியான லியோ படம் மற்றும் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியான ஜெயிலர் படங்களின் இந்தி பதிப்புகள் இந்தி திரையுலகில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவே தமிழில் வெளியாகும் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் ஆயிரம் கோடி ரூபாய் வசூலுக்குள் செல்லவில்லை என்கின்ற கருத்தும் சினிமா வட்டாரத்தில் உலவுகிறது.
இந்த நிலையில் நடிகர்கள் கமல் ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா மற்றும் சான்யா மல்கோத்ரா நடிப்பில் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தக் லைஃப். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள நிலையில் படம் வருகின்ற ஜூன் மாதம் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
அதே போல நடிகர்கள் ரஜினிகாந்த், நாகர்ஜுனார், உபேந்திரா ஆகியோர் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கூலி. இசையமைப்பாளர் அனிருத் ரவிசந்திரன் இசையமைத்துள்ள இந்தப் படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த இரண்டு படங்களிலும் இந்தி சினிமாவில் உள்ள நடிகர்கள் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படங்களை இந்திப் பதிப்பில் வெளியிட படக்குழு முழு வேகத்தில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை எதுவும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.