“உங்களுக்கு முழு ஆதரவு” பிரதமர் மோடியிடம் உறுதியளித்த ரஷ்யா.. கலக்கத்தில் பாகிஸ்தான்!
India Pakistan Conflict : பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின், பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு முழு ஆதரவு அளிப்பதாக புதின் உறுதியளித்துள்ளார். மேலும், தாக்குதலில் ஈடுபட்டவர்களும், பின்னணியில் இருப்பவர்களும் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் பிரதமர் மோடியிடம் கூறினார்.

ரஷ்ய அதிபர் புதின் - பிரதமர் மோடி
பஹல்காம் தாக்குதல் (Pahalgam Terror Attack) தொடர்பாக ரஷ்ய அதிபர் புதின் (Russia President Putin) பிரதமர் மோடியிடம் (PM Modi) தொலைபேசியில் பேசியுள்ளார். மேலும், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் இந்தியாவுக்கு ரஷ்யா முழு ஆதரவு அளிக்கும் என அதிபர் விளாடிமிர் புதின் உறுதியளித்துள்ளார். பாகிஸ்தான் இந்தியாவுக்கு இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், ரஷ்யா ஆதரவு அளித்துள்ளது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. 2025 ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் அப்பாவி மக்கள் 22 பேர் கொல்லப்பட்டனர்.
“உங்களுக்கு முழு ஆதரவு”
இந்த தாக்குதல் உலக நாடுகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தாலும், பாகிஸ்தானுக்கு இதில் முக்கிய பங்கு இருப்பதாக இந்தியா குற்றச்சாட்டியுள்ளது. இதனால், பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் மோடி கூறி வருகிறார்.
இதற்காக பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கையை எடுத்து வருகிறார். குறிப்பாக, ராணுவ நடவடிக்கையை இருநாடுகளும் தீவிரப்படுத்தி உள்ளது. இதற்கான சோதனை பயற்சியும் நடந்து வருகிறது. இதனால், இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நீடித்து வருகிறது. இதனை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகிறது.
இந்த சூழலில், இந்தியாவுக்கு ரஷ்யா முழு ஆதரவை அளித்துள்ளது. அதாவது, பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் இந்தியாவுக்கு ரஷ்யா முழு ஆதரவு அளிக்கும் என அதிபர் விளாடிமிர் புதின் உறுதியளித்துள்ளார். 2025 மே 5ஆம் தேதியான நேற்று பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் பேசிய ரஷ்யா அதிபர் புதின், பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தார்.
பிரதமர் மோடியிடம் உறுதியளித்த ரஷ்யா
மேலும், தாக்குதலில் ஈடுபட்டவர்களும், அதற்குப் பின்னணியில் உள்ளவர்களும் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு முழு ஆதரவை அளிக்கும் என புதின் கூறியுள்ளார்.
2025ஆம் ஆண்டு நடைபெறும் உச்சிமாநாட்டிற்கு இந்தியாவுக்கு வருகை தருமாறு பிரதமர் மோடியின் அழைப்பை அதிபர் புதின் ஏற்றுக்கொண்டதாகவும் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருக்கிறார். மூலோபாய உறவுகளை மேலும் ஆழப்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை இரு தலைவர்களும் மீண்டும் வலியுறுத்தியதாகவும் கூறினார்.
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் அண்மையில் பேசுகையில், ” போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், ரஷ்யா அல்லது சீனா அல்லது மேற்கத்திய நாடுகள் கூட மிகவும் நேர்மறையான பங்கை வகிக்க முடியும் என்று நான் நினைக்கிறேன், மேலும் அவர்கள் ஒரு புலனாய்வுக் குழுவை அமைக்கலாம். மோடி பொய் சொல்கிறாரா அல்லது அவர் உண்மையைச் சொல்கிறாரா என்பதை விசாரிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். இந்த சூழலில், பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக, ரஷ்யா தனது முழு ஆதரவை தெரிவித்துள்ளது.