Chrome book Challenge : லேப்டாப்பை தீ வைத்து எரிக்கும் மாணவர்கள் – டிரெண்டாகும் புதிய சேலஞ்ச்

Chromebook Challenge Alert : குரோம்புக் சேலஞ்ச் என்ற பெயரில் அமெரிக்காவில் மாணவர்கள் தங்கள் லேப்டாப்பை தீ வைத்து எரித்து வருகிறார்கள். இந்த சேலஞ்ச் மாணவர்களிடையே பரவி வரும் நிலையில் வகுப்பறைகளில் தங்களது தீ வைத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிடுகின்றனர்.

Chrome book Challenge : லேப்டாப்பை தீ வைத்து எரிக்கும் மாணவர்கள் - டிரெண்டாகும் புதிய சேலஞ்ச்

Chromebook Challenge Alert

Published: 

11 May 2025 23:31 PM

இன்றைய டிஜிட்டல் யுகத்தில், சமூக ஊடகங்கள் (Social Media) இளைஞர்கள் மட்டுமன்றி அனைத்து வயதினருக்கும் பயனுள்ளதாக மாறியிருக்கிறது. தகவல் பரிமாற்றம், திறமைகளை வெளிப்படுத்தும் மேடை  போன்ற பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, சமூக விழிப்புணர்வு, கல்வி சார்ந்த தகவல்களை பரப்புதல், புதிய வாய்ப்புகளை உருவாக்குதல் உள்ளிட்ட பல நேர்மறையான பயன்கள் இருக்கின்றன. அதே நேரத்தில், சமூக ஊடகங்களில் அடிக்கடி உருவாகும் டிரெண்ட்கள் (Trends) பல நேரங்களில் மக்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் இடம்பெறுகின்றன.

சமூக வலைதளங்களில் சேலஞ்ச் என்ற பெயரில் புதிய டிரெண்ட் வைரலாவது வழக்கம். அதன் படி எதாவது டாஸ்க் கொடுக்கப்படும். அதனை நாம் செய்து ஹாஷ்டேக்குடன் அப்லோட் செய்ய வேண்டும். சில நேரங்களில் அந்த சேலேஞ்ச் விபரீதமாக முடியும் சம்பங்களும் நடைபெறுகின்றன. அப்படி ஒரு சம்பவம் அமெரிக்காவில் நடந்திருக்கிறது.   #ChromebookChallenge என்ற பெயரில் இணையத்தில் ஒரு சேலஞ்ச் பரவி வருகிறது.

குரோம்புக் சேலஞ்ச் என்றால் என்ன?

 

இந்த சவாலில், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தங்கள் லேப்டாப்பின் சார்ஜிங் போர்ட்‌ உடன் விளையாடுகிறார்கள். குறிப்பாக, காகிதம், பென்சில் லீடு அல்லது அலுமினியம் ஃபாயில் போன்ற பொருட்களை சார்ஜிங் போர்ட்டில் நுழைத்து, சிறிய மின்னழுத்தத்தை ஏற்படுத்துகிறார்கள். இதனால் லேப்டாப்பில் மின் சப்ளை ஏற்பட்டு, உடனடியாக தீவிபத்து ஏற்படுகிறது. சில நேரங்களில் லேப்டாப்பும் சார்ஜரும் தீப்பற்றி எரிகின்றன. இதனால் வெளிவரும் புகை அறை முழுவதும் பரவுகிறது. இதனை வீடியோ எடுத்து பதிவிடுகிறார்கள்.

ஏன் இது ஆபத்தானது?

அமெரிக்காவின் கனெக்டிகட் மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில், Chromebook சவால் காரணமாக ஒரு முழு வகுப்பறையே புகையால் சூழ்ந்து காணப்பட்டது. நியூயார்க் போஸ்ட் வெளியிட்டுள்ள கட்டுரையின் படி, ஃபயர் அண்ட் சேஃப்டி துறை அதிகாரி டி.ஜே. ஜோர்டான் கூறுகையில், இந்த சவால் தீவிரமான பிரச்னையாக உருவாகி வருகிறது. லேப்டாப்பின் லித்தியம்-அயன் பேட்டரிகள் எளிதில் தீப்பற்றும் தன்மை கொண்டவை என்பதால், ஒரு சிறிய சின்ன தீப்பொறி பட்டாலே தீ விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதேபோல் பல இடங்களில் தீயணைப்பு படையினரை அழைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எங்கு எங்கு பரவியது?

இந்த சவால் தற்போது அமெரிக்காவின் கலிஃபோர்னியா, பின்சில்வேனியா, நியூ ஜெர்சி, வாஷிங்டன் போன்ற மாநிலங்களில் பரவியுள்ளது. டிக்டாக் நிறுவனம் கடந்த ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரை இந்த வகை ஆபத்தான 99.7% வீடியோக்களையும் தங்கள் தளத்திலிருந்து நீக்கியதாக தெரிவித்துள்ளது. இருந்தாலும், இளைஞர்கள் இவ்வாறான அபாயகரமான வீடியோக்களை பார்த்து தாக்கம் அடைவது தற்போது பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.