ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்வதற்கு இதுதான் சரியான வழி.. கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!

Smartphone Charging Tips | உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் ஸ்மார்ட்போன்களை தங்கள் அன்றாட வாழ்வில் அதிகம் பயன்படுத்துகின்றனர். ஆனால், அவர்களின் பெரும்பாலானோருக்கு தங்களது ஸ்மார்ட்போன்களை எவ்வாறு சார்ஜ் செய்வது என தெரியாமல் உள்ளது.

ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்வதற்கு இதுதான் சரியான வழி.. கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!

மாதிரி புகைப்படம்

Published: 

21 Mar 2025 08:50 AM

தற்போதைய சூழலில் அனைவரும் ஸ்மார்ட்போன்களை (Smartphone) பயன்படுத்த தொடங்கிவிட்டனர். பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் தங்களது அன்றாட வாழ்வில் ஸ்மார்ட்போன்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். ஸ்மார்ட்போன் பரவலாக பயன்படுத்தப்பட்டாலும் அதனை முறையாக பயன்படுத்துவது மற்றும் பராமரிப்பது எப்படி என பலரும் தெரிந்துக்கொள்ளாமல் உள்ளனர்.

அந்த வகையில் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் பலரும் அதனை எப்படி முறையாக சார்ஜ் (Charge) செய்ய வேண்டும்  என தெரியாமல் உள்ளனர். ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்வதற்கு சில முறைகள் உள்ளன. அவற்றை பின்பற்றாமல் சார்ஜ் செய்யும் பட்சத்தில் ஸ்மார்ட்போனின் பேட்டரி திறன் பாதிக்கப்படுவதுடன் பல பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த நிலையில், ஸ்மார்ட்போன்களை எவ்வாறு முறையாக சார்ஜ் செய்ய வேண்டும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஸ்மார்ட்போனை முறையாக சார்ஜ் செய்வது எப்படி?

ஸ்மார்ட்போன்களை சார்ஜ் செய்யும்போது இந்த மூன்று தவறுகளை செய்யவே கூடாது என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

20 சதவீதத்திற்கும் கீழ் குறையாமல் இருப்பது

பெரும்பாலான மக்கள் ஸ்மார்ட்போனை பயன்படுத்தும்போது அது 10 சதவீதம் முதல் 1 சதவீதம் வரும் வரை குறையும் அளவுக்கு பயன்படுத்துகின்றனர். ஆனால், அவ்வாறு பயன்படுத்துவது சிறப்பானது அல்ல என வல்லுநர்கள் கூறுகின்றனர். ஸ்மார்ட்போன்களை பொருத்தவரை 20 சதவீதத்திற்கும் கீழ் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஸ்மார்ட்போனின் சார்ஜ் 20 சதவீதத்திற்கும் கீழ் குறைவதற்கு முன்பாகவே சார்ஜ் செய்வது ஸ்மார்ட்போனின் பேட்டரியை பராமரிக்க உதவும்.

100 சதவீதம் சார்ஜ் செய்யாதீர்கள்

ஸ்மார்ட்போனின் சார்ஜ் 1 சதவீதம் வரை குறையும் வரை சிலர் ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதை போலவே சிலர் இந்த தவறையும் செய்கின்றனர். அதாவது, ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்யும்போது சிலர் 100 சதவீதம் வரை சார்ஜ் செய்கின்றனர். அவ்வாறு செய்வது பேட்டரியின் திறனை பாதிக்கும். எனவே ஸ்மார்ட்போனை 80 முதல் 90 சதவீதம் வரை சார்ஜ் செய்வது சிறந்ததாக இருக்கும்.

ஸ்மார்ட்போன் சூடாகும் வரை சார்ஜ் செய்ய கூடாது

ஸ்மார்ட்போன்களை சார்ஜ் செய்யும்போது அது சூடாகமல் இருப்பது மிகவும் முக்கியம். பொதுவாக 72 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கும் குறைவான வெப்பத்தில் இருக்கும் பட்சத்தில் ஸ்மார்ட்போன்களின் பேட்டரிகள் பாதுகாப்பாக இருக்கும். அதற்கும் மேல் அதிக வெப்பத்தை எதிர்கொண்டால் பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக ஸ்மார்ட்போனின் வெப்பம் 90 டிகிரி செல்சியஸை தாண்டும் பட்சத்தில் அது வெடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே, ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்யும்போது அது அதிக வெப்பம் அடையாமல் பார்த்துக்கொள்வது மிகவும் முக்கியம் ஆகும்.

மேற்குறிப்பிட்டுள்ள இந்த முறைகளை பின்பற்றி சார்ஜ் செய்யும் பட்சத்தில் உங்கள் ஸ்மார்ட்போன் மற்றும் அதன் பேட்டரி மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.