ஐபோனில் பேட்டரியின் ஆயுளை அதிகரிக்க ஏஐ அறிமுகம் – அப்படி என்ன ஸ்பெஷல்?
AI powers smarter batteries : ஆப்பிள் நிறுவனம், புதிய iOS 19 அப்டேட்டில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட பேட்டரி மேனேஜ்மென்ட் அம்சத்தை அறிமுகப்படுத்தவுள்ளது. இது பயனர் பழக்கங்களை ஆராய்ந்து, தேவையில்லாத நேரங்களில் பேட்டரி பயன்பாட்டை குறைத்து, அதன் ஆயுளை நீட்டிக்க உதவுகிறது.

செயற்கை நுண்ணறிவின் (AI) தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் வியப்பூட்டும் வளர்ச்சியை கண்டு வருகிறது. தற்போது மருத்துவம் முதல் வணிகம் வரை மனித வாழ்கையை எளிமைப்படுத்தும் வழிகளில் , ஏஐ செயல்பட்டு வருகிறது. இப்போது, அதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஆப்பிள் (Apple) நிறுவனம் ஐபோன்களில் (iPhone) பேட்டரி ஆயுளை அதிகரிக்க ஒரு புதிய முயற்சியை எடுத்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் புதிய iOS 19 அப்டேட்டில், செயற்கை நுண்ணறிவை (AI) அடிப்படையாகக் கொண்ட புதிய பேட்டரி மேனேஜ்மெண்ட் அம்சம் அறிமுகமாக உள்ளது. இந்த தொழில்நுட்பம், பயனர்களின் போன் பயன்படுத்தும் முறையை புரிந்துகொண்டு, ஒவ்வொரு ஐபோனும் தானாகவே பேட்டரி பவரை சேமிக்கும் வகையில் செயல்படும் என்று கூறப்படுகிறது.
ஏஐ உதவியுடன் பேட்டரி மேனேஜ்மென்ட்
ஆப்பிள் இன்ஸைடர் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த புதிய அம்சத்தில் இருக்கும் முக்கிய விஷயம் பயனர்களால் ஐபோன் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை நேரடியாக ஆராயும் திறன். உதாரணமாக, எந்த ஆப்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன? எப்போது பயனர்கள் அதிகமாக சார்ஜ் செய்கிறார்கள்? எந்த ஆப்கள் அதிக பவரை எடுத்துக்கொள்கின்ற என்ன என்பதை அல்கெரிதம் புரிந்து கொண்டு செயல்படுகிறது.
ஏஐ தான் சேகரித்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, ஐபோனின் செயல்பாடுகளை தானே கட்டுப்படுத்தி தேவையில்லாமல் பேட்டரி பவர் குறைவதை தடுக்கும். குறிப்பாக ஒருவர் ஒரு சில ஆப்களை குறிப்பிட்ட நேரம் மட்டுமே பயன்படுத்துகிறார் என்பதை கண்டறிந்து மற்ற நேரங்களில் அந்த ஆப்களின் பின்புல செயல்பாடுகள் குறைக்கப்படும்.
இது, கூகுள் ஆண்ட்ராய்ட் போன்களில் உள்ள Adaptive Battery அம்சத்துக்கு இணையானது. ஆனால், ஆப்பிள் தனது ஐபோனில் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில், இந்த ஏஐ செயல்பாடுகளை போனிலேயே செயல்படுகிறது.
சார்ஜ் எப்போது முடியும் தெரியுமா?
iOS 19-இல் லாக் ஸ்கிரீனில் எஸ்டிமேட்டட் சார்ஜிங் டைம் என்பதற்கான நோட்டிஃபிகேஷன் இருக்கும். இதன் மூலம் பயனர்கள், தங்களது போன் முழு சார்ஜ் அடைய எவ்வளவு நேரம் தேவை என்பதைக் தெளிவாக அறிந்து கொள்ள முடியும். இது battery health reporting, optimised battery charging போன்ற iOS-இன் முந்தைய அம்சங்களின் தொடர்ச்சியாகும்.
புதிய சாதனங்களுக்கு சிறப்பாக உருவாக்கப்பட்ட அம்சம்
இந்த ஏஐ அம்சம் iOS 19-ஐ சப்போர்ட் செய்யும் அனைத்து ஐபோன்களுக்கும் கிடைக்கும் எனினும், இது புதிதாக அறிமுகமாகவிருக்கும் iPhone 17 Air மாதிரிக்கு சிறப்பாக வடிவமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. புதிய ஐபோன் மெல்லிய வடிவமைப்புடன் வரும் என்பதால், பேட்டரி அளவு குறைய வாய்ப்பு உள்ளது. இதனை சமாளிக்கவே, இந்த ஏஐ சிஸ்டம் பேட்டரி பெர்ஃபார்மன்ஸை மேம்படுத்தும் வகையில் செயல்படும்.
WWDC 2025: அதிகாரப்பூர்வ அறிமுகம் விரைவில்!
இந்த புதிய AI battery management அம்சம், 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெறும் உலக டெவலப்பர்ஸ் கான்ஃபரன்ஸ்நிகழ்வில் iOS 19 உடன் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கம்போல, அதன் பின் டெவலப்பர் பீட்டா மற்றும் பப்ளிக் பீட்டா டெஸ்டிங் நடைபெற்று, செப்டம்பர் மாதத்தில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.